தென் கொரியா: ராணுவ சேவையை மறுப்போருக்கு இனி சிறைத் தண்டனை இருக்காது

சியோல்:

ராணுவத்தில் சேர மறுப்பவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் நடைமுறை தென்கொரியாவில் உள்ளது. தற்போது இந்த நடைமுறையை மாற்றும் நேரம் நெருங்கவிட்டது.

18 முதல் 35 வயது வரையிலா அனைத்து தென் கொரியா குடிமகன்கள் கட்டாயம் ராணுவ சேவையில் ஈடுபட வேண்டும். மறுப்பவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராணுவத்தில் சேர்ந்து ஆயுதம் ஏந்த மறுக்கும் குடிமகன்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவில்,‘‘இப் பிரச்னைக்கு தீர்வு காண அரசு நீண்ட காலம் எடுத்துக் கொள்ள முடியாது. நாட்டின் ராணுவ சேவை சட்டம் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது. ராணுவ சாராத வாய்ப்புகள் அதில் இடம்பெறவில்லை. அதனால் 2019ம் ஆண்டுக்குள் இச்சட்டத்தை மாற்றி அமைக்க அரசும், நாடாளுமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ராணுவ சேவை மறுக்கும் நூற்றுக்கணக்கானோர் தென் கொரியா சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும் ஜெகோவா சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் மத நம்பிக்கை அடிப்படையில் ராணுவ சேவையை மறுத்து வருகின்றனர். தற்போது 230 பேர் சிறையில் உள்ளனர். இவர்களுக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை ஆன பின்னர் வாழ்நாள் முழவதும் அவர்களிடம் பாகுபாடு காட்டப்படுகிறது.

ராணுவ சேவை மறுப்பது குற்றம் கிடையாது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும். ராணுவ சேவை மறுப்பவர்கள் அனைவருக்கும் குற்ற பின்னணி பதிவேடுகள் உள்ளது. அதனால் சிறையில் உள்ள அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்து வருகிறது.