வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா அதிபர் விருப்பம்!!

பெர்லின்:

வட கொரியா அதிபர் கிம் ஜோங் வுன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் நடந்த ஜி20 மாநாட்டில் அவர் பேசுகையில் இதை தெரிவித்தார். ‘‘போர் காரணமாக பிரிந்த குடும்பங்களை இணைப்பது, விரோதத்தை நிறுத்துவது, எல்லை பிரச்னை, 2018ம் ஆண்டு தென்கொரியாவில் நடக்கும் ஒலிம்பிக் ஒத்துழைப்பு கோருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் இருப்பதாக’’ அவர் பேசினார்.

‘‘பேச்சுவார்த்தை மூலம வடகொரியாவின் ஆயுத குவிப்பு திட்டத்துக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இவரது கோரிக்கையை வட கொரியாக ஏற்குமா? என்பது தெரியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளுடன் இணைந்து தென்கொரியா செயல்படுவதால் வட கொரியா இது தொடர்பான தெளிவான விபரங்களை வெளியிடவில்லை.

கடந்த மே மாதம் பதவியேற்ற மூன் வட கொரியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இவரது முயற்சிய சிறிய அளவிலான முன்னேற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வடகொரியா தொடர்ந்து ஐசிபிஎம் உள்ளிட்ட நவீன மேம்படுத்தப்பட்ட ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது.

‘‘இந்த பேச்சுவார்த்கைக்கான வாய்ப்பை வட கொரியா ஏற்றுக் கொள்ளுமா அல்லது எட்டி உதைக்குமா என்பது தெரியவில்லை. இதன் பின்னர் எந்த விதமான கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதற்கு வட கொரியா தான் பொறுப்பாகும்’’ என்று மூன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் ஐசிபிஎம் சோதனை வெற்றியின் மூலம் வாஷிங்டன், சியோல், டோக்கியோவில் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் எந்த பகுதியில் வேண் டுமானாலும் அணு ஆயுத தாக்குதல் நடக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.