பெங்களூரு

ர்நாடக மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையொட்டி தென்மேற்கு  ரயில்வே அதிக ரயில்களை இயக்குகிறது.

கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் அம்மாநிலம் முழுவதும் பேருந்து சேவை அளித்து வருகிறது.  இங்குப் பணி புரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வெகுநாட்களாக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால் அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையொட்டி போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தற்போது காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.   இதனால் கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்துள்ளது.  நெரிசல் மிகுந்த பெங்களூரு சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

தற்போது கர்நாடக வருடப் பிறப்பான உகாதி பண்டிகை நடைபெற உள்ளதால் மக்கள் இந்த வேலை நிறுத்தத்தால் மிகவும் துயருற்றுள்ளனர்.  மக்கள் குறை தீர்க்க போக்குவரத்துக் கழகம் பல தனியார் பேருந்துகளுக்குத் தற்காலிக அனுமதி அளித்தும் நிலைமை சீராகாமல் உள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு ரயில்வே இன்று முதல் 14 ஆம் தேதி வரை கூடுதல் ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.  தற்போது நடைபெற்று வரும் கர்நாடக சாலை போக்குவரத்துக் கழக ஊழியர் வேலை நிறுத்தம் மற்றும் உகாதி பண்டிகையை முன்னிட்டு இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.