தென்னக ரெயில்வே : 70 ரெயில்களில் சுத்தம் செய்யும் பணிகள் ரத்து

 

சென்னை

நிதிப்பற்றாக்குறை காரணமாக 70 ரெயில்களில் சுத்தம் செய்யும் பணியை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

தெற்கு ரெயில்வே உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் ஓடும் ரெயிலில் சுத்தம் செய்யும் வசதி உள்ளிட்டவை சில வருடங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.  இந்த சேவை ஒப்பந்த தாரர்களுக்கு அளிக்கப்பட்டது.  ஆனால் தெற்கு ரெயில்வே நிர்வாகத்தால் இந்த ஒப்பந்த தாரருக்கான தொகையைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே அதிகம் லாபம் ஈட்டாத நிலையில் உள்ளதால் இந்த செலவை சமாளிக்க இயலவில்லை.   அரசு அளிக்கும் நிதி உதவி இந்த பணிக்கு போதுமானதாக இல்லை..  இதையொட்டி முதல் கட்டமாக  70 ரெயில்களில் ஓடும் ரெயிலில் சுத்தம் செய்யும் பணியை வரும் செப்டம்பர் 1 முதல் ரத்து செய்ய உத்தேசித்துள்ளது.

இதில் சென்னை கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை கோவை இண்டர் சிடி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 15 ரெயில்கள் அடங்கி உள்ளன.  சேலம் பிரிவில் இயங்கும் அனைத்து ரெயில்களுக்கும் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

டில்லி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரெயில்களுக்கு இந்த சேவை ரத்து செய்யப்படவில்லை.  பொதுவாக ஒரு முழு நாளைக்கு மேல் பயணம் செய்யும் ரெயில்களில் இந்த சேவையை ரத்து செய்யப் போவதில்லை என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அத்துடன் இதனால் செலவுகள் வெகுவாக குறையுமானால் அடுத்ததாக பயோ கழிவறைச் சுத்தம், பூச்சி மருந்து அடித்தல். பயணிகளுக்குப் படுக்கை விரிப்புக்கள் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளையும் படிப்படியாக நிறுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.