மின்சார ரெயில்களில் தானியங்கி கதவு அமைக்க சாத்தியமில்லை : தென்னக ரெயில்வே

சென்னை

திக செலவு ஏற்படும் என்பதால் மின்சார ரெயில்களில் தானியங்கி கதவுகள் அமைப்பது சாத்தியமில்லை என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சென்னை பரங்கிமலை அருகே மின்சார ரெயிலில் பயணம் செய்த ஆறு பேர் கீழே விழுந்து மரணம் அடைந்தனர். கூட்ட நெரிசலால் படிகளில் தொங்கிக் கொண்டு சென்ற போது இவர்கள் விழ்ந்துள்ளனர். இந்த விபத்தை ஒட்டி மெட்ரோ ரெயிலில் உள்ளது போல் மின்சார ரெயிலிலும் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும் என வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு அவ்வாறு செய்ய முடியுமா என தென்னக ரெயில்வேயிடம் கேள்வி எழுப்பி இருந்த்து. அந்த கேள்விக்கு இன்று தென்னக ரெயில்வே பதில் அளித்துள்ளது. அந்த பதிலில், “சென்னையில் ஓடும் மின்சார ரெயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த ரூ.3500 கோடி செலவாகும். அதனால் தற்போதைக்கு அவ்வாறு அமைப்பது சாத்தியமில்லை.

இனி புதிதாக செய்யப்படும் பெட்டிகளில் தானியங்கி கதவுகள் பொருத்தலாம். ஆனால் அத்தகைய பெட்டிகளில் காற்றோட்டம் இருக்காது என்பதால் குளிர்சாதன வசதி செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால் ரெயில் கட்டணம் கடுமையாக அதிகரிக்கும். அதுவும் தற்போதைய நிலையில் சாத்தியமில்லை” என தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற அமர்வு வழக்கின் விசாரணையை நவமர் மாதம் 12 ஆம் தேதி ஒத்தி வைத்தது.