சென்னை

தென்னக ரெயில்வே நிதி பற்றாக்குறையால் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த  சேவைகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக ரெயில்களை இயக்கும் பிரிவில் தென்னக ரெயில்வே இடம் பெற்றுள்ளது. இந்த ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்குத் தேவையான பல சேவைகளை தென்னக ரெயில்வே செய்து வருகிறது. இந்த சேவைகளில் போர்வை, படுக்கை உறை தலையணைகள் அளித்தல், பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல பணிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் தனியாரிடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு அதன் மூலம் நடந்து வருகின்றன.

இவ்வாறு ஒப்பந்ததாரருக்குக் கட்டணமாக வருடத்துக்கு ரூ.194 கோடி வரை செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் இந்த வருட நிதிநிலை அறிக்கையில் ரூ. 108 கோடி  மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் மார்ச் 31 வரை செலுத்த வேண்டிய கட்டணத் தொகை ரு. 22 கோடி ஆகும். அதன் பிறகு அளிக்க வேண்டிய தொகை ரூ.40 கோடியும் நிலுவையில் உள்ளது. ஒதுக்கீட்டு செய்யப்பட்டதில் ரூ.39 கோடி ஏற்கனவே செலவாகி உள்ள நிலையில் மொத்தம் செலுத்த வேண்டிய ரூ.155 கோடியில் தற்போது ரூ.86 கோடி பற்றாக்குறையில் உள்ளது.

இது குறித்து தென்னக ரெயில்வே பொது மேலாளர்,”தற்போது உள்ள நிதிநிலைப்ப்டி இந்த தொகை ஆகஸ்ட் – செப்டம்பர் மாதம் வரையிலான கட்டணம்  செலுத்த மட்டுமே போதுமானதா உள்ளது. எனவே நாங்கள் விரைவில் இண்டு ஓடும் 110 ரெயில்களிலும் பயணிகளுக்கு அளிக்கும் சேவைகளை நிறுத்தும் நிலையில் இருக்கிறோம். அதை ஒட்டி பூச்சி மருந்து அடித்தல் உள்ளிட்ட பல ஒப்பந்த தாரருக்கு ஒப்பந்தங்களை நிறுத்திக் கொள்ள நோட்டிஸ் அளித்துள்ளோம். ஆயினும் பயணிகளுக்கு மிகவும் தேவையான சேவைகளைச் செய்ய நிதி உத்வி தேவைப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முதலில் ரெயில்களில் சுகாதாரம் இன்மை, சுத்தம் செய்யாத கழிப்பறைகள் உள்ளிட்ட பல புகார்கள் எழுந்தன. ஆனால் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு அந்த புகார்கள்  வெகுவாக குறைந்துள்ளன. இந்த ஒப்பந்த தாரர்களின் ஊழியர்கள் ரெயிலில் பயணம் செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதே இவற்றுக்குக் காரணம் ஆகும். எனவே இந்த சேவைகளைத் தொடர ஒப்பந்ததாரர்களுக்குப் பழைய பாக்கியை உடனடியாக தர வேண்டிய நிலையில் தென்னக ரெயில்வே உள்ளது. அதையொட்டி மத்திய அரசிடம் ரூ.40 கோடி நிதி உதவியைத் தென்னக ரெயில்வே கோரி உள்ளது.

மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் இது போல் நிதி நிலை பற்றாக்குறை ஏற்படுவது இதுவே முதல் முறை எனவும் அதனால் மத்திய அரசிடம் தென்னக ரெயில்வே நிதி உதவி கோரி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் இது வரை அரசிடம் இருந்து  இந்த கோரிக்கை குறித்து எந்த ஒரு பதிலும் வராததால் இந்த சேவைகளை நிறுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.