தென்னக ரெயில்வே டிக்கட் பரிசோதகர்களுக்கு டேப்லட் கணினி

சென்னை

தென்னக ரெயில்வே டிக்கட் பரிசோதகர்களுக்கு டேப்லட் கணினி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரெயில்வே காகிதமில்லா சேவைக்கு முதலிடம் அளித்து வருகிறது.   அதை ஒட்டி ரெயில் பெட்டிகளில் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.   அத்துடன் ஆன்லைன் மூலம் டிக்கட் வசதிகளால் மொபைல் அல்லது கணினி மூலம் டிக்கட்டுகளை பயணிகள் எடுத்துச் சென்று வருகின்றனர்.

அடுத்த கட்டமாக தென்னக ரெயில்வே மேலும் ஒரு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.   தென்னக ரெயில்வே டிக்கட் பரிசோதகர்களுக்கு டேப்லட் கணினிகள் வன்ழங்கப்பட்டுள்ளன.   இதன் மூலம் டிக்கட் பரிசோதகர்கள் காகித முன்பதிவு விவரங்களை எடுத்துச் செல்வதை நிறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை செண்டிரல் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரீஸ்தா இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளர்.   இந்த வசதி தற்போது கோவை மற்றும் மைசூர் செல்லும் சதாப்தி ரெயில்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   விரைவில் அது அனைத்து ரெயில்களிலும் விரிவாக்கப்பட உள்ளது.

திடீரென ரத்து செய்யும் பயணிகள் இந்த திட்டத்தின் மூலம் டிக்கட் பணத்தை அன்றைய தினமே திரும்பப் பெற முடியும் என பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.