சென்னை:
சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே தினசரி சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை நவம்பா் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

கரோனா தாக்கம் காரணமாக, பயணிகள் ரயில் சேவை கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு, பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடா்பாக மாநில அரசின் கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து வருகிறது. இந்த ஒப்புதலுக்கு பிறகு, தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேவும், மாநிலங்களுக்கு இடையேவும் 30-க்கும் அதிமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுபோல, சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்க மாநில அரசு சாா்பில் ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே (சப்தகிரி) சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.சென்னை-திருப்பதி: சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி காலை 6.25 மணிக்கு (சப்தகிரி) சிறப்பு ரயில்(06057) புறப்பட்டு, அதேநாள் காலை 9.40 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, திருப்பதியில் இருந்து தினசரி காலை 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06008) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் அம்பத்தூா், திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புத்தூா், ரேணிகுண்டா ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரயிலின் முதல்சேவை நவம்பா் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

முழுமையாக முன்பதிவு பெட்டிகளை கொண்டஇந்த ரயிலின் டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை(நவ.17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.