டில்லி:

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்மாநிலங்களில் இந்த பிரச்னை வெடித்தால் அது தேசத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பைனான்சியல் எக்ஸ்பிரஸில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் விபரம்….

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையம் அமைக்க இந்திய அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளித்துள்ளது. இந்த ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வரி வருவாயை பிரித்து கொள்ளுதல், ஒதுக்கீடு செய்தல், பங்கு விகிதம் ஆகியவற்றை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வது கடமையாகும். இது போல் பல கடமைகள் உள்ளது. எனினும் அவற்றை இந்த கட்டுரையில் தெரிவித்து சர் ச்சையை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது.

வரியை பிரித்துக் கொள்வதில் மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுபட்டுள்ளன. வரி வருவாயில் இருந்து அதிக பங்களிப்பு தேவை என்று ஒவ்வொரு நிதி ஆணையத்துக்கும் மாநில அரசுகள் கோரிக்கை வைக்கும். கடந்த 14வது நிதி ஆணையத்தில் மாநில அரசுகளின் பங்கு 42 சதவீதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான பங்குகளை ஒதுக்கீடு செய்வதில் தான் தற்போது பிரச்னை எழுந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலமும் பெரிய அளவிலான பங்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. எனினும் 100 சதவீதமான 42 சதவீதத்தை இது மிஞ்சிவிடக் கூடாது. மாநிலங்களுக்கு உரிய பங்கை வழங்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. பங்குகளை ஒதுக்கீடு செய்வதற்கான நிபந்தனைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறது. இதில் ஒரு மாநிலத்தின் பங்கு சிறிய அளவில் குறைந்தாலும் அந்த மாநிலத்துக்கு மகிழ்ச்சியை அளிக்காது. ஒவ்வொரு நிதி ஆணையமும் விரும்பப்படாத இலக்காக தான் உள்ளது. 15வது நிதி ஆணையம் கடந்த நவம்பரில் ஏற்படுத்தப்பட்டது.

இதில் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும், கடந்த காலங்களில் இருந்து இருந்து 2 மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் முதலாவது, மாநிலங்களின் செயல்பாடு சார்ந்த ஊக்கத் தொகை. இதில் மக்கள் தொகை வளர்ச்சியை மாற்றி அமைக்கும் விகிதாச்சாரத்தை நோக்கிய வளர்ச்சி மற்றும் முயற்சி செய்தல், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துதல், விளம்பர செலவுகளை குறைத்தல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, நிதி ஆணையம் 1971வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிலாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த இரு மாற்றங்களும் பெரிய அளவிலான மாற்றங்களாகும். இந்த மாற்றங்கள் மத்திய மாநில அரசுகளின் உறவை வெகுவாக பாதிக்கும்.

அரசியலமைப்பில் வரி விதிப்புக்கு மத்திய அரசுக்கு அதிகளவில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநில அரசுகளுக்கு அதிக பொறுப்புகளை கொடுத்துள்ளது. அதனால் வரி வருவாயை பிரித்துக் கொள்வதில் வெளிப்படையான நடைமுறை தேவை. மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எப்படி அதிக அதிகாரம் உள்ளதோ? அதேபோல் மாநில சட்டமன்ற பட்ஜெட்டிற்கும் அதிக அதிகாரம் உள்ளது.

தனது விருப்பத்தை திணித்தல் அல்லது மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் மீது திணித்தல் போன்றவை நிதி ஆணையத்தின் பணி கிடையாது. வரி மூலமான வருவாயில் தனது வெளிப்படையான பங்கை கேட்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது. சட்டமன்ற முடிவுகளுக்கு ஏற்ப தனித்து செயல்படும் வகையில் தனித்து விட்டுவிட வேண்டும் என்று கோரவும் உரிமை உள்ளது.

இரண்டாவது மாற்றம் என்பது பெரியளவில் சர்ச்சைக்குறியதாகும். 1971ம் ஆண்டு மக்கள் தொகை கண க்கெடுப்புக்கு பதிலாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்த வேண்டும் என்று நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 1971ம் ஆண்டின் அடிப்படையில் உள்ள 25 முதல் 17.5 சதவீதம் வரையிலான முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது. மாறாக 2011ம் ஆண்டின் அடிப்படையில் 10 சதவீதம் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இது 1971 மற்றும் 2011ம் ஆண்டுகளின் இடையில் மக்கள் தொகையை நிறைநிறுத்தும் வகையில் செயல்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகும். கணக்கெடுப்பு ஆண்டை மாற்றியது அநீதியாகும். இது மக்கள் தொகையை நிலைநிறுத்த தவறிய மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது. சிறந்த நிர்வாகம் மற்றும் சிறந்த செயல்பாடு என்ற நிலையில் உள்ள மாநிலங்கள் ஏற்கனவே தங்களது பங்கில் பெரியளவில் இழப்புகளை சந்தித்து வருவது புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சிறந்த நிர்வாகம் மற்றும் சிறந்த செயல்பாடுகளை வெளிக் கொண்டுவருதல் அடிப்படையில் தென் மாநிலங்களுக்கு 6.338 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இந்திய மக்கள் தொகை வீழ்ச்சியை இம்மாநிலங்கள் பாதுகாத்துள்ளது. 1971ம் ஆண்டின் படி இந்த மாநிலங்களின் மக்கள் தொகை பங்களிப்பு 24.7 சதவீதம். 2011ல் இது 20.7 சதவீதமாக குறைந்துள்ளது.

இதர காரணிகளில் நிலையான தன்மை இருந்தாலும், மக்கள் தொகை விஷயத்தை 15வது நிதி ஆணையம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். ஏழ்மை மாநிலங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதே சமயம் சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ள மாநிலங்களின் உரிமை புறம் தள்ளிவிடக் கூடாது. மத்திய அரசு தீயை கொளுத்தி போட்டுள்ளது. இது தென்னிந்தியாவில் கொளுந்துவிட்டு எரிந்து கூட்டமைப்பு வெடிப்பதற்கு முன்பு தடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நன்றி: பைனான்சியல் எக்ஸ்பிரஸ்