எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கொரோனா சோதனை முடிவு ‘நெகடிவ்’! எஸ்.பி.பி.சரண் மகிழ்ச்சி தகவல்

சென்னை:  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று குணமாகி அவரது சோதனை முடிவு நெகடிவ் என வந்திருப்பதாக, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அவர் குணமடை வேண்டிய திரையுலக பிரமுகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும், பிரார்த்தனை செய்தனர்.

இதையடுத்து, அவரது உடல்நிலை கிரிட்டிக்கலான நிலையிலும்,  சீராக இருந்து வருவதாகவும், வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அமெரிக்கா, யுகோ நாடுகளைச் சேர்ந்த  பல்வேறு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன்  தொற்று நோய்க்கான தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கொரோனா சோதனை முடிவு ‘நெகடிவ்’ என வந்திருப்பதாக  எஸ்.பி.பி.சரண் மகிழ்ச்சி தகவல் வெளியிட்டுஉள்ளார். இதனால், அவர் விரைவில் குணமடைந்து எழுந்து வருவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அன்புள்ள ஊடக நண்பர்களே, எனது தந்தை குணமடைய, உங்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. என் தந்தை நன்றாக இருக்கிறார் மற்றும் நிலையானவர் மற்றும் அவரது கொரோனா சோதனை NEGATIVE ஆகி விட்டது என்று கூறியுள்ளார்.