எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ் இரங்கல்…

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள்  இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாடும் நிலா திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை இழந்து மிகுந்த துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஐந்து தலைமுறைகள் தாண்டி, அரைநூற்றாண்டிற்கும் மேலாக கோடிக்கணக்கான நெஞ்சங்களை தனது காந்தக் குரலால் கட்டிபோட்ட பன்முக ஆளுமை திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு திரைத்துறைக்கும், இசையுலகிற்கும் ஈடில்லா பேரிழப்பு!  என தெரிவித்து உள்ளார்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. SPBalasubramaniam அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.