எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்…

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இந்திய  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு,  பிரதமர் மோடி உள்பட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  இந்திய இசையுலகம்  அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் அவரது எண்ணற்ற ரசிகர்களால் ‘பாடும் நிலா’ அல்லது ‘சிங்கிங் மூன்’ என்று அழைக்கப்பட்டவர்.  இவருக்கு பத்ம பூஷண் மற்றும் பல தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை  குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இசை உலகில் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை அவர் விட்டுச் சென்றிருக்கிறார் எஸ்.பிபி. அவரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எஸ்.பிபியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது. அவரை இழந்து வாடும்அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்து உள்ளார்.