இளையராஜா வக்கீல் நோட்டீஸ்! எஸ்.பி.பி. வருத்த அறிக்கை!

னி இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடமாட்டேன்!: எஸ்.பி.பி அறிவிப்பு

“இனி இளையாராஜா இசையில் உருவான திரைப்பட பாடல்களை மேடைகளில் பாடமாட்டேன்” என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம், “உலகம் முழுவதும் எஸ்.பி.பி. 50” என்கிற பெயரில் தொடர் இசை நிகழ்ச்சிகளை  உலகின் பல நாடுகளில் நடத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவில் இந்த  இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. . மேலும் பல நாடுகளிலும் இந்த இசை நிகழ்ச்சி நடக்க  இருக்கிறது.

இதற்கிடையே, தான் இசையமைத்த பாடல்களை தன் அனுமதி இன்றி மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பிக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மீறினால் சட்ட ரீதியான நடவடிககை எடுக்கப்படும் என்றும், பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இனி இளையாரா இசையமைத்த பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் தான் பாடப்போவதில்லை என்று எஸ்.பி.பி. அறிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர், தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“அமெரிக்காவிலிருந்து எல்லோருக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டு தினங்களுக்கு முன் இசைஞானி இளையராஜா எனக்கும், திருமதி சித்ராவுக்கும், என் மகன் சரணுக்கும் மற்றும் இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவரது இசையமைப்பில் வெளிவந்த பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் பாடக்கூடாது, அப்படிப் பாடினால் காப்பிரைட் சட்டப்படி குற்றம். அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பெரும்தொகை அபராதமாக வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு இந்தச் சட்டங்கள் குறித்து எதுவும் தெரியாது. SPB50 என்ற இசைப்பயணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் டொராண்டோ நகரில் தொடங்கினோம். அதன் பிறகு ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் நாடுகளில் மட்டும் அல்லாது இந்தியாவின் பல இடங்களிலும் இசை நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போதெல்லாம் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாத இளையராஜா இப்போதுமட்டும் ஏன் இப்படி சொல்கிறார் என புரியவில்லை.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி எனக்குச் சட்டவிவகாரங்கள் எதுவும் தெரியாது. நான் இனி சட்டத்தை மதித்து நடந்துகொள்கிறேன். இன்றிலிருந்து இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களை மேடைகளில் பாடப்போவதில்லை என கூறிக் கொள்கிறேன்.

கடவுளின் கிருபையால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை நாங்கள் பாடவிருக்கிறோம். எப்போதும்போல் இசைநிகழ்ச்சி தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பாக நீங்கள் யாரையும் தவறாக கருதி விடக்கூடாது. கடவுளின் விருப்பம் அதுவென்றால் அதற்கு நான் அடிபணிகிறேன்” –  இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பதிவிட்டுள்ளார்.