இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது தனது தந்தையின் உடல்நலம் குறித்து எஸ்.பி.சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

“அப்பா நிலையாக இருக்கிறார் என்ற வார்த்தையை மருத்துவமனை இன்று பயன்படுத்தியுள்ளது. நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் குழு கூறியிருந்தது. மருத்துவமனையின் இன்றைய அறிக்கை அவர் நிலையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

கவலைக்கிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. ஆனாலும் இதற்கு அவர் முழுமையாகக் குணமாகிவிட்டார் என்று அர்த்தமல்ல. இதற்கு அர்த்தம், அவர் உடல்நிலையில் இப்போதைக்குச் சிக்கல்கள் இல்லை, உடலின் அடிப்படை செயல்பாடுகள் ஒழுங்காக உள்ளன.

முன்னரே நாங்கள் குறிப்பிட்டது போல மருத்துவக் குழு மீதும், எங்களுக்காக வரும் பிரார்த்தனைகள் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் நிலையாக இருக்கிறார் என்று இன்று சொல்லப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி.

அப்பாவுக்காகவும், குடும்பத்துக்காகவும் பிரார்த்தனைகள், அன்பு, அக்கறை காட்டும் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன். மீண்டு வரும் நீண்ட பயணம் உள்ளது. ஆனால் கண்டிப்பாக மீண்டு வரும் பயணம். அனைவருக்கும் மீண்டும் நன்றி”

இவ்வாறு எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.