பாதிக்கப்பட்ட பெண் குறித்து விமர்சனம்: கோவை எஸ் பி பாண்டியராஜன் மீது உச்சநீதி மன்றத்தில் வழக்கு

கோவை:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவைமீறி, புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட கோவை மாவட்ட (ஊரகம்) கண்காணிப் பாளர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், புகார் கொடுத்த பெண்ணின் பெயர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களை ஊடகங்களில் வெளியிட்டார் கோவை எஸ்.பி. பாண்டிய ராஜன்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெயரோ, புகைப்படமோ  வெளியிடக்கூடாது என உச்சநீதி மன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கு  ஆதரவாக செயல்பட்டு வரும் பாண்டியராஜன், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டது நீதிமன்ற அவதிப்பு என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜராஜன், வில்லியம் வினோத்குமார் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் ஹரிஷ் குமார் உச்ச நீதிமன்றத்தில் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பொள்ளாச்சி பாலி யல் கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் அடையாளத்தை தமிழக அரசு வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் , அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த விவகாரத் தில் சுதந்திரமான நேர்மையான பாரபட்சமில்லாத விசாரணை நடத்தவும் அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை கண்காணிப்பாளர் பாண்டியராஜன், ஏற்கனவே டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்களிடம் வீரத்தை காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.