ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் வேலுமணி வழக்கு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை:

மிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தெரிவித்த அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் வேலுமணி ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  உள்ளாட்சி அமைப்புகள் பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர் களுக்கு டெண்டர்கள் ஒதுக்கி முறைகேடு செய்ததாகவும், அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.

இதை எதிர்த்தும்,  தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரியும் அமைச்சர் வேலுமணி மற்றும் சில ஒப்பந்ததாரர்கள் தரப்பில்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது அறப்போர் இயக்கம் கூறி உள்ள குற்றச்சாட்டு:

“மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மழைக் காலத்தை முன்னிட்டு, சாலைகளைச் சீரமைக்கும் பணிகளுக்காக  டெண்டர் விடப்பட்டதில் பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த டெண்டர்களில், குறிப்பிட்ட சில  நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்று உள்ளன. டெண்டர் பணிகள் அந்த நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன.

இந்த டெண்டர்களில்,  துருவாசலு, ஆர்.வி.எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் மற்றும் மேனகா அண்ட் கோ ஆகிய நிறுவனங்கள்,  இரண்டு டெண்டர்களில் போட்டியிடுகின்றன. முதல் டெண்டரை ஆர்.வி.எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் எடுக்கிறது. இரண்டாவது டெண்டரை துருவாசலு மற்றும் மேனகா அண்ட் கோ என்ற இரண்டு நிறுவனங்களும் ஒரே விலையை நிர்ணயித்த நிலையில், இறுதியில் இந்த இரண்டு நிறுவனங் களுக்கும் ஒரே டெண்டரை பிரித்துக் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல  சுப்பிரமணி, சசி கன்ஸ்ட்ரக்‌ஷன், டி.ஜே. ஆறுமுகம் ஆகிய மூன்று நிறுவனங்கள் முறையே மூன்று டெண்டர்களில் கலந்துகொண்டன. முதல் டெண்டரில் சுப்பிரமணி மற்றும் சசி கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவற்றில் முதல் டெண்டரை சுப்பிரமணி நிறுவனம் எடுக்கிறது. அதேபோன்று, மற்றொரு டெண்டரில் சசி மற்றும் டி.ஜே. ஆறுமுகம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் பங்கேற்று, அந்த டெண்டர் சசி கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  மற்றொரு டெண்டரை சுப்பிரமணி மற்றும் டி.ஜே.ஆறுமுகம் ஆகிய இரு நிறுவனங்களும் பங்கேற்று, அந்த டெண்டரை டி.ஜே.ஆறுமுகம் நிறுவனம் பெற்றுள்ளது.

அதாவது, அவர்களுக்குள் முன்கூட்டியே பேசிவைத்துக் கொண்டு, டெண்டர்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  குறிப்பிட்ட டெண்டர் தங்களுக்கு வேண்டும்’ என்ற நிலையில் உறுதிசெய்து கொண்டு, மூன்று நிறுவனங்கள் மட்டுமே எல்லா டெண்டர்களையும் எடுத்துக் கொண்டிருப்பது  தெரியவந்துள்ளது.

வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால் அந்த நிறுவனங்கள் விரும்பியவாறு அவர்களுக்குத் தேவையான டெண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் இன்னொரு டெண்டரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நிறுவனங்களே பங்கெடுத்து டெண்டரை இறுதி செய்திருக்கின்றன. `குருமூர்த்தி எண்டர்பிரைசஸ்’ என்னும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் குருமூர்த்தி. அவரின் மனைவி கௌரி உரிமையாளராக உள்ள ஜி.ஜி.இன்ஃராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்துடன், குருமூர்த்தியின் நிறுவனமும் இணைந்து 15 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்திருக்கிறார்கள்.  இந்த டெண்டர் விடப்பட்டதிலும் கூட்டுச் சதி நடந்திருக்கிறது.  விதிமுறைகளை மீறி அளிக்கப்பட்ட இதுபோல பல  டெண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், நன்றாக உள்ள சாலைகளைப் புதிதாகப் போடுவதற்காகவும் டெண்டர்கள் விடப்பட்டு அதிலும் ஊழல் நடந்துள்ளது.

ராமாராவ் என்பவருக்கு அளிக்கப்பட்ட டெண்டரின் அடிப்படையில் போடப்படவேண்டிய 195 சாலைகளில் 40 சாலைகளை நாங்கள் நேரடியாகக் களத்துக்குச் சென்று பார்த்தோம். அவற்றில் 10 சாலைகள் மட்டுமே மீண்டும் புதிதாகப் போடவேண்டிய நிலையில் இருக்கின்றன.  12 சாலைகள் மிகவும் நல்ல நிலையிலேயே உள்ளன. 18 சாலைகள், சற்றே புனரமைக்கப்பட்டாலே (பேட்ச் வொர்க்) போதுமான நிலையில் இருக்கின்றன.

ஒவ்வொரு டெண்டரிலும் சென்னை மாநகராட்சியின் விலைப் பட்டியலைவிட, 30 முதல் 50 சதவிகிதம் வரை அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் மேற்பகுதியைச் செப்பனிடுவதற்கான விலைப் பட்டியலும் சுமார் 100 சதவிகிதம் அளவு அதிகமாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சிமென்ட் சாலைக்கான `ரெடிமிக்ஸ்’ (ஜல்லி, மணல், சிமென்ட் கலக்கப்பட்டது) 55 சதவிகிதம் அளவு கூடுதல் விலைக்கு அளித்துள்ளனர்.  இந்த ரெடிமிக்ஸ் ஒரு யூனிட் 5300 ரூபாயாக இருக்கும் நிலையில், அதை  யூனிட் ஒன்றுக்கு 10,600 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

மேலும், மழைநீர் வடிகால் அமைப்பதற்கான ஒப்பந்தம் 440 கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரிலும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு மாதத்துக்குச் செய்ய வேண்டிய வேலையை 15 நாளில் முடித்துக் கொடுத்துள்ளனர்.

இப்படிப் பல்வேறு நிலைகளிலும் சென்னை மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான டெண்டர்கள் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

இந்த முறைகேடுகளில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  மற்றும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தலைமைப் பொறியாளர் புகழேந்தி ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக  தெரியவந்திருக்கிறது.

இந்த டெண்டர்கள் முறைகேடுகள் மூலம் அமைச்சர் வேலுமணிக்கு 120 கோடி ரூபாய்வரை லஞ்சப்பணம் கிடைத்திருப்பதாகவும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

You may have missed