கட்டிடங்களுக்கான பரப்பளவு குறியீடு 2 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை:

சென்னையில் வீடுகட்ட அனுமதிக்கப்படும் தளபரப்பளவு குறியீடு அதிகரிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் இன்று அரசாணை வெளியிடப் பட்டது.

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1.5  தள பரப்பளவு குறியீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பரப்பளவு குறியீட்டை 2.0  ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதில்,. 4 மாடிகளுக்கு மிகாத கட்டடங்களின் தளபரப்பளவு குறியீட்டை 1.5ல் இருந்து 2 ஆக உயர்த்தி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 1ந்தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை போன்ற நகரங்களில் வீடு கட்ட அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு 1.5ல் இருந்து 2.0 ஆக அதிகரிக்கப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை உடடினடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வீடு கட்டுவதற்கான செலவுகளை குறையும் என்றும், அதைத்தொடர்ந்து  வீடுகளின் விலை குறையும் என நம்பப்படுகிறது.

FSI என்றால் என்ன?

சென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு, எப்.எஸ்ஐ ( FSI) எனப்படும்  தள பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது.

சென்னையில், சிறப்பு கட்டிடங்கள் எனும் 4 மாடிகளுக்கு மிகாத கட்டிடங்களுக்கு, FSI 1.5 மடங் காக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 2.0 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதாவது மனை பரப்பை விட, ஒன்றரை மடங்கு பரப்பளவுக்கு கட்டிடங்களை அதில் கட்டிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு 1000 சதுர அடி நிலத்தில் 1500 சதுர அடி பரப்புக்கு மிகாமல் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளலாம்.

FSI அதிகரிப்பால் கிடைக்கும் நன்மைகள்: 

FSI இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் 1000 சதுரடி  மனைப்பரப்பில் 2000 சதுர அடி பரப்புக்கு வீடுகளை கட்டலாம்.

புதிய நிலத்தை வாங்காமலேயே பழைய மனையில் அதிக கட்டிடங்களை கட்ட முடியும் என்பதால் நிலத்திற்கு செலவிடப்படும் பெரும் தொகை குறையும்.

குறைந்த விலைக்கு வீடுகளை கட்டுமான நிறுவனத்தினர் விற்க முடியும். எனவே இதன் பலன் நேரடியாக மக்களை சென்றடையும் என நம்பப்படுகிறது.

இந்த அறிவிப்பு காரணமாக சென்னையில் இனி வழக்கத்தை விட உயரமான கட்டடங்களை கட்ட முடியும் இதன் காரணமாக  சென்னை நகரில், நெருக்கடி குறைய வாய்ப்பு உருவாகும்.