கொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு

மாட்ரிட்: கொரோனாவின் இரண்டாம் அலையை தடுக்கும் வகையில், ஸ்பெயின் நாட்டில் தேசிய நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேசமயம், அந்நாட்டின் கேனரி தீவுகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நெருக்கடி நிலைப் பிரகடனம், மே மாத துவக்கம் வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“நாம் கடந்துகொண்டிருக்கும் சூழல் மிகவும் தீவிரமானது” என்று ஒரு தொலைக்காட்சி உரையாடலில் தெரிவித்தார் ஸ்பெயின் பிரதமர்.

பல பிராந்தியங்களிலிருந்து ஊரடங்கு தொடர்பாக கோரிக்கை வந்ததன் அடிப்படையிலும், ஐரோப்பிய நாடுகளிலேயே 10 லட்சம் தொற்றாளர்கள் என்ற எண்ணிக்கை முதன்முதலில் ஸ்பெயினில் எட்டப்பட்டதும் இந்த முடிவுக்கு பிரதான காரணங்கள் என்று கூறப்படுகிறது.