கடலில் தவித்த 933 குடியேறிகளை காத்த ஸ்பெயின்

மாட்ரிட், ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டு கடல் பாதுகாப்புப் படையினர் படகில் வந்த 933 குடியேறிகளை மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

வறுமை காரணமாக ஆப்ரிக்காவில் உள்ள பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் குடியேற முயல்கின்றனர்.     அவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் இத்தாலி, மால்டா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து விடுகின்றனர்.

அது போல சில படகுகளில் வந்த ஆப்பிரிக்க குடியேறிகளை நாட்டுக்குள் அனுமதிக்க இத்தாலி மற்றும் மால்டா ஆகிய நாடுகள் மறுத்து விட்டன.   அதனால் செய்வதறியாது படகுகளில் மக்கள் தவித்துக் கொண்டு இருந்தனர்.   அப்போது ஸ்பெயின் நாட்டு கடல் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அந்த படகுகளில் வந்தவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர்.   அந்தப் படகுகளில் 933 குடியேறிகளும் 4 இறந்த உடல்களும் மீட்கப்பட்டுள்ளனர்.   இந்த நிகழ்வு நேற்று மற்றும் அதற்கு முன் தினம் ஆகிய இரு தினங்களில் நிகழ்ந்துள்ளது.   மீட்கப்பட்ட குடியேறிகள் தற்போது ஸ்பெயின் நாட்டின் அகதிகள் முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.