‘ஒருவன் ஒருவன் முதலாளி’ எனும் பாடல் ‘இந்திய நாடே முதலாளி’ என மாறியது…!

கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர் .

இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்களுக்காக ‘சங்கீத சேது’ என்னும் ஆன்லைன் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக இந்திய பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு (இஸ்ரா) அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த சனிக்கிழமை (11.04.20) அன்று இந்தியப் பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு (இஸ்ரா) நடத்தியது.

இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர், கே.ஜே.யேசுதாஸ், ஹரிஹரன், ஆஷா போஸ்லே, ஷங்கர் மகாதேவன், உதித் நாராயணன், பங்கஜ் உதாஸ், அல்கா யாக்னிக், சோனு நிகம், கைலாஷ் கேர், ஷான் உள்ளிட்ட பலர் பாடினர். இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ‘முத்து’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலை ‘இந்திய நாடே முதலாளி’ என்று பாடல் வரிகளை மாற்றிப் பாடினார். ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலை எழுதிய வைரமுத்துவே இந்தப் பாடலையும் எழுதியுள்ளார். தற்போது இந்தப் பாடல் வைரமுத்துவின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.