எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்… பாரதிராஜா உள்பட எஸ்பிபி குடும்பத்தினர் மருத்துவமனையில் முகாம்…

--

சென்னை:  எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பெறும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் வந்துள்ளனர்.

மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள எஸ்.பி.பி.க்கு எக்மோ, உயிர் காக்கும் பிற கருவிகளுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் எம்.ஜி.எம். மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, எஸ்.பி.பி.க்கு  சிகிச்சை அளித்து வரும் மருத்துவ வல்லுனர்களுடன் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் ஆலோசனை மேற்கொண்டார்.

பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி லேசான கொரோனா தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பிபி பாலசுப்ரமணியம் விரைவில் வீட்டிற்கு வர ஆர்வமாக இருப்பதாக அவரது மகன் எஸ்பி சரண் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து இன்று காலை முதலே மருத்துவமனை பகுதியில் ஆயுத படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்பிபியை காண அவரது நண்பர்கள் இளையராஜா, பாரதிராஜா உள்பட பலர்   வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும், எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண், மகள் பல்லஎஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்

இதேபோல் இயக்குநர் பாரதிராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவமனை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

தொடர்ந்து எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.