புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை துவங்கவுள்ளதையடுத்து, சம்பிரதாயமான அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

நரேந்திரமோடியின் இரண்டாவது பதவிகாலத்தின் இரண்டாவது நாடாளுமன்ற கூட்டமாகும் இது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 தொடங்கி, டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கமாக ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாகவும் நடத்தப்படும் சம்பிரதாய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு சபாநாயகர் ஓடம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தலைமையில் மற்றொரு அனைத்துக்கட்சி கூட்டமும் நவம்பர் 17 அன்று டெல்லியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தொடரில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கும் மசோதா, இ-சிகரெட் மற்றும் ஹுக்கா ஆகியவற்றுக்கு தடைவிதிக்கும் மசோதா போன்றவை நிறைவேற்றப்படவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.