பெங்களூரு:

ம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில்  உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற விரும்புவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக குமாரசாமி அரசு மீதான  நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறலாம் என்ற பரபரப்பு எற்பட்டு உள்ளது.

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில்,  இன்றைக்கே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரிய 2 சுயேச்சை எம்ல்ஏக்களின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில்,  முதல்வர் குமாரசாமி, கர்நாடக சபாநாயகரிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மேலும் 2 நாட்கள் அவகாசம் கேட்டதாக தகவல் வெளியானது.

இதற்கு பதில் அளித்து பேசிய சபாநாயகர், இந்த விவகாரத்தில் மேலும் தாமதம் செய்ய முடியாது என்று கூறியவர், நான் இன்று உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும், உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து ஆராய்வதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாக கூறி உள்ளார்.

மேலும், எம்எல்ஏக்கள் விவகாரத்தில்,  காங்கிரஸ், மஜத போன்ற கட்சி கொறடாக்கள் உத்தரவு பிறப்பிக்கலாம்; அந்த உத்தரவு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்து உள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விப் உத்தரவு பிறப்பிக்க சட்டசபை குழு தலைவருக்கு அதிகாரம் உண்டு என்றும் தெரிவித்தார்.

சபாநாயகரின் கருத்து காரணமாக, இன்றே குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையில்,  கர்நாடக ஆளுங் கூட்டணியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஏன் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்க ஆஜராகுமாறு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.