பெங்களூரு:

திருப்தி எம்எல்ஏக்கள் மீது கட்சி கொறடா நடவடிக்கை எடுக்கலாம் என்று கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

உச்சநீதி மன்றம், நேற்று அளித்த தீர்ப்பில், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்திருந்த நிலையில், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவித்து உள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானத்தின்மீது காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

விவாதத்தின்போது பேசிய குமாரசாமி, அதிருப்தி எம்எல்ஏக்கள் மாற்றி மாற்றி பேசுவதாகவும்,  அரசை கலைக்கும் முயற்சியின் பின்னணியில்  பாஜக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் உறுப்பினர்கள்  வலியுறுத்தினர். கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இந்த விஷயத்தில் உறுப்பினர்கள் தெளிவு பெற வேண்டும்  சபாநாயகர்  கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் சபையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, விவாதத்தை முடித்து இன்றே வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர்,  வாக்கெடுப்பை எப்போது நடத்துவது என்பது எனது உரிமை என்று பதில் அளித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார்,  உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மிகப்பெரிய அளவில் மதிப்பதாக தெரிவித்தவர், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் நடவடிக்கை எடுக்கலாம் என்றும்,   கொறடா நடவடிக்கை எடுப்பதில் நான் தலையிட மாட்டேன், இதில் எனக்கு எந்தவித நோக்கமும் இல்லை  என்றும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில் இன்று சபை நடவடிக்கையில்  208 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சி  பெரும்பான்மைக்கு 105 எம்எல்ஏக்கள் தேவை என்கிற நிலையில் பாஜகவுக்கு 107 பேர் ஆதரவாக உள்ளனர் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 100 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சபை பரபரப்புடன் காணப்படுகிறது. இன்றை நம்பிக்கை வாக்கெடுப்பு நடை பெறுமா என்பதும் சந்தேகத்திற்கிடமாகி உள்ளது.