டில்லி:

பாராளுமன்ற சபாநாயகரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுமித்ரா மகாஜன் தான் நடைபெற உள்ள பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்று பாஜக தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மேலும், இந்தூர் தொகுதிக்கு ஏன் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றும்,  விரைவில் வேட்பாளரை அறிவியுங்கள்  எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பாஜகவில், மூத்த தலைவர்கள் போட்டியிடுவதில் ஒதுக்கி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத் தப்பட்டு உள்ளது.  குறிப்பாக 75 வயதை கடந்த தலைவர்கள் பலருக்கும் இந்த முறை பா.ஜ.க. தலைமை போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. இந்த நிலையில், சுமித்ரா மகாஜனின் வயதும் 75ஐ கடந்துள்ள நிலையில், அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் என்ற கருத்து நிலவி வந்தது.

இந்த நிலையில், அவர் பல முறை வெற்றி பெற்ற தொகுதியான இந்தூர் தொகுதிக்கும் வேறு வேட்பாளர் யாரையும் அறிவிக்காமல் பாஜக தலைமை காலம் தாழ்த்தி வந்தது.

இந்த நிலையில், சுமித்ரா மகாஜன், தானாகவே பாஜக தலைமைக்கு, தான் போட்டியிட விரும்ப வில்லை என்றும், விரைவில் வேட்பாளரை அறிவியுங்கள் என்றும் கடிதம் எழுதி உள்ளார்.

சமீபத்தில் வயதானவர்களுக்கு சீட் கொடுக்க மறுப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சுமித்ரா மகாஜன், 1989-ம் ஆண்டு நான் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடது முதல், எனக்கு சீட் தரும்படி இதுவரை நான் கட்சி தலைமையிடம் கேட்டதில்லை, என்னை வேட்பாளராக அறிவிக்கும்படி நான் நிர்பந்தம் செய்ததும் இல்லை என்று கூறியவர், இந்தூர் தொகுதிக்கு யாரை வேட்பாளராக தேர்வு செய்தாலும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.she