புதுடில்லி: பாஜக எம்.பி. கணேஷ் சிங் 12ம் தேதியன்று, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, சமஸ்கிருத மொழியை தினசரி பேசுவது ஒருவரது நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நீரிழிவு மற்றும் கொழுப்பை அண்ட விடுவதில்லை என கூறினார்.

சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற அவர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆய்வின்படி, சமஸ்கிருதத்தில் கணினி நிரலாக்கங்கள் செய்யப்பட்டால், அது குறைபாடற்றதாக இருக்கும் என்றும் கூறினார்.

சில இஸ்லாமிய மொழிகள் உட்பட உலகில் 97 சதவீதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று சிங் கூறினார்.

இந்த மசோதா குறித்து சமஸ்கிருதத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி, இந்த மொழி மிகவும் வளையும் தன்மை கொணடது எனவும் ஒரே ஒரு வாக்கியத்தை பல வழிகளில் பேச முடியும் என்றார். சகோதரர், மாடு போன்ற பல்வேறு ஆங்கிலச் சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த பழமையான மொழியை உயர்த்துவதனால் வேறு எந்த மொழியும் பாதிக்கப்படாது என்றார் சாரங்கி.