ஆணவக் கொலை தடுக்க தனிச்சட்டம்: கவுசல்யா வலியுறுத்தல்

திருப்பூர்,

டுமலை சங்கர்  ஆணவக்கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 3 பேருக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்று சங்கரின் மனைவு கவுசல்யா கூறி உள்ளார்.

உடுமலை சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தொடர்பான  வழக்கில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட  6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில்  கவுசல்யாவின் தாயார் உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும், கவுசல்யா குறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கவுசல்யா சில இளைஞர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இன்று சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிர் உடன் செய்தியாளர்களை சந்தித்த கவுசல்யா, சில விளக்கங்களை கூறினார்.

அப்போது, தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெற்று வருவதால் அதை தடுக்க தனிச்சட்டம் தேவை என்று வலியுறுத்தினார்.

மேலும், வழக்கின் தீர்ப்பு குறித்து விமர்சிக்கப்படுவது கோர்ட்டு அவமதிப்பு என்றும், இதுகுறித்து கோர்ட்டு தானாகே சுமோட்டோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கவுசல்யாவும், எவிடன்ஸ் கதிரும் வலியுறுத்தினர்.

சமூக வலைதளங்களில் சாதிய அமைப்புகள் தீர்ப்பை எதிர்த்து எழுதி வருகிறார்கள்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது போலீசாரின் வேலை. இதுபோன்ற போக்குகளை தடுக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக   நீதி மன்றத்தை மட்டம் தட்டுவது போன்று பதிவிட்டு வருவது சரியலல. இது குறித்து சைபர் கிரைமில் புகார் செய்வோம் என்றனர்.

மேலும்  விடுதலை செய்யப்பட்டவர்களை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்றும் இருவரும் அறிவித்தனர்.

அதைத்தொடர்ந்து பேசிய கவுசல்யா,  தம்பிகளுடன் உள்ள படங்களை சாதிய நோக்கோடுதான் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். பலர் அதுகுறித்து தவறாக விமர்சனம் செய்கிறார்கள் என்ற கவுசல்யா  பலர்  மன நோயாளிகள் போல செயல்படுவதாகவும் கூறினார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 8 மாதம் கழித்து கொல்லணும் என்று நினைத்தவர்கள்… இன்னும் கொல்ல நினைக்க மாட்டார்கள் என்று கூற முடியாது என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர்,  தவறு செய்தவர்களை அப்பா என குறிப்பிட வேண்டாம். அவர்கள் குற்றவாளிகள் என்றவர்,

தமிழகத்தில்  ஆணவ கொலை நடைபெறுவதால், அதை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் தேவை என்றும்,  நான் உயிரோடு இருக்கும் வரை சாதிய ஒழிப்பு இருக்கும் என்றார்.

மேலும், எல்லா இயங்களுக்கும்  எனக்கு ஆதரவு தருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.