சிறப்புக்கட்டுரை: அ.தி.மு.க. 47!

கட்டுரையாளர்: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி

மூதறிஞர்  ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்கள் தலைமையில் காங்கிரஸ் கட்சி,  தமிழகம் முழுவதும் அழுத்தமாக வேர் பதித்திருந்த 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார்  பேரறிஞர் அண்ணா. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும், திராவிட  நாடு கோரிக்கையை ஏற்பவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது.

எம்.ஜி.ஆர். – அண்ணா

தனிப்பெரும் தலைவராக காமராஜர் மீது மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்துவந்தாலும், தேசிய நீரோட்டத்தில் தமிழும், தமிழனும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்நதால், காங்கிரஸை எதிர்த்து தி.மு.க. போராடியது. அண்ணாவின் பேச்சாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து வெளியேற, 1952 ஆம் ஆண்டு தி.மு.க. வில் நுழைந்தார்.

புகழுடன் இணைந்த புரட்சித்தலைவர்;

அப்போது 25 படங்களில் நடித்து புகழுடன் திகழ்ந்த வெற்றிக் கலைஞராகத்தான்  தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். அடியெடுத்து வைத்தார்.  அந்த காலகட்டத்தில் ராஜகுமாரி  மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி மர்மயோகி, சர்வாதிகாரி  போன்ற படங்கள் புரட்சித்தலைவரை வெற்றிக் கலைஞராக அடையாளம் காட்டியிருந்தன.

1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி போன்ற படங்கள் பட்டிதொட்டியெங்கும், பட்டையைக் கிளப்பியது. 1956 ஆம் ஆண்டு வெளியான ‘மதுரை வீரன்” திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிபெற்று, சமூகத்தின் விளிம்பு மனிதர்கள் வரை புரட்சித்தலைவரை, அழுத்தமாக கொண்டுபோய்ச் சேர்த்தது. புரட்சித்தலைவரைத் தங்கள் குலதெய்வமாக

மக்கள்  கொண்டாடினார்கள்.  மக்கள் வைத்திருக்கும் அன்பையும், அபிமானத்தையும் கண்டு நெகிழ்ந்த புரட்சித்தலைவார் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு  புதிய நெறிகளை வகுத்தக்கொண்டார்  நேர்மை, அன்பு, மனிதநேயம், வள்ளல்தன்மை, அச்சமின்மை, பெரியோரை மதித்தல், கட்சிக் கொள்கை போன்ற தன் இயல்பான குண நலன்களை, சினமாவிலும் பிரதிபவித்தார்.

தேர்தல் களத்தில் புரட்சித்தலைவர்;

1957 ஆம் ஆண்டு முதன்முறையாக தி.மு.க. தேர்தல் களத்துக்கு வந்தது. புரட்சித்தலைவரும் முதன்முதலாக தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். புரட்சித்தலைவரை நேரில் காண்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக அணிவகுத்து நின்றனர்.  வலுவான காங்கிரஸ் கோட்டையை உடைத்து 15 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. வெற்றிவாகை சூடியது.

பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நாடகவியலாளர்கள் என பலரும் தி.மு.க கொள்கைளை பேச்சாலும் எழுத்தாலும், நடிப்பாலும், தமிழகம் முழுவதும் கொண்டுசெல்வதற்கு மிகவும் பிரயத்தனம் செய்தனர். ஆனால் அவர்களால் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை, அதுவும் படித்த மக்களை மட்டுமே சென்றடைய முடிந்தது. பெரும்பாலன  மக்கள் தி.மு.க.வின் கொடி, சின்னம் எதுவென்று அறியாமலே இருந்தனர்.

அந்த பெரும்பாலன கடைக்கோடி பாமர மக்களிடம், கட்சி சென்றடைய வேண்டும் என்று புரட்சித்தலைவர் விரும்பினார். அதனால் 1958 ஆம் ஆண்டு வெளியான, ‘நாடோடி மன்னன்” படத்தில் எம்.ஜி.ஆர்  பிக்சர்ஸ் நிறுவனத்தின் சின்னமாக, தி.மு.க. கொடியைக் காட்டினார்.  இதற்கு  திரைப்படத் தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்தபோது, தயங்காமல் நீதிமன்றம் சென்று வாதாடி வெற்றி பெற்றார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, தி.மு.க.  கொடி தமிழகம் முழுவதும் பிரபலமானது. அப்போது தி.மு.க. கொடி என்று சொன்னவர்களைவிட,  எம்.ஜி.ஆர்  கொடி என்று சொன்ன ரசிகர்களே அதிகம். அதன்பிறகு தி.மு.க. மாநாடுகளில்  எல்லாம்  புரட்சித்தலைவர்  நடித்த ‘இன்பக் கனவு” நாடகம் தவறாமல்  இடம்பிடித்தது. நேருவை  எதிர்த்து கருப்புக்கொடி காட்டுவதற்கு தி.மு.க. முயற்சி எடுத்தபோது, முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக எம்.ஜி.ஆரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனாலும் எம்.ஜி.ஆரின்  புகழ் கூடியது. புரட்சித்தலைவரின் புகழ் வளர்வதைக் கண்டு, பேரறிஞர் அண்ணா பேரானந்தப்பட்டார். என்பதை விளக்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது.

அண்ணாவின் பெருந்தன்மை;

அண்ணா பரப்புரை முடித்து காரில் திரும்பியபோது, சாலையோரக் கடையில் நிறுத்தி தேநீர் அருத்தினர் அப்போது சாலையில் சென்ற விவசாயக் கூலித்தொழிலாளர்கள் சிலர் அண்ணாவின் காரில் கட்டிருந்த கொடியைப் பார்த்ததும் பரவசமானார்கள். உடனே அண்ணாவிடம் போய். ‘ நீங்கள் எம்.ஜி.ஆர் கட்சியா?” என்று ஆர்வமுடன் கேட்டார்கள். அதற்கு அண்ணாவும் பெருந்தன்மையுடன். ‘ஆம்‚ நான் எம்.ஜி.ஆர்   கட்சிதான்“ என்று பதில்  கூறி அவர்களை அனுப்பிவைத்தார்.  இந்த சம்பவத்தின் அடுத்த நாள் தம்பிக்கு எழுதிய கடிதத்தில்., ‘நாம் செல்லாத குக்கிராமங்கள், பாமர மக்களிடம் எம்.ஜி.ஆர்   நம் கொடியை கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்  என்று மகிழ்வுடனும் பெருமையாகவும் எழுதினார் அண்ணா.

இதன் தொடர்ச்சியாகத்ததான் பொதுமேடையில் அண்ணா ’ஒரு மரத்தில் பழம் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது தங்கள் மடியில் விழாதா எனப் பலரும்  காத்திருந்தனர். அது என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் பத்திரப்டுத்திக் கொண்டேன். அந்தக் கனிதான் எம்.ஜி.ஆர்  எனும் என் இதயக்கனி   என்று பேசினார். புரட்சித்தலைவரின் புகழை மறைக்கவும் மறக்கவும் அண்ணா ஒரு போதும் விரும்பியதில்லை.

எம்.ஜி.ஆர். – அண்ணா (மிகப் பழைய புகைப்படம்)

1962 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் களத்தில்  நின்றபோது, புரட்சித்தலைவர் ஆர்வத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  இந்தத் தேர்தலில் தி.மு.க 50 இடங்களில் வெற்றி பெற்றதற்கு புரட்சித்தலைவரின் தேர்தல் பரப்புரைதான் முக்கிய காரணம்  என்று அண்ணா வெளிப்டையாகவே பாரட்டிப் பேசினார்.

புரட்சித்தலைவரின் விஸ்வரூபம்;

1962 க்குப் பிறகு புரட்சித்தலைவரின் சினிமா வெற்றி, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்தது. தர்மம் தலை காக்கும், பெரிய இடத்துப் பெண், ஆனந்த ஜோதி, நீதிக்குப்  பின்பாசம், காஞ்சித் தலைவன், வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில்  ஒருவன், அன்பே வா, ஆணையிட்டால், நாடோடி, தனிப்பிறவி, தாயிக்குத் தலைமகன் போன்ற படங்கள் சூப்பர் ரூப்பா வெற்றி அடைந்தன.

இந்த படங்களின் காட்சிகளில், வசனங்களில், பாடல்களில் எல்லாம் தி.மு.க  வெற்றிக்கு புரட்சித்தலைவர்  மட்டும்தான் காரணம் என்பதை உறுதியாகவே  நம்பினார்கள். அதனால்தான் அன்றைய நிலையில் கலைஞார்  கருணாநிதியும் ஒரு கவிதை எழுதி எம்.ஜி.ஆரைப் பாரட்டினார்.

இதுதான் கலைஞர் கருணாநிதி புரட்சித்தலைவரை வெளிப்டையாகப் பாரட்டி எழுதிய கவிதை.

கருணாநிதி – எம்.ஜி.ஆர்.

‘வென்றாரும் வெல்லாரும்

இல்லாத வகையில் ஒளிவீசம் தலைவா..

குன்றனைப் புகழ்கொண்ட குணக்குன்றே ‚

முடியரசர்க்கில்லாத செல்வாக்கொல்லாம்

முழுமையுடன் பெற்று விளக்கம் முழுமதியே‚

தென்னாடும் தென்னவரும் உள்ள வரை

மன்னா உன் திருநாமம் துலங்க வேண்டும்.

உன்னாலே உயர் வடைந்த என் போன்றோர்’’

உள்ளங்கள் அதைக்கண்டு மகிழ வேண்டும்‚”

ந்தத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக எம்.ஜி.ஆர்  வெற்றி அடைந்தார்.  எம்.ஜி.ஆருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்த பேரறிஞர் அண்ணா, அமைச்சர் பதவிக்கு இணையான சிறுசேமிப்புத் துணைத்  தலைவர் பதவியைக்  கொடுத்து கௌரவப்படுத்தினார்.

புரட்சித்தலைவரின் விஸ்வரூபம்;

யாருமே எதிர்பாராத வகையில் 1969 ஆம் ஆண்டு அண்ணா மறைந்தார். தற்காலிக முதல்வாரன நாவலர் நெடுஞ்செழியன், நிரந்தர முதல்வர் பொறுப்புக்கு வருவார் என்று கட்சினரும் மக்களும் எதிர்பார்த்தனர்.  ஆனால் புரட்சித்தலைவரிடம் சரண் அடைந்தர் கருணாநிதி.  தன்னை  முதல்வராக தேர்ந்தெடுக்க உதவும்படி கேட்டுக்கொண்டார்.  புரட்சித்தலைவரும் அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.  காட்சிகள் மாறின. தன்னை நம்பிவந்த கருணாநிதிக்காக, தி.மு.க. எம்.எல்.ஏக்களை அழைத்துப் பேசினார் புரட்சித்தலைவர்.  அனைவரையும் தன் வசம் இழுத்து கருணாநிதியை முதல்வர்  பதவியில் அமரச்செய்து அழகு பார்த்தார்.

மீண்டும் 1971 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வந்தது. பேரறிஞர் அண்ணா இல்லாத நிலையில் தி.மு.க வெற்றிக்காக புரட்சித்தலைவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் விளைவாக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று தி.மு.க மாபெரும் சாதனை படைத்தது.

அப்போது தி.மு.க வின் பொருளாளராக இருந்த புரட்சித்தலைவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் விரும்பினார்கள். எம்.ஜி.ஆர் பதவியில் இருந்தால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும், தவறுகள் நடக்காது என்று தலைவர்கள் நம்பினார்கள். அனால் இந்தக் கோரிக்கையை தட்டிக்கழிக்க திட்டம் தீட்டினார்  கருணாநிதி.  தனக்கு விருப்பம் இருப்பது போலவும், ஆனால் சட்ட விதிப்படி, அமைச்சராக இருப்பவர் திரைபடங்களில் நடிக்கக்கூடாது என்று இல்லாத ஒரு தடையை இருப்பதாகச் சொல்லிப் போலியாக நடித்தார். பேரறிஞர் அண்ணா அமைச்சருக்கு இணையான பதவியை புரட்சித்தலைவருக்குக் கொடுத்தபோது, நடிப்பதற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை‚ ஆனால். கருணாநிதியோ அப்படியொரு விதி இருப்பதாகச் சொல்லி முதலைக் கண்ணீர் வடித்தார்.

ஊழலை அம்பலப்படுத்தினார்;

பெரும்பாலான தலைவர்கள் புரட்சித்தலைவர்  அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், பதவி விவாதத்திற்கு உள்ளாவதை புரட்சித்தலைவர் கொஞ்சமும் விரும்பவில்லை. அதனால் அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டென்று நிராகரித்து, தன்னுடைய ஆளுமைத் திறனைக் காட்டினார்.  அப்போது புரட்சித்தலைவருக்கு, உண்மையிலே சினிமாதான் முதல் விருப்பமாக இருந்தது பதவியை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை என்பதுதான்  உண்மை‚

பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோருடன்… எம்.ஜி.ஆர்.

1971ஆம் தேர்தலுக்குப் பிறகு கலைஞர்  கருணாநிதியின் போக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. கட்சி ஆட்சி இரண்டும் தன்னுடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைத்தார். புரட்சித்தலைவருடைய புகழையும் செல்வாக்கையும் குறைக்க நினைத்தார். தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொள்வதற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு வேண்டும் என நினைத்தார். அதனால், அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல், அனுசரித்து ஆட்சி நடத்தத் தொடங்கினார்.   தங்களைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை என்ற நிலையில், தி.மு.க. ஆட்சியில், ஊழல் கரை புரண்டு ஓடியது‚

இதனைக் கண்டு ஆவேசமான பெருந்தலைவர்  காமராஜர்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க.வின் ஊழல்களை அம்பலப்படுத்தினார். ஆனால் கருணாநிதியோ எதிர்க்கட்சிகளின் அறைகூவல்களை காதில் வங்கவே இல்லை‚

அடுத்த கட்டமாக, தன்னுடைய அரசியல் வாரிசாக மு.க. முத்துவை நுழைப்பதில் முழுமூச்சாக இறங்கினார். முதலில் மு.க.முத்துவை புரட்சிதலைவருக்குப் போட்டியாக சினிமாவில் கொண்டுவந்தார். புரட்சித்தலைவர் போலவே, அவதாரம்  புரட்சித்தலைவர் போலவே நடித்த முத்துவின் பெயரில் தி.மு.க.வில் ஏராளமான ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. எம்.ஜி.ஆர் பெயரில் ரசிகர் மன்றங்கள்

தொடங்குவதற்கு அனுமதி மறுக்கபட்டு, முத்துவின் பெயரில் மன்றங்கள் ஆரம்பிக்கும்படி கட்சியின் கிளைச் செயலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவுகள் பறந்தன.

மதுரையில் நடந்த தி.மு.க. மாநாட்டில் மு.க.முத்து தலைமையேற்று ஊர்வலம் நடத்தியதைக் கண்டு புரட்சித்தலைவரின் ரசிகர்கள் அதிர்ந்து நின்றார்கள். எம்.ஜி.ஆர் மன்றங்களை முத்து மன்றமாக மாற்றுவதற்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஏராளமான ஊர்களில் எம்.ஜி.ஆர்  ரசிகர் மன்றம் முத்து ரசிகர் மன்றமாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டன. இதைக் கண்டு தமிழகமெங்கும் புரட்சித்தலைவரின் ரசிகர்கள்  ஆத்திரம் அடைந்தனர்.

நான் அப்போது தீவிர எம்;.ஜி.ஆர்  ரசிகர் மன்ற உறுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றத்துக்கு நாங்கள் உருவாக்கிய தாமரைக் கொடி அப்போது திமுகாவில் பெருத்த சலசலப்பை எற்படுத்தியிருந்தது. எம்.ஜி.ஆர் மன்றங்களுக்கு ஏற்படும் சோதனைகளைக் கண்டு எங்கள் மனம் பொறுக்கவில்லை. அதனால் எம்.ஜி.ஆர் ரசிகர்  மன்ற எதிர்காலம் குறித்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்தோம்.  எம்.ஜி.ஆர்  மன்றத்தின் அடையாளச் சின்னமாக நாங்கள் ஏற்றியிருக்கும் தாமரைப்பூ கொடிக்கு அங்கீகாரம் பெற முடிவு செய்தோம். இதற்காக நாங்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தர வேண்டும் என்று புரசத்சித்தலைவரை மன்றாடிக் கேட்டுக்கொண்டோம். புரட்சித்தலைவரும் ஒப்புக்கொண்டார்.

1972ஆம் ஆண்டு அக்டோபர்   ஒன்று எம்.ஜி.ஆர். மன்றங்களின் சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியா திருமண மண்டபத்தில் (அதுதான் இப்போது அ.தி.மு.க.வின் தலைமையகம்) ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் புரட்சித்தலைவர் ஆட்சிக்கு எதிராகப் பேச வாய்ப்பு இருக்கிறது என்பதை முதல்வர் கருணாநிதி அறிந்துகொண்டார்.  உடனே அதனை தடுக்கும் முயற்சியாக, சில தலைவர்களை சமாதானம் பேசுவதற்காக புரட்சித்தலைவரிடம் அனுப்பி வைத்தார்.  கட்சியிலும் ஆட்சியிலும் இனிமேல் எந்தத் தவறுகளும் நடக்காது, தவறு செய்தவர்கள்  உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் என்று உத்திரவாதம் கொடுத்தார். முதல்வரின் உத்தரவாதத்தை புரட்சித்தலைவர்  நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டார். அதுதான் எம்.ஜி.ஆரின் குணம்.

அதனால் அன்றைய கூட்டத்தில் புரட்சித்தலைவர், “ திமுகதான் நமது ஒரே அமைப்பு தி.மு.க. கொடிதான் நம்முடைய கொடி  தனித்த வேறு அடையாளம் எதுவும் நமக்குத் தேவை இல்லை. தாய்க் கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று என்னிடம் கேட்டால் நான் தாய்க் கழகம்தான் வேண்டும் என்பேன். தாய் தன் குழந்தையை விட்டுத்தரமாட்டாள்” என்றார்.

புரடசித்தலைவரின் பிரகடனத்தைக்  கலைஞர் கருணாநிதியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்காவே காத்திருந்தது போன்று, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் அவசரம் அவசரமாக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாக 1972, அக்டோபர் 10 ஆம் தேதி தி.மு.க.வில் இருந்து புரட்சிதலைவரை நீக்கினார். அப்பபோது, ‘அண்ணா ஒப்படைத்து விட்டுச் சென்ற கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதனால் வேறு வழியின்றி கனியை எறிய வேண்டியதானது” என்று விளக்கம் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி.

புரட்சித்தலைவர் கட்சியல் இருந்து வெளியேற்றப்பட்டதும், தமிழகமே ஸ்தம்பித்து நின்றது‚ ‘எம்.ஜி.ஆர்  வாழ்க, கருணாநிதி ஒழிக” என்று வாசகம் எழுதப்பட்ட வாகனங்கள் மட்டும் ஓடின. எம்.ஜி.ஆர்.  செய்தி தாங்கிவந்த நாளிதழ்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்தது. யாருடைய தலைமையும் இல்லாமல் தமிழகத்தில் தன்னெழுச்சிப் புரட்சி ஏற்பட்டது. அ.தி.மு.க. உதயமானது.

பிரமிக்கவைத்த வெற்றி;

கட்சி தொட்ங்கிய ஆறு மாதத்திலேயே தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக புரிய வைக்கும நிகழ்வு நடந்தது. திண்டுக்கல்லில் 1973 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவர்  நிறுத்தப்பட்டார். அப்போது ஆளும் கட்சி சார்பில் புரட்சித்தலைவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கபட்டன.

புரட்சிதலைவருக்கு இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் சின்னம் – உதயசூரியன் என்று தான் மக்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இரட்டை இலை எடுபடாது என்று தி.மு.க.வினர் கணக்குப் போட்டனர். அதேபோன்று தி.மு.க. பிளவுபட்டதால், இந்தத் தேர்தலில் கமாராஜர் தலைமையிலான காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்று கணிப்புகள் வெளியாகின.

திண்டுகல் இடைத்தேர்தல் வாக்குச்சீட்டில் ஏழாவது இடத்தில் இரட்டை இலையும், எட்டாவது இடத்தில் உதயசூரியனும் இடம் பிடித்தன. அந்தத் தேர்தலில் அனைவரும் ஆச்சரியப்படும்  வகையில் மாயத்தேவர் லட்சக்காணகான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில், அ.தி.மு.கவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தை. காமராஜர்  தலைமையிலான காங்கிரஸ் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. அதுமட்டுமின்றி, சொற்ப ஓட்டுகளில்தான் டெபாசிட் தொகையை தக்க வைத்தது.

புதிய சின்னம், கட்சிப் பிளவு, காங்கிரஸ் வெற்றி என சொல்லப்பட்ட அத்தனை கணிப்புகளையும் புரட்சித்தலைவர்  செல்வாக்கு அடித்து நொறுக்கியது. இந்த திண்டுக்கல் தொகுதி மட்டுமின்றி, இதுவரை தி.மு.க.பெற்றுவந்த அனைத்து வெற்றிகளுக்கும் புரட்சித்தலைவர்தான் மூலகாரணம் என்பது நிரூபணமானது‚

திரையிலும் வெற்றி;

தி.மு.க.வில் இருந்து வெளியேறி முழு நேர அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர் மாறியதும், அவரது சினிமா வெற்றி முடிவுக்கு வந்துவிடும் என்றுதான் அனைவரும் நம்பினார்கள். ஆனால், தனக்கு எப்போதும், எதிலும் தோல்வி இல்லை என்று புரட்சித்தலைவர் நிரூபித்துக் காட்டினார்.

கட்சியில் இருந்து புரட்சித்தலைவர்  வெளியேறிய பிறகு வெளியான முதல் படமான இதயவீணையும், அடுத்த படமான உலகம் சுற்றும் வாலிபனும் ஏராளமான இடைஞ்சல்களை சந்தித்தன. இந்தப் படங்கள் வெளிவரவே முடியாது என்ற அளவுக்கு தொந்தரவகள் இருந்தன. ஆனால், அத்தனை சவால்களையும் தாண்டி வெளியான இந்தப் படங்கள் சாதனை வெற்றி பெற்றன.

இதனையடுத்து, வெளியான உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டுவாழக், நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும்கரங்கள், இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று கடைசிப் படம் வரையில் வெற்றிபெற்றார்

கட்டுரையாளர் சைதை துரைசாமி

புரட்சித்தலைவர்.  நடித்ததில் 76 படங்கள் 100 நாட்கள் ஒடி வெற்றி அடைந்தவை. அதேபோல் 11 படங்கள் வெள்ளிவிழா கண்டவை. அவர் நடித்த மொத்த திரைப்படங்கள் 134. புரட்சித்தலைவரின் அத்தனை படங்களும் திராவிடக் கட்சியின் வெற்றிக்கு பெரும் பங்களித்தன என்பது அனைவரும் அறிந்த உண்மை புரட்சித்தலைவரின் சினிமா வெற்றி, அரசியலிலும் பிரதிபலித்து  உலகிலேயே, முதன்முறையாக, நடிகராக இருந்து முதல்வராக மாறியவர்  புரட்சித்தலைவர்தான்.

என்றென்றும் புரட்சித்தலைவர் ஆட்சி;

அன்றைக்குத் தொடங்கிய புரட்சித்தலைவரின் வெற்றி, 1977,1980,1985 ஆகிய மூன்று சட்டசபைத் தேர்தல்களிலும் அடுத்தடுத்து எதிரொலித்தது. தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தவர்  எம்.ஜி.ஆர்  மட்டும்தான்‚ உடல்நலம் குன்றி, வெளிநாட்டு மருந்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதும், தமிழக மக்கள் புரட்சித்தலைவருக்கு வெற்றிப் பரிசு கொடுத்தார்கள். புரட்சித்தலைவர் மறையும்  வரை, தி.மு.கவால் எந்த சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற முடியவே இல்லை‚

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்படுத்தி, திமுகவையும், அ.தி.மு.கவையும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது எம்.ஜி.ஆரும் அவரது புகழும்தான். இதற்கு தேர்தல் வெற்றிகளே ஆதாரப்பூர்வமான  சாட்சி.

புரடசித்தலைவரின்  மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. வின் தலைமைப்பொறுப்பேற்ற  புரட்சித்தலைவி ஜெயலலிதா 1991, 200, 2011, 2016 என நான்கு முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கும், கண்ணுக்குத் தெரியாத மின்சாரமாக,  எம்.ஜி.ஆர் தான் காரணமாக இருந்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்தபோது, பிரபலமான ஏசியன் வீக் ஆங்கில இதழ், “கடவுள் என்று அழைக்கப்பட்ட மனிதர்” என்று அட்டைப்டக் கட்டுரை வெளியிட்டது. ஆம்.. அப்படித்தான் இருந்தது எம்.ஜி.ஆர். வாழ்ககை!

இன்றைய அ.தி.மு.க ஆட்சி மட்டுமல்ல, எதிர் காலங்களிலும் தொடர்ந்து அமைய இருக்கும் அ.தி.மு.க வின்  ஆட்சிகளுக்கும் ஆணி வேராகப் புரட்சித்தலைவர் என்றென்றும் இருபார். இந்தப் பூவுலகில் கடைசி மனிதன் இருக்கும்வரை புரட்சித்தலைவரின் புகழ் நீடுழி நிலைத்து  நிற்கும்.