சிறப்புச் செய்திக்கட்டுரை: தனியார் செக்யூரிட்டிகள்: வரமா, சாபமா?

சிறப்புச்செய்திக்கட்டுரை: டி.வி.எஸ். சோமு

மாற்றுத்திறனாளி சென்னை சிறுமி தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களால் ஏழு மாதங்களாக பலாத்காரம் செய்யப்பட்டு வந்த விவகாரம் வெளியாகி நாடு முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் 17 பேரில் பெரும்பாலானவர்கள் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். மேலும் 23 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்களும் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிபவர்களே.

இதையடுத்து, “அனைவருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கமுடியாத சூழலில்தான் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை மக்கள் நாடுகிறார்கள். ஆனால் செக்யூரிட்டி நிறவன ஊழியர்களே பெரும் குற்றவாளிகளாக இருக்கிறார்களே” என்ற அச்சம் பரவலாக எழுந்திருக்கிறது.

பாசு.மணிவண்ணன்

“தனியார் செக்யூரிட்டகள் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களைச் செய்வது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது” என்று கூறும் வழக்கறிஞர் பா.சு.மணிவண்ணன், “

வால்பாறையை அடுத்துள்ள, மாணிக்கா எஸ்டேட் தொழிற்சாலையில், கோவை, போத்தனூரைச் சேர்ந்த 21 வயது பெண் நீமா  செக்யூரிட்டியாக பணியாற்றினார். அதே நிறுவனத்தில் செக்யூரிட்ட அதிகாரியாக பணியாற்றியவர் ஆறுமுகம்.

நிறுவனத்தின் அருகிலேயே உள்ள குடியிருப்பில் ஒரு நாள் நீமா தனியாக இருக்க.. இந்த சூழலைப் பயன்படுத்தி நீமாவை பலாத்காரம் செய்ய முயன்றார் ஆறுமுகம். இவருக்கு உடந்தையாக இருந்தவர் இன்னொரு செக்யூரிட்டி அதிகாரியான  ஆனந்த பத்நாபன்.

நீமாவின் கூக்குரல் கேட்டு, அக்கம்பக்கத்தவர் கூடவே.. இருவரும் தப்பியோடிவிட்டனர்.

ஆறுமுகத்துக்கு வயது 64,  ஆனந்த பத்மநாபனுக்கு வயது 43” என்கிறார் பாசு. மணிவண்ணன்.

பி.ஜி. வெங்கட்

சென்னையைச் சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் பி.ஜி. வெங்கட், “பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல. வேறு பல குற்றங்களிலும் தனியார் செக்யூரிட்டிகள் ஈடுபடுகின்றனர்” என்கிறார்.

“வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு தனியார் ஷூ கம்பெனியில், அய்த்தம்பட்டு கட்டவாரப்பள்ளி பகுதியை சேர்ந்த கணேசன்,   செக்யூரிட்டியாக பணியாற்றினார்.  இவர்  தனக்கு தெரிந்த ஐந்து நபர்களை ஷூ கம்பெனிக்கு ஆட்டோவில் வரவழைத்து அங்கிருந்த, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தோல்களை கொள்ளையடுத்துவிட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது” என்கிறார் பி.ஜி. வெங்கட்.

தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றும் கதிர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இக்குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்.

“எல்லா துறைகளிலும் சில கறுப்பு ஆடுகள் இருக்கும். அதற்காக ஒட்டுமொத்த துறையையே குற்றம்சாட்டுவது தவறு. பெரும்பாலான தனியார் செக்யூரிட்டிகள் மிகக் கவனத்துடனும், நேர்மையுடனும் பணியாற்றுகிறார்கள். எங்களது பணி மிகவும் கடினமானது. அதாவது காவல்துறைக்கு உள்ள கடமை எங்களுக்கு உண்டு. ஆனால் காவல்துறைக்கு உள்ள உரிமை எதுவும் எங்களுக்குக் கிடையாது” என்கிற கதிர், “தினமும் 14 மணி நேரம் உழைக்கிறோம். மாற்று ஆள் வரவில்லை என்றால் தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்க வேண்டும். இதில் கொஞ்சம் அசந்தாலும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் பலிகாடா ஆக்கப்படுவது நாங்கள்தான்” என்கிறார் இவர்.

அருள்துமிலன்

வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான அருள்துமிலன், “தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள்தான் குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து உரிய ஊதியம் அளித்து இவர்கள் ஆட்களை பணியமர்த்துவதில்லை. வேறு வேலை இல்லாதர்களை, பாதுகாப்பு பணிக்கு எந்தவித அடிப்படை தகுதியும் இல்லாதவர்களை அடிமட்ட சம்பளத்துக்கு தேர்ந்தெடுக்கின்றன தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள்.

சமீபத்தில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் 200 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கான வருங்கால வைப்பு நிதி தொகையை வழங்க வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கையாக இருந்தது. இதைவிட முக்கிய கோரிக்கை, இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது! இது ஒரு உதாரணம்தான்” என்கிறார் அருள் துமிலன்.

மேலும், “சென்னை போன்ற மாநகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் காவலாளிகள் பணி அமர்த்தப்படுகிறார்கள். அப்படி நியமிக்கப்படும் காவலாளிகள் எப்படி இருக்க வேண்டும், பணிகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது பற்றி காவல்துறை விதிமுறைகளை வரையறுத்து இருக்கிறது. . அதன்படி,  காவலாளி வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர் 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். அவரது முகவரி, பாஸ்போர்ட், ஸ்மாட்கார்ட் உள்ளிட்டவற்றின் உண்மைத்தன்மையை அவரை பணிக்கு அமர்த்தும் தனியார் நிறுவனம் பரிசோதிக்க வேண்டும். தேர்வான நபர், காவல்துறையிடம் இருந்து மட்டுமே நன்னடத்தை சான்று பெற்றிருக்க வேண்டும். அந்த சான்றிதழை 3 வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். பணியில் சேர்ந்த பிறகு, தனியார் நிறுவன முகவரியுடன் கூடிய அடையாள அட்டை, சீருடை, பேஜ் போன்றவற்றை பணியில் இருக்கும் போது அணிந்திருக்க வேண்டும். பேரிடர் நெருக்கடி நிலை, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகளை கையாளவும் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

இவர்களுக்கு அடிப்படை சட்டங்கள்  குறித்த புரிதல்   இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் நபரின் மீது சட்டம் 1973 ன் 39-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விதிமுறைகளை ஆகப்பெரும்பாலான தனியார் காவலாளி சேவை நிறுவனங்கள் முறையாக பின்பற்றுவதில்லை” என்கிறார் அருள்துமிலன்.

தமிழ் ராஜேந்திரன்

உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான தமிழ் ராஜேந்திரன், “மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசு மற்றும் அரசின் அங்கமான காவல்துறையின் கடமை.  தனியார் செக்யூரிட்டிகள் பக்கம் மக்கள் செல்வதன் மூலம், அரசு மீது காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

காவல்துறையில் காலிப்பணியிடங்கள் முழுமையா நிரப்பப்படவேண்டும். பணியிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு மக்கள் – காவலர் விகிதாச்சாரம் மிகக் குறைவு. இந்நிலையை போக்க வேண்டும்.

மேலும், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை மட்டுமே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்” என்கிறார் தமிழ் ராஜேந்திரன்.

தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் சிலவற்றை தொடர்புகொண்டு பேசினோம். “எங்களைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படுகிறோம். மற்றபடி இந்தச் சூழ்நிலையில் பேசமுடியாது” என்றார்கள்.

மொத்தத்தில் தனியார் செக்யூரிட்டிகள் என்பது வரமா சாபமா என்கிற கேள்வி மக்கள் மனதில் பூதாகரமாய் எழுந்துள்ளது என்பது உண்மை.