சிறப்புக்கட்டுரை: ‘மீ டூ’… பயணம் எங்கே செல்லும்?

கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன்

சொந்த வாழ்க்கையிலும் சரி, சமூக வாழ்க்கையிலும் சரி பிரச்சனைகள் திட்டமிட்டு வருவதில்லை. ஒரு பிரச்சனைக்கு ஏதாவது ஒரு முடிவு ஏற்பட்ட பிறகு வரலாம் என்று அடுத்த பிரச்சனை காத்துக்கொண்டிருப்பதில்லை. புதிய பிரச்சனையில் அக்கறை காட்டுவதால் பழைய பிரச்சனைகள் மறக்கப்படுவதில்லை. தற்போது பெரும்பேச்சாகியுள்ள ‘மீ டூ’ சமூக ஊடக இயக்கம் பற்றிய உரையாடல்களில் “மக்களின் மற்ற முக்கியமான பிரச்சனைகள் எளிதாக மறக்கடிக்கப்படுகின்றன… அதற்கான ஒரு உத்திதான் இது,” என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆகவேதான் உலக அளவில் நடந்துகொண்டிருக்கிற ‘மீ டூ’ இயக்கம் குறித்த எனது வெளிப்பாட்டை இதிலிருந்தே தொடங்க நினைத்தேன்.

அதிகாரம், செல்வாக்கு என மேல் தட்டுகளில் இருக்கிற ஆண்கள் கீழ்த்தட்டுகளில் இருக்கிற, முன்னேறிச் செல்வதற்கான வாசல் தேடி வருகிற பெண்களைப் பாலியல் இச்சையோடு அணுகினார்கள் என்ற குற்றச்சாட்டுகள் முன்னுக்கு வருகின்றன. பெரிய இடங்களில் இருப்போர் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டுகள் கூறப்படுவது புதிதல்ல. முன்பு ஒரு பெரிய பத்திரிகையில், ஒரு நடிகையின் கதையைச் சொல்வது போல, அவராக இருக்குமோ இவராக இருக்குமோ என்று ஊகிக்க வைக்கிற முழு நீளக் கிசுகிசுத் தொடர் வந்தது. சமுதாய ஏணியில் தட்டுத்தடுமாறி மேலேறிய பெண்கள் எல்லோருமே இப்படிக் கட்டில் பகிர்வினால்தான் சாதித்திருப்பார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயன்ற அந்தத் தொடருக்கு, மாதர் இயக்கங்களின் போராட்டத்தால் முற்றும் போடப்பட்டது. திரையுலகப் பெரும்புள்ளி ஜி.உமாபதி, காஞ்சி மடாதிபதியாய் விளங்கிய ஜெயேந்திரர் ஆகியோர் மீது பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் இதே குற்றச்சாட்டைச் சொன்னார். அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலித்தன, முன்பு நடந்ததை ஏன் இப்போது சொல்கிறாய் என்று கேட்கிற வசவுகளும் வெளிப்பட்டன.

ஜெயேந்திரர் – அனுராதா ரமணன்

“மீ டூ” (நானும்தான் அல்லது எனக்கும்தான்) என தனக்கும் இப்படி நேர்ந்ததை பெண்கள் வெளிப்படுத்துவது ஒரு இயக்கமாகவே நடப்பது இதுவே முதல்முறை.  குற்றச்சாட்டு புதிதாக இருக்கலாம், குற்றம் புதிததல்ல. இரு பாலினத்தவர்களும் இணைந்து செயல்படுகிற எல்லாத் துறைகளிலும் நிகழ்வதுதான். அரசியல் பீடம், ஆன்மீக மடம், அலுவலகத் தளம், தொழில் கூடம், பல்கலைக்கழகம்… எங்கே இல்லை?

ஆணாதிக்கமும், பாலியல் சுரண்டலும் இணைந்துள்ள இப்பிரச்சனையைப் பல கோணங்களில் பார்க்க வேண்டியிருக்கிறது. மனதில் பாலியல் விருப்பம் ஏற்படுவதையும், அதை வெளிப்படுத்துவதையுமே கூட மிகப்பெரிய ஒழுக்கக்கேடாக முத்திரை குத்துகிற சமூகக் கட்டமைப்பு இங்கே இருக்கிறது. இரு வேறு பாலினத்தவர்கள் நட்பாகப் பழகினால், கைகுலுக்கிக்கொண்டால், அன்பாக அணைத்துக்கொண்டால், ஆதரவாகத் தோள்கொடுத்தால் அந்த இருவரையும் படுக்கையறைக்குள் தள்ளிக் கற்பனை செய்து புழுங்கிப்போகிற கட்டமைப்பு இது. உடலுறவை மையப்படுத்தியே அனைத்து ஒழுக்கங்களும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. உடலுறவை உட்பொருளாகக்கொண்டே கற்பு, கற்பழிப்பு போன்ற சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணின் உடல் ஊடுறுவப்படுவதைப் பொருட்படுத்தியே கன்னிமை, தூய்மை, புனிதம் போன்ற பதங்களும் புழங்குகின்றன.

தொட்டுப் பேசு!

பாலியல் குறுகுறுப்புடன் அடிப்பார்வை பார்க்கிற பழக்கத்தை வீழ்த்த வேண்டுமானால், சிறு வயதிலிருந்தே பெண்களையும் ஆண்களையும் பிரித்தே வைக்கிற நம் குடும்ப வழக்கங்களைக் கைவிட்டாக வேண்டும். ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என்ற தனித்தனி ஏற்பாடுகளிலும் மாற்றம் தேவை. பாலினத் திரையைத் தள்ளிவிட்டுக் கைகுலுக்குங்கள், தொட்டுப் பேசுங்கள், அணைத்துக்கொள்ளுங்கள், டீக்கடைக்கு சேர்ந்து செல்லுங்கள், வெளியிடத்தில் காதலியும் இணையரும் சகோதரியும் வேறொரு ஆணின் அருகில் உட்கார நேர்ந்தால், காதலனும் இணையரும் சகோதரனும் வேறொரு பெண்ணின் அருகில் உட்கார நேர்ந்தால், உறுத்தலின்றி இருங்கள், பாலினப் பாகுபாடற்ற நட்புச் சூழலை எங்கும் வளர்த்திடுங்கள் என்றெல்லாம் சொல்லிவருகிறேன். இருசக்கர வண்டியில் ஆண் நண்பரைப் பின்னிருக்கையில் உட்காரவைத்து ஓட்டிச் செல்லும் பெண்களைப் பாராட்டுதலுடன் பார்க்கிறேன். எனது கருத்து காலமழையில் கரைந்துவிடாது என்ற நம்பிக்கையை அலுவலகங்களில் சட்டப்படியான பாலியல் புகார் குழுக்களை அமைப்பதோடு, பணித்தலங்களில் பாலின நட்புச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் கோருகிற உழைக்கும் மகளிர் அமைப்பு தருகிறது.

பாலியல் மைய ஒழுக்கக் கட்டுமானத்தின் காரணமாக, பெண்ணை அவமானப்படுத்த உடலுறவு சார்ந்த அவதூறுகள் திரும்பத்திரும்பக் கையில் எடுக்கப்படுகின்றன. பக்கத்து வீட்டுக்காரர்களுடனான வாக்குவாத மோதல்களில், “உன்னைப் பத்தித் தெரியாதா, நீ அவங்கூடப் படுத்தவதானே… இவங்கூடப் போயிட்டு வந்தவதானே” என்ற சாடல்தான் இறுதிக்கட்டமாக இருக்கும். தெருச்சண்டைகளிலும், தெருவுக்குக் கொண்டுவரப்படும் மேலிடச் சண்டைகளிலும் இதைக் காணலாம். அவ்வப்போது ஆண்களுக்கும் இதே போன்ற பாலியல் வசை மாலை அணிவிக்கப்படும். பொதுக்கழிப்பறைகளின் கரிக்கோட்டுப் படங்களில் தெருவிலுள்ள யாரோ ஒருவர், அதே தெருவிலுள்ள யாரோ இருவரின் பெயர்களை எழுதித் தனது மன மலத்தைக் கழித்துவிட்டுப் போயிருப்பார். வெவ்வேறு துறைகளில் முன்னேறுகிறவர்கள் பற்றி வேறு யாரோ மனமலம் கழிப்பதும் நடந்திருக்கிறது.

‘மீ டூ’ இயக்கத்தின் தனித்துவம் என்னவென்றால், மக்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் பற்றிப் பதிவு செய்கிறார்கள். ((சில பெண்கள் சொந்த அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத சூழலில் குற்றச்சாட்டுக்களை மட்டும் பதிவு செய்து வருகிறார்கள்.)

அவர்களால் சுட்டிக்காட்டப்படுகிறவர்களும் மக்களுக்குத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஊருக்கு அவ்வளவாகத் தெரிய வராதவர்களும் கூட தாங்களும் இதே அனுபவத்திற்கு உள்ளானது பற்றிப் பதிவிடுகிறார்கள். அவர்களால் சுட்டிக்காட்டப்படுகிறவர்களிலும் அவர்களுடைய அலுவலகம் போன்ற வட்டாரத்திற்குள் இருக்கிற வெளியே அவ்வளாவாகத் தெரியவராதவர்கள் இருக்கிறார்கள்.

தாரனா பூர்க்

அமெரிக்காவில் 2006ம் ஆண்டில் தொடங்கியது இந்த இயக்கம். தரானா பூர்க் என்ற சமூகச் செயல்பாட்டாளர் இதைத் தொடங்கிவைத்தார். தன்னைச் சந்தித்த ஒரு 13 வயதுச் சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்மத்தைச் சொல்லி அழுததாகவும், அப்போது அந்தச் சிறுமிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்ததாகவும், பின்னர்தான் அந்தச் சிறுமியிடம் தானே, ‘எனக்கும் இப்படி நடந்ததம்மா’ என்று சொல்லியிருக்கலாமே, அப்படிச் சொல்வதன் மூலம் சிறுமிக்குத் துணிந்து பேசுகிற ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியதாகவும் கூறுகிறார் பூர்க். அதைத் தொடர்ந்து ‘மை ஸ்பேஸ்’ என்ற சமூக ஊடகத்தில் ‘மீ டூ’ என்று பதிவிட்டார். அப்போது அது ஒரு இயக்கமாக உருப்பெறவில்லை. அவ்வப்போது, ஆங்காங்கே சிலர் ‘மீ டூ’ என்று பதிவு செய்துவந்தார்கள், 11 ஆண்டுகள் கழித்து, 2017 அக்டோபரில்தான், அலிசா மிலானோ என்ற திரைப்படக் கலைஞர், ட்விட்டர் தளத்தில் ‘மீ டூ’ என்ற பொது இணைப்பை உருவாக்கி, பாலியல் அத்துமீறலை எதிர்கொண்ட பெண்கள் துணிந்து இந்த இணைப்பில் தங்கள் மன உளைச்சலை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். நிறையப்பேர் அதில் இணைந்தார்கள், அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் விரைவில் பரவியது.

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் திரைப்பட நடிப்புக் கலைஞர் பாவனா இன்னொரு ஆண் நடிகர் ஏற்பாடு செய்த அடியாட்களால் கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வலைத்தளங்களில் பலரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள். ஷீனா தபோல்கர் என்ற பயணக் கட்டுரையாளர் தனது வலைப்பூ பக்கத்தில், ‘மீ டூ’ என்ற பகிர்வுடன், புனே நகரத்தின் ஒரு பணக்கார விடுதியில் நடந்த பாலியல் வன்மங்கள் குறித்து எழுதினார். அவரைப் பலரும் இழிவான முறையில் திட்டினார்கள் என்றாலும், விரைவில் பல முன்னணிக் கலைஞர்கள் அந்த விடுதிக்குப் போவதில்லை என்று அறிவித்தார்கள். சென்ற ஆண்டு அக்டோபரில் இன்ஜி பென்னு என்ற சமூகச் செயல்பாட்டாளரும் அமெரிக்காவில் படித்துவரும் ராய சர்க்கார் என்ற இந்தியப் பெண்ணும் கல்வி வளாகங்களின் மேல்மட்டத்தில் இருக்கும் சில உயர்சாதிப் பேராசிரியர்கள் தங்களுடைய சான்றிதழ்களுக்கு விலையாகப் பாலியல் உறவைக் கோருவது பற்றி எழுதி, ஒரு பட்டியலையே சமூக ஊடகங்களில் வெளியிட்டார்கள். ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சில பெண் மாணவர்கள் தங்களுக்கும் இப்படி நடந்ததெனக் கூறி, பட்டியலை விரிவுபடுத்தினார்கள்.

தனுஸ்ரீ தத்தா – நானா படேகர்

இந்நிலையில், இந்த 2018ல், சென்ற செப்டம்பரில் இந்தி திரைப்படக் கலைஞர் தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் என்ற முன்னணி ஆண் நடிகர் தன்னிடம் அத்துமீறியது பற்றி ‘மீ டூ’ என்று ட்விட்டினார். ஒரே மாதத்தில் இது வேகம் பிடித்துவிட்டது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் ‘மீ டூ’ என்று வரிசையாக வந்தார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களும் நாடறிந்த கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்தான்.

தமிழக அதிர்ச்சி

தமிழகத்தில், பாட்டுக் கலைஞர் சின்மயி இதைத் தொட்டது தேன்கூட்டைக் கலைத்திருக்கிறது. ஏனென்றால் அவர் குற்றம் சாட்டியது திரைப்படப் பாடல்களால் மட்டுமல்லாமல் இலக்கிய எழுத்துகளாலும் உரைகளாலும் உலக அளவில் தமிழ் மனங்களில் குடியேறியிருக்கிற, வலுவான அரசியல் தொடர்புகளும் உள்ள கவிஞர் வைரமுத்து. வேண்டுமென்றே அவதூறு கட்டப்படுகிறது என்று அவருக்கு ஆதரவான குரல்களும் உரக்க ஒலிக்கின்றன. ஆயினும், தமிழ்த்திறன், ஆய்வுப்புலமை, பக்தி இலக்கியங்களைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் அணுகும் பாங்கு, தமிழகத்தில் மதவெறி அரசியலை வளர்த்துவிடும் உள்நோக்கத்துடன் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது தனது கருத்துச் சுதந்திரத்திற்காக நின்றது உள்ளிட்ட காரணங்களால் அவரை நேசிப்பவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

வைரமுத்து – சின்மயி

கவிஞர் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். வழக்குத் தொடுத்தால் எதிர்கொள்ளத் தயார் என்று கூறியிருக்கிறார். குற்றம் சாட்டுகிறவருக்கு உள்நோக்கம் இருக்கிறதென்றால் கவிஞரே மானநட்ட வழக்குத் தொடுக்கலாமே என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. குற்றம் நடக்கவில்லை என்றால் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தலாம், நீதிமன்றத்தையும் நாடலாம். இது கவிஞர் போன்றோரின் ஆளுமைக்கு  சிறப்புச் சேர்க்கும். குற்றச்சாட்டு உண்மைதான் என்றால்? அவ்வாறெனில், ‘ஆம் அன்றைக்கு அப்படிப்பட்டவனாக இருந்தது உண்மைதான்’ என்று ஒப்புக்கொள்ளலாம், பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்கலாம். மன்னிப்புக் கோருதல் மகத்தான மனிதப் பண்பு என்ற அடிப்படையில் அது கவிஞர் போன்றோரின் ஆளுமைக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கும்.

வேறு சில திரைப்பட ஆளுமைகள் மீதும், சீண்டப்பட்ட பெண்கள் இன்று ‘மீ டூ’ சாட்டிவருகிறார்கள். ஆனால், அந்த மற்றவர்கள் பற்றி பெரிதாகப் பேசப்படவில்லை. சமூக ஊடகங்களில் வைரமுத்து என்பதாலேயே அவருக்கு ஆதரவாகக் கருத்துகள் வருவது போல, வைரமுத்து என்பதாலேயே அவருக்கு எதிராகவும் கருத்துகள் வருகின்றன. இன அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் இது அணுகப்படுகிறது. சின்மயியின் சாதிப் பின்னணியைச் சொல்லி, இது பார்ப்பணரல்லாதோரைக் களங்கப்படுத்துகிற சதி என்று வாதிடப்படுகிறது. அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “என் இனத்தைச் சேர்ந்தவர் தாக்கப்படுவதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்,” என்று செய்தியாளர்களிடம் கேட்டார். அத்தோடு நிற்காமல், “பதினான்கு ஆண்டுகள் கழித்துக் குற்றம் சாட்டப்படுவதை எப்படி ஏற்க முடியும்” என்றும் கேட்டார். குற்றம் நடந்தவுடனேயே வெளியே சொல்லியிருந்தால் அப்போது பொறுத்துக்கொள்ளலாமா? பதினான்கு ஆண்டுகள் கழித்துச் சொல்வதால்தான் இனக் கௌரவம் அடிபடுகிறதா? இனம் என்ற அடிப்படையில் எந்தக் குற்றத்தையும் அங்கீகரிக்கலாமா? மானுட நியாயமற்ற இத்தகைய இனச்சார்பு வாதம் ஒருபோதும் கவிஞருக்கோ, இதுபோல் குற்றம் சாட்டப்படுகிற மற்றவர்களுக்கோ கைகொடுக்காது.

சீமான் – ராதாரவி

திரைக்கலைஞர் ராதாரவி ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, “முற்போக்கு என்று நினைத்துக்கொள்ளும்” பெண்களைக் கெஞ்சிக்கேட்டுக்கொண்டு அறிவுரை கூறியிருக்கிறார். அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைமையில் இருக்கும் கனிமொழி இந்த இயக்கத்தை ஆதரித்திருக்கிறார், அவருக்கும் இந்த அறிவுரை பொருந்துமா என்று அவரே சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும்-

சின்மயி தனது புகாரின் பின்னணியில் அரசியல் வழிகாட்டல் எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதை நம்பமுடியுமா என்று கேட்க வைப்பது போல, பாஜக தமிழகத் தலைவர் சந்த நயத்தோடு ட்விட்டர் பதிவிடுகிறார், சர்ச்சைகளால் புகழ் சேர்க்கிற இன்னொரு தலைவர், வைரமுத்துவைக் கழுவி ஊற்றிப் பேட்டியளிக்கிறார். இதற்கு முன், ஆண்டாள் பற்றிய கட்டுரையை வைரமுத்து எழுத, அதற்கு சர்ச்சைத் தலைவர் மதவாதக் கண்ணோட்டத்துடன் எதிர்ப்புத் தெரிவிக்க, கட்டுரையை வெளியிட்ட ‘தினமணி’ நாளேடு தனது இணையப் பதிப்பிலிருந்து அதை விலக்கிக்கொள்ள, அதன் ஆசிரியர் வெளிப்படையாகவே மன்னிப்புக்கோர, நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்ல என்று மடாதிபதிகளே பேச, ஆனாலும் எதிர்பார்த்த அரசியல் பலன் விளையவில்லை. இந்நிலையில் இப்படியொரு புகாரை வெளியிட வைக்கிற உத்தி கையாளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தைப் பலரும் தெரிவிக்கிறார்கள். சின்மயியை விட, அவருடைய தாயாரின் பேட்டிகளில் வெளிப்படும் ஆன்மீகக் கலவை இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது என்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சின்மயி சமூக ஊடகத்தில் தன்னைப் பற்றி எழுதியவர்கள் மீது புகார் செய்ய, காவல்துறை உடனே செயல்பட்டது. ஆனால் சமூக ஊடகத்தில் இழிவாகவும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்து எழுதிய மற்றொருவரைப் பற்றி ஊடகவியலாளர்களே உரிய சான்றுகளோடு பதிவு செய்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னணியில் சின்மயியின் மேலிடத் தொடர்பும் சாதியும் இருந்ததாக விமர்சிக்கப்பட்டதை மறப்பதற்கில்லை. கவிஞரின் மீது இப்படியொரு குற்றச்சாட்டைக் கிளப்பிவிடுமாறு சின்மயி கிளப்பிவிடப்பட்டாரா அல்லது அவர் ‘மீ டூ’ இயக்கத்தால் ஊக்கம் பெற்றவராகத் தன்னுணர்வோடு பதிவிட்டதை அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்களா என்ற வினாவுக்கான விடை இப்போதைக்குக் கிடைக்கப்போவதில்லை.

பெண் என்றால்…

அதேவேளையில், எந்தச் சாதியானாலும் பெண் இங்கே ஒரு நுகர்பொருள்தான். பெண்ணை இரண்டாமிடத்தில் வைப்பதில் எந்த மதமும், எந்தச் சாதியும் சளைத்ததல்ல. குற்றம் சாட்டுகிறவர்களுக்கு ஒரு சாதிப் பின்புலம் இருக்கிறது என்பதாலேயே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதாலேயே வேறுபக்கம் திரும்பிக்கொள்வது பெண் விடுதலைக்கும் பாலின சமத்துவத்துக்குமான நெடும் போராட்டத்தைத் தடம்புரளச் செய்துவிடும். குறிப்பிட்ட குற்றச்சாட்டில் அரசியல்/சாதிய உள்நோக்கம் இருக்கிறதென்றால் அதை அம்பலப்படுத்திக்கொண்டே, இன்றைக்குப் பெண்கள் தங்கள் குமுறலை வெளிப்படையாகக் காட்ட முன்வந்திருப்பதற்கு ஆதரவாகவும் நின்றாக வேண்டும்.

எம்.ஜே. அக்பர் – மஜ்லி டி புயு காம்ப்

இது தொடர்பான விவாதங்கள் வைரமுத்து-சின்மயி ஆகியோரோடு நிறுத்தப்பட்டுவிடக்கூடாது, ‘மீ டூ’ வெளிப்பாடுகளில் திரைப்படத்துறை முன்னால் தெரிகிறது என்றாலும் விளையாட்டு, தொழில், கல்வி என்று விரிகிறது. நீதித்துறையிலும் இது இருக்கிறது என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியே சொல்கிறார். மத்திய அமைச்சரும் முன்னாள் பத்திரிகையாசிரியருமான எம்.ஜே. அக்பர் மீது, முன்பு அவருடன் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர்கள் ‘மீ டூ’ குறிப்பெழுதுகிறார்கள். அவரை விசாரிக்க வேண்டும் என்றார் மற்றொரு மத்திய அமைச்சர் மேனகா காந்தி, இதற்கு அக்பர்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார் இன்னொரு அமைச்சரான ஸ்மிருதி ராணி. பிரதமர் பதில் சொல்லட்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருகிறது. தனது அமைச்சர் மீதான புகார் என்பதற்காக அல்ல என்றாலும், ஒரு இயக்கமாகப் பரவி வருகிறது என்ற அடிப்படையில் ‘மீ டூ’ பற்றியே கூட பிரதமரின் ‘மன் கி பாத்’ என்னவென்று தெரியவில்லை. அமைச்சர் இப்போது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.

இத்தகைய புகார்கள் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அறிவித்தது. அந்த அறிவிப்பு செய்தியாக வருவதை உறுதிப்படுத்தியவர்கள் அதன் பிறகு, குழுவை அமைக்க ஏதாவது செய்ததாக ஒரு செய்தியும் வரவில்லை. இவர்களால் எப்படி அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்படுவதை உறுதிப்படுத்த முடியும் என்று தெரியவில்லை.

ஊசி நூல்

தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றிப் பெண்கள் வெளியே சொல்வது எளிதான நிகழ்வல்ல. ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையும் என்று வெகு சாதாரணமாகப் பெண்ணையே குற்றவாளியாக்கிவிடுகிற சமூகம் இது.    இத்தனை காலம் கடந்த பிறகு இப்போதாவது சிலருக்கேனும் இப்படி வெளிப்படையாகப் பேசுகிற துணிவு வந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமாக உலகளாவிய பாலின சமத்துவத்துக்கான போராட்ட இயக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் அது வேர்விட்டிருக்கிறது. வேரின் ஒரு கிளை தமிழகத்திற்கும் நீண்டிருக்கிறது. அந்த வேர்களுக்கு ஊக்க நீரூற்றி, ஆதரவு உரமிடுவதற்கு மாறாக, ஏன் இத்தனை ஆண்டுகள் கழித்துச் சொல்கிறீர்கள் என்று கேட்பது வேரில் அமிலத்தை ஊற்றுவதாகிவிடும். ஆண்டுகள் பறந்துவிட்டதால் வலி ஆறுவதற்கு இது உடற்காயமல்ல. பெண்ணின் சுயமரியாதையைச் சுடலையில் ஏற்றுகிற, பெண்ணின் உடலை நுகர்பொருளாக்குகிற வன்கொடுமையின் வலி இது.

மேல்தட்டில் உள்ள பெண்களின் விளம்பர உத்திதான் இது என்கிறார்கள். இருக்கட்டும். புகழ்வெளிச்சமும் செல்வாக்குத் தொடர்புகளும் பணபலமும்  உள்ள இவர்கள் இன்றைக்கு இப்படித் துணிகிறார்கள் என்றால், நாளை இந்தத் துணிவு எளிய பெண்களிடமும் பதியமாகும். ஆகட்டும். முன்னேறிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், கல்வி முதலிய வாய்ப்புகள் அமையப்பெற்றவர்கள், மக்களுடன் அறிமுகம் என்ற பாதுகாப்பான தளத்தில் காலூன்றியவர்கள் ஆகியோரிடமிருந்து இப்படிப்பட்ட முன்முயற்சிகள் முளைவிடுவது புரிந்துகொள்ளத்தக்கதுதான்.

வாய்ப்புகளுக்காக முன்பு உடன்பட்டுவிட்டு, இப்போது ஆண்களை மட்டும் குற்றவாளியாக்குவது சரியா என்று கேட்கப்படுகிறது. ஏன், பெண்ணே கூட தனது தேவை நிறைவேறுவதற்காகத் தானே முன்வந்து தனது உடலைத் தருவதில்லையா என்றும் கேட்கப்படுகிறது. பெண்ணை இப்படிக் காம பேரம் நடத்த வைப்பதே ஆண் மையச் சமுதாய அமைப்பின் நிர்ப்பந்தங்கள்தான் என்கிறார் கவிஞர் பெருந்தேவி. வீடுகளில் புழங்கும் “தலையணை மந்திரம்” இந்தக் காம பேரத்தின் தொடக்கம்தான் என்கிறார் அவர். “மனைவி தலையணை மந்திரம் போட்டுவிட்டாள், கணவன் அதில் மயங்கிவிட்டான்” என்று ஒவ்வொரு தலைமுறையிலும் அந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது. பெண் தன்னைத் தருகிற நிலையிலும் ஆண் அதை அனுபவிக்கிற நிலையிலும் இருப்பது எப்படி வந்தது? வீட்டிலோ, வெளியிடத்திலோ பெண் தனது மற்ற தகுதிகளோடு சேர்த்துக் கட்டிலையும் பகிர்ந்தால்தான் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற நிலைமைக்கு யார் பொறுப்பு?

பெண்கள் சொல்கிறார்கள் என்பதாலேயே குற்றச்சாட்டு உண்மை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற துணைக் கேள்வியும் தொடர்கிறது. “பெண் தன் மனதில் பூட்டி வைத்திருந்ததைத் திறந்துவிடுவதற்கான களம் இப்போதுதான் வாய்த்திருக்கிறது. இதில் வருவதெல்லாம் வரட்டும். குறிப்பான, தனிப்பட்ட குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பதை அந்தந்தப் பிரச்சனைகளில் காலம் காட்டிவிடும். எடுத்த எடுப்பிலேயே அதைக் கேட்டு அந்தக் களத்தை மூடிவிடக்கூடாது,” என்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா.

“தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலை வெளியில் சொல்வது அவமானம் எனக் கருதி மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் சமூகச் சூழலில் இது போன்று தைரியமாக வெளியில் வந்து ‘இது எனக்கு ஏற்பட்ட அவமானம் இல்லை குற்றம் செய்தவருக்கு ஏற்பட்ட அவமானம்’ எனக் கருதி பொதுவெளியில் இத்தகைய கொடூரங்களை வெளிப்படுத்தும் இயக்கத்தை” வரவேற்றிருக்கிறது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

அண்மையில் நடைபெற்ற அவர்களது மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், “தற்போதுள்ள ஆணாதிக்க வரையறைக்கு சவால் விடக்கூடிய விதத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தியிருக்கும் பெண்களை சங்கம் பெருமையோடு பார்க்கிறது. இவர்கள் குரலை ஒடுக்குவதையும், இவர்கள் நடத்தை குறித்து அவதூறுகளை சமூக வலைதளங்களில் அள்ளி வீசுவதையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது,” என்று கூறப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன என்றாலும், பதிவு செய்யப்படும் புகார்களின் விகிதம் மிகக்குறைவு. இந்த நடப்புச் சூழலில் மாதர் சங்கத்தின் இந்த வரவேற்பு முக்கியமானது.

பெண்ணை முடக்கிவிடுமா?

ஆனால் இது பெண்களை முடக்குவதற்குத்தான் இட்டுச் செல்லும் என்று சில பெண்ணியவாதிகளே கூறுகிறார்கள். “இப்படியெல்லாம் நடக்கும் என்பதால்தான் பெண்கள் படிதாண்டக்கூடாது என்ற ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது. அதை மீறுவதால்தான் பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு இலக்காகிறார்கள். ஒரு குடும்பத் தலைவியாக, ஆணின் தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் இருப்பதே பெண்ணுக்குப் பாதுகாப்பு. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்தனமாக இந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவில்லை,” என்று பழமைவாதிகள் கூச்சல் போடத் தொடங்கிவிடுவார்கள் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே, ‘மீ டூ‘ இயக்கமே இறுதியில் ஆணாதிக்கவாதிகளுக்கு சாதகமாகவே முடியும் என்று அவர்கள் கூறுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுதான். அப்படிக் கவனத்தில் கொள்வது, பெண்ணின் சிறகுகளைக் கத்தரிக்க முயல்வோரை எப்படி எதிர்கொள்வது என்ற வியூகத்தை வகுக்கத்தானேயன்றி, ‘மீ டூ‘ இயக்கத்தைக் கத்தரிப்பதற்காக அல்ல.

முற்போக்கான மாற்றங்கள் சின்னச்சின்னதாக வருகிறபோதெல்லாம் இப்படிப்பட்ட எதிர்மறைச் சிந்தனைகளால் தடுக்க முயல்கிறவர்கள் எப்போதுமே இருந்து வந்திருக்கிறார்கள். ‘சாதி ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சாதி மறுப்புக் காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம் என்கிறோம்’ என்று கூடச் சொல்கிறார்கள். அதை கொலைகளைத் தடுக்க விரும்புகிற மனிதநேயக் குரல் என்று வரவேற்க முடியுமா?

சமூக ஊடகங்கள் வேண்டுமானால் அண்மைக்காலத்தில் வந்திருக்கலாம், ஆனால் பத்திரிகைகள் பல்லாண்டுகாலமாக வந்துகொண்டுதானே இருக்கின்றன? ‘பாதிக்கப்பட்டவர்கள்’ அப்போதே பத்திரிகைகளை நாடியிருக்கலாமே, நடந்ததை வெளிப்படுத்தியிருக்கலாமே என்று ஒரு ஊடக நண்பர் என்னிடம் கேட்டார். சமூக ஊடகங்கள் கூடுதல் வலிமையாகச் சேர்ந்துள்ளன என்பது உண்மை, ஆனால் இங்கே பிரச்சனை ஊடக வடிவம் அல்ல. துணிந்து வெளிப்படுத்துவதற்கான உலகளாவிய சூழல் இப்போதுதான் உருவாகியிருக்கிறது. மரபார்ந்த ஊடக உலகத்தில் நிலவும் பாலினப் பாகுபாட்டை மறந்துவிடலாகாது. இன்று கூட என்ன நிலைமை? தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீரெட்டி, தனக்கு வாய்ப்பளிப்பதாகக் கூறி ‘அனுபவித்துவிட்டு’ ஏமாற்றியவர்கள் பற்றி வெளிப்படுத்தினார். அதைச் செய்தியாக்கிய டிஜிட்டல் ஏடுகள் உள்ளிட்ட பல பத்திரிகைகள், அவர் நடித்த படங்களிலிருநது எடுக்கப்பட்ட அவரது அரைகுறை ஆடைப் படங்களைச் சேர்த்து வெளியிட்டன. இவ்வளவு ஆபாசமாகக் காட்சியளிப்பவர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூறலாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிற நுட்பமான உத்தியல்லவா இது? இந்தக் குண்டு குழிகளையெல்லாம் தாண்டியல்லவா ‘மீ டூ’, ‘மீ டூ’ என்று வந்துகொண்டிருக்கிறார்கள்!

இதன் தாக்கம் பற்றிய புரிதலுடன், சாதிய ஆதிக்கவாதிகளால் அவமதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அந்தக் கொடுமைகளை இதே போல் பதிவு செய்யலாமே என்ற முயற்சியை எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் தொடங்கியிருக்கிறார். ஊழல்களால் பாதிக்கப்பட்டவர்களும் கூட இதே போல் வெளிப்படுத்தலாமே என்று சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது.

அச்சமும் அறமும்

குற்றம் சாட்டப்படுகிறவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, இனிமேல் இப்படி அத்துமீற நினைப்பவர்களுக்கு, எதிர்காலத்தில் குற்றம் அம்பலமாகும், தங்கள் பெயர் நாறிப்போகும் என்ற அச்சம் வரும், அது குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று ‘மீ டூ’ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும், காம பேரத்திற்கான வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. அத்துமீறல்கள் ஆணுக்கான பெருமையாகவும் கட்டப்பட்டிருக்கிறது. ரைவிலேயே இந்த உறுத்தலும் அச்சமும் மரத்துப்போனதாகி, குற்றங்கள் தொடரும் என்றும் எதிர்பார்க்கலாம். ஆகவே, மனதில் அச்சம் புகுத்தப்படுவதை விட, அறம் ஊன்றப்படுவதே உண்மையான, நம்பகமான, நீடித்திருக்கக்கூடிய மாற்றத்திற்கு இட்டுச்செல்லும். ‘மீ டூ’ இயக்கமே முழுத்தீர்வாகிவிடாது என்றாலும், பாலின சமத்துவ மாற்றத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிற இயக்கங்களுக்கு இதுவும் ஒரு ஆயுதமாகக் கிடைத்திருக்கிறது.

கட்டுரையாளர் அ.குமரேசன்

அறம் ஊன்றப்படுவது பற்றிச் சொல்கிற இந்த இடத்தில் நானும் ‘மீ டூ’ என எனது முன்னாள் அனுபவத்தைப் பகிர்ந்திட விரும்புகிறேன். அதாவது, எனக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறலை அல்ல, பாலியல் அத்துமீறலில் நானே இறங்க முயன்றதை! அதிலிருந்து எப்படி மேலெழுந்தேன் என்பதை! அதை வெளிப்படுத்த இதை விட சரியான நேரம் அமையாது.

என்னோடு பணிபுரிந்த பெண்ணுடன், ஆண்களின் பாலியல் அத்துமீறல்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். “உண்மைதான்… என்னோடு பேசுகிற ஆண்களில் எத்தனை பேர் என் முகத்தை நேராகப் பார்த்துப் பேசுகிறார்கள்? அந்தக் கண்கள் மார்புக்கு இறங்கி இறங்கித்தான் முகத்துக்கு வருகின்றன,” என்று அவர் கூறினார். சூடு வைத்தது போன்ற அந்தக் கேள்வி, என்னைக் வதக்கியது. பெண்களின் முகங்களைப் பார்த்துப் பேசுகிறவனாகப் புடம் போடுவதற்கு அந்தச் சூடு தேவைப்பட்டது. இவராவது இயக்கச் சார்பு உள்ளவர், அது தருகிற தெளிவும் தெம்பும் கிடைக்கப்பெற்றவர். அதற்கெல்லாம் முன்பு, பொதுவாழ்வுக்கே வராத, நான் “அக்கா” என்று அழைத்துப் பழகியவரிடம், “தம்பி” என்ற உணர்வோடுதான் நான் நெருங்கினேன் என்று சொல்ல முடியாது. அது அவருக்குத் தெரியாது என்றும் சொல்ல முடியாது. ஆனால், “என்னடா தம்பி” என்று எப்போதும் போல் என்னருகில் அமர்ந்து முதுகில் தட்டி அரட்டையடித்த, “நீதான் இதைச் செய்யணும்டா” என்று பொறுப்புகளை ஒப்படைத்த அவர் என்னில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. இப்படிப் பல அனுபவங்கள். ஆனால், அப்படி நான் அத்துமீற முயன்றவர்கள் யாருமே, அதைத் தெரிந்துகொண்ட பிறகும் என்னிடமிருந்து விலகிவிடவில்லை. நான் எப்படி மேலெழுந்தேன் என்பதன் பின்னணியில் இவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். பாலின சமத்துவம், தலித் விடுதலை, வர்க்க உணர்வு என்றெல்லாம் திரும்பத் திரும்ப நான் பேசுவதும், எழுதுவதும் அந்தத் தகுதிகள் எனக்கு இருக்கின்றன என்பதால் அல்ல. அதையெல்லாம் பேசுவதற்கும் எழுதுவதற்குமான தகுதிகளை வளர்த்துக்கொள்ளத்தான்.

இப்படிப் பல கோணங்களிலும் விவாதிப்பதற்கான மேடையை ‘மீ டூ’ ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விவாதங்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டுவதாக மட்டும் சுருங்கிவிடாமல், பாலியல் குறித்த ஆரோக்கியமான புரிதல்களுக்கும் விரிவடைய வேண்டும். விவாதத்தின் விளைவுகள் மனப்பூர்வ ஒப்புதலின்றி அத்துமீறுகிற குற்றத்தைத் தடுப்பதோடு நின்று விடாமல், இயற்கையான பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்துவதே அத்துமீறுகிற குற்றமாகிவிடுமா என்ற சிந்தனைக்குள்ளும் இட்டுச்செல்ல வேண்டும். பாலின சமத்துவ இலக்கை அடைய எத்தகைய பயணங்கள் தொடங்கினாலும் மனித உரிமை உணர்வாளர்கள் இணைவார்கள். மீ டூ.