Random image

சிறப்புக்கட்டுரை: தமிழ் சினிமாவில் ஏகபோகம் தகர்கிறதா?

கட்டுரையாளர்: அ. குமரேசன்

(தமிழ்த்திரையுலகில் நாம் அறியாமலேயே… மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதாவது குறிப்பிட்ட ஓரிருவரின் ஏகபோகம் என்பது மாறி, பலரும் கோலோச்சும் காலம் வந்திருக்கிறது. இது குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை. – ஆர்.)

நாம், யாரைப் பற்றியாவது யாரிடமாவது விசாரிக்கிறபோது, “அவங்களுக்கென்னப்பா, ஏகபோகமா இருக்காங்க” என்று பதில் வருவது உண்டு.

எல்லா வசதிகளையும் தேவையான அளவுக்குப் பெற்று வாழ்கிறவர்களை, “நல்லா இருக்காங்க,” என்று சொல்வார்கள். தேவைக்கு அதிமாகப் பெற்றிருப்போரை, “ஏகபோகமா இருக்காங்க,” என்று சொல்வார்கள். ஏகபோகமாக இருப்பது பற்றிய எளிய புரிதல் இது.

ஆனால் ஏகபோகம் என்ற சொல்லுக்கு  இதை விடவும் ஆழமான, விரிவான பொருள் இருக்கிறது. சொல்லப்போனால் அது ஒரு அரசியல் சொல்லாடல். அரசியல் என்றால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்ற கட்சி அரசியல் அல்ல. சமூகம், வர்க்கம், பொருளாதாரம், பண்பாடு என அனைத்திலும் நிலவுகிற ஆதிக்கம் ஒரு அரசியல்.

அதற்கு எதிரான கோபம் ஒரு அரசியல். ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான சர்வாதிகாரம் ஒரு அரசியல்.  சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் ஒரு அரசியல். அந்த வகையில், எந்தவொரு துறையிலும் ஒரு தனி மனிதர் அல்லது ஒரு குழுமம் அல்லது ஒரு நிறுவனம் தனக்குப் போட்டி இல்லை என்று நிறுவிக்கொள்வதும் ஒரு அரசியல். அந்த அரசியல் உட்பொருளைக் கொண்டுள்ள சொல்லாடலே ஏகபோகம் என்பது.

பொருளாதாரக் களத்தில் இந்த ஏகபோகத்தைப் பளிச்சென்று காணலாம். குறிப்பிட்ட ஒரு தொழில் அல்லது வர்த்தகத்தில் ஒரு பெரு நிறுவனம் தன்னை எதிர்ப்பார் இல்லை என்று சந்தையின் பெரும்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஒரு ஏகபோகம். இன்னொரு நிறுவனம், குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டுமல்லாமல் எல்லாத் தொழில்களிலும் முதலீடு செய்து, அதே முதலீட்டு பலத்துடன் விளம்பரம் செய்து விநியோகிப்பாளர்களையும் வியாபாரிகளையும் தனது கவர்ச்சிகரமான ஆதாயத் தள்ளுபடி வலைக்குள் கொண்டுவந்து, தானே ஆதிக்கம் செலுத்துவது இன்னொரு ஏகபோகம்.

எந்தத் துறையானாலும் ஏகபோகம் என்பது ஒரு ஆரோக்கியக் கேடுதான். கலைத்துறைக்கும் இது பொருந்தும். கலைத் திறனும் சந்தை நிலவரமும் இணைந்த சினிமாவிற்கு நிச்சயமாகப் பொருந்தும். எந்தத் துறையானாலும் போட்டி இருக்க வேண்டும், போட்டிக்கான சம வாய்ப்புகள் இருக்க வேண்டும், வாய்ப்புகளுக்கான சம தளம் இருக்க வேண்டும். இன்றைய சூழலில், வணிகக் களத்தில் சமமான போட்டி நிலவுவது போன்ற தோற்றம் இருந்தாலும் அது உண்மையில்லை. கடலில் ஒரு திமிங்கிலம் ஒரு அயிரை மீனைப் பார்த்து, “இந்தக் கடல் எனக்கும் உனக்கும் சமமானதுதான். நீ வாய் திறந்து என்னை விழுங்கலாம், நானும் உன்னை விழுங்கலாம்,” என்று சொல்லுமானால் அது சமமான போட்டியா? யாரால் விழுங்க முடியும்? யார் விழுங்கப்படுவார்? பன்னாட்டு நிறுவனத்தின் சில்லறை விற்பனை வளாகமும் உள்நாட்டு அண்ணாச்சியின்  மளிகைக்கடையும் கடல் போன்ற சந்தையில் சமமான போட்டியில் ஈடுபடுவதாகச் சொன்னால் அது எவ்வளவு பெரிய பரிகாசம்?

தமிழ் சினிமாவிலும் இந்தப் பரிகாச நிலை இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நடிப்பு, இசை இரண்டு துறைகளிலும் சிலரது ஏகபோகம் நிலவி வந்துள்ளது. மக்களை ஈர்த்த, அவர்களின் அன்பைப் பெற்ற முன்னணி நடிகர்களாகவோ இசையமைப்பாளர்களாகவோ இருப்பது வேறு. மக்கள் தங்களது அன்றாட அலுப்பிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்கு உதவுகிற கலைஞர்களைச் சிறப்பிப்பதும், கொண்டாடுவதும் வரவேற்கப்பட வேண்டியதே. கலை இலக்கியப் படைப்பாளிகளைக் கொண்டாடாத சமூகம் மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத தேங்கிப்போன சமூகமாகவே இருக்கும்.

ஆனால், இங்கே என்ன நடந்தது என்றால் சில குறிப்பிட்ட கலைஞர்களின் ஏகபோக செல்வாக்கு என்பதாக மாறியது. செல்வாக்குள்ள நடிகர்களைப் படதிற்கு ஒப்பந்தம் செய்ய முடியாதபோதுதான், அவர்கள் கேட்கிற தொகையைக் கொடுக்க இயலாதபோதுதான் மற்றவர்களை நாடுகிற நிலைமை ஏற்பட்டது. குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் அவர்கள் சிறப்பாக நடிப்பார்கள், அவர்கள் நடித்தால்தான் அந்தக் கதாபாத்திரங்கள் உயிரோட்டத்துடன் சித்தரிக்கப்படும் என்ற கோணத்தில் அல்லாமல், அவர்களை ஒப்பந்தம் செய்தால் படம் விற்பனையாகிவிடும், விநியோகிப்பாளர்கள் கூடுதலாக விலை கொடுக்கத் தயாராக இருப்பார்கள் என்ற கோணத்தில் அவர்களைத் தயாரிப்பாளர்கள் நாடினார்கள்.

அவர்கள் ஒப்பந்தமாகிவிட்டால், அடிப்படைக் கதைiயே கூட அவர்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கு இயக்குநர்கள் தயாராக இருந்தார்கள். தனது படத்தின் கதை இப்படி இருக்க வேண்டும், அதில் தனது கதாபாத்திரம் இப்படி இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறவராக, அப்படி மாற்றாவிட்டால் நடிக்க முடியாது என்று மறுக்கக்கூடியவராக நடிகர் மாறிப்போனார். எந்த நடிகர்களின் பங்களிப்பால் தமிழ் சினிமாவுக்கு ஒரு அடையாளம் கிடைத்ததோ, வணிகம் சார்ந்த வளர்ச்சி ஏற்பட்டதோ அதே நடிகர்களின் இப்படிப்பட்ட ஏகபோகத்தால் தமிழ் சினிமாவின் பயணத்திற்கு முட்டுக்கட்டையும் போடப்பட்டது.

இதே போன்ற நிலைமையை இசைத்துறையிலும் பார்க்க முடிந்தது. குறிப்பிட்ட சில இசையமைப்பாளர்கள் ஒப்பந்தமானாலே போதும், படத்தின் விற்பனை உறுதியாகிவிடும்! அவர்களை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை, அவர்கள் கேட்கிற தொகை கட்டுப்படியாகவில்லை, சில பாடலாசிரியர்களோடு பிரச்சனை என்பதால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்ற கட்டாயங்களில்தான் வேறு இசையமைப்பாளர்களைத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நாடினார்கள்.  மற்ற பல அருமையான இசையமைப்பாளர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டதும், அவர்களது இசை மலர்கள் பூக்காமலே ரசிகர்கள் இழக்க நேரிட்டதும்  மட்டுமே இதன் மோசமான பாதிப்பல்ல;  இப்படியான ஏகபோகத்தில் திளைத்த இசையமைப்பாளர்களுமே கூட தங்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியாதவர்களாக, முந்தைய கலையாற்றலை வெளிப்படுத்த இயலாதவர்களாகப் பின்தங்கிப்போனார்கள்.

ஒப்பந்தம் செய்யப்படும் படத்தில் எட்டு பாடல்கள் இருக்குமானால், அந்த எட்டும் இவர்களது இசையால் மிகப்பெரிய ‘ஹிட்’ என்றிருந்த நிலைமை படிப்படியாகச் சுருங்கியது. படத்தில் ஒரு பாட்டு மட்டுமே பரவலாக ஈர்க்கும், மற்ற பாடல்களெல்லாம், “இந்தப் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர் என்று சொன்னார்களே,” என்று விமர்சகர்கள் சொல்லிக்காட்டுகிற நிலைமை ஏற்பட்டது. குறிப்பிட்ட இசையமைப்பாளர்களின் தீவிர ரசிகர்கள் கூட, அவர்களது இசையமைப்பில் வெளியான பழைய பாடல்கள் பற்றித்தான் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருந்தார்களேயன்றி, புதிய பாடல்கள் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் போனது.

ஏகபோகம் செலுத்திய எந்த நடிகரை வேண்டுமானாலும், எந்த இசையமைப்பாளரை வேண்டுமானாலும் இதில் பொருத்திப் பார்க்கலாம். தயாரிப்பாளர்கள் பெரிய நிறுவனமாக உருவெடுத்தது உண்டு. ஆனால் ஏகபோகம் என்ற நிலைமை ஏற்பட்டதில்லை. அந்தப் பெரிய நிறுவனங்கள் கூட, புதிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இப்போது கிட்டத்தட்ட களத்திலேயே இல்லை என்ற காட்சி. சில பெரிய நிறுவனங்களின் படப்பிடிப்புத் தளங்களும் தொழில்நுட்பப் பிரிவுகளும் திரையிட்டுக்காட்டுக் காட்டுவதற்கான சிறிய முன்திரையிடல் அரங்குகளும்தான் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்த முன்னாள் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்நாள் பெரிய திரையில் காண முடியவில்லை.

இளையராஜா – எம்.எஸ்.விஇயக்குநர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொகுப்பாளர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மற்றவர்களைப் பொறுத்தவரையில், தங்களின் திறமையாலும் முனைப்பாலும் கூடுதல் வாய்ப்புள்ளவர்களாக, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பெற்றவர்களாக இருந்தார்கள். நல்வாய்ப்பாக அவர்கள் ஏகபோக நிலையைத் தொட்டதில்லை.  பெண் நடிகர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் தவிர்த்து மற்ற பெண் கலைஞர்கள் எண்ணிவைத்தது போலச் சில படங்களில் நடித்துவிட்டு விடை பெறுகிற நிலைமையில் மாற்றமில்லை.

இதன் பின்னணியில், ஏகபோக நடிகர்கள் அல்லது இசையமைப்பாளர்களின் சந்தை வலிமைக்கு முக்கிய இடம் வகித்து வந்திருக்கிறது. சினிமாவின் வணிகக் கட்டமைப்பு சார்ந்த போக்கு இது.

ஆயினும், தற்போது நடிப்பு, இசை ஆகிய இரண்டிலும் முந்தைய ஏகபோகம் தகரத் தொடங்கியிருக்கிறது, இனி யாரும் ஏகபோகச் செல்வாக்கு செலுத்த முடியாது என்ற மாற்றம் நிகழ்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால், தியாகராஜ பாகவதர், பி.பு. சின்னப்பா ஆகியோருக்குப் பிறகு எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் என்றும், அவர்களுக்குப் பிறகு ரஜினி காந்த், கமல்ஹாசன் என்றும், பின்னர் அஜித், விஜய் என்றும் இருந்து வந்த ஏகபோகம் இப்போது இல்லை எனலாம். சூர்யா, விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன், விஷால் சிவா, ஜெய், ஆர்யா, ஜீவா, கார்த்தி, ஜெயம் ரவி, உதயநிதி என தனிப்பட்ட ஈர்ப்பு விசையோடு அதேவேளையில் ஏகபோக ஆதிக்கம்  என்ற வலையில் சிக்கிக்கொள்ளாத நடிப்புக் கலைஞர்கள் களமாடிக்கொண்டிருக்கிறார்கள். பெண் நடிகர்களில் இன்று நயன்தாரா ஒரு தனித்தடம் பதித்திருக்கிறார். தமன்னா, தன்ஷிகா, அனுஷ்கா, ஸ்ரீவித்யா, கீர்த்தி சுரேஷ், கஜோல் அகர்வால் உள்ளிட்டோரும் மின்னிக் கொண்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்களில் கே, யுவன் சங்கர், அனிருத், ஜிப்ரான், இமான், ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆன்ட்டனி, சந்தோஷ் நாராயண், சாம், ரூபன் என்று காற்றை இனிமையாக்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் கிட்டத்தட்ட நூறு இளம் இசையமைப்பாளர்கள் நம் செவிகளுக்கு விருந்தளித்திருக்கிறார்கள் என்கிறார் தமிழ் சினிமாக்களைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகரான நண்பர் ஒருவர்.

சினிமாச் சந்தையில் இன்று வேறு வகையான ஏகபோகம் நிலவுகிறது. சில ஏகபோக நிறுவனங்கள் திரையரங்குகளைத் தங்களது பிடியில் வைத்திருக்கின்றன. படத்தயாரிப்புக்கான கடன் நிதி, விநியோகம் ஆகியவையும் சில நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டாகியுள்ளன. தங்கள் கதையை இந்தப் பெரிய நிதி நிறுவன அதிபர்களிடம் சொல்லி ஏற்கச் செய்ய வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டிருப்பது பற்றி இயக்குநர்கள் புலம்புகிறார்கள். அதே போல், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் படம் வெளியாகிற நாட்களில் அநேகமாக எல்லாத் திரையரங்குகளிலும் அந்தப் படம் மட்டுமே காட்சிப்படுத்தப்படும், மற்றவர்களின் படங்கள் காத்திருக்க வேண்டும் என்ற ஏகபோகமும், பல நல்ல திரைப்பட வெளியீடுகளுக்குத் தடைக்கல்லாக இருக்கிறது.

வர்த்தகத்தோடு இணைந்த இன்றைய சமூகப் பொருளாதார அமைப்பில், சினிமா மட்டும் சந்தைக்கு அப்பாற்பட்டதாகிவிட முடியாதுதான். ஒரு வகையில், ஒரு படத்தின் சந்தை வெற்றி என்பது எத்தனை கோடி மக்களை அந்தப் படமும் அதன் கருத்தும் சென்றடைந்திருக்கின்றன என்பதற்கான உரைகல்லாகவும் இருக்கிறது. ஆகவே வர்த்தக சினிமா, வசூல் வெற்றி என்பதெல்லாம் முகம் சுளிப்பதற்கானவை அல்ல. எப்படிப்பட்ட படம், அதன் உள்ளடக்கம் என்ன என்ற பார்வையோடுதான் விமர்சனங்கள் அமைய வேண்டும். முற்போக்கான கருத்துள்ள படம் வணிக வெற்றியையும் அடைகிறதா அல்லது வணிகத்திற்காகப் பிற்போக்கான கருத்து வலியுறுத்தப்படுகிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.

இப்படியெல்லாம் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் தற்காலத் தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள ஏகபோகத் தகர்வும் உதவும் என்று எதிர்பார்க்கலாம். இன்னமும் பழைய பாதையிலேயே சுற்றவைக்கிற முதலீடு, கடன் உள்ளிட்ட இதர ஏகபோகங்கள் தகர்வதற்கும் இது இட்டுச் செல்லட்டும் என்று ஆசைப்படலாம்.