Random image

சிறப்புக் கட்டுரை: ஓய்ந்து கிடப்பதல்ல ஓய்வு…

கட்டுரையாளர்: அ. குமரேசன்

மிகப் பலரும் கிடைக்க வேண்டும் விரும்புகிற, கிடைத்தபின் இனி என்ன செய்வது என்று அலுத்துக்கொள்கிற ஒன்று இருக்கிறது. ஏதோ வேதாந்தமாகப் பேசுவது போல் இருக்கிறதா? வேறொன்றுமில்லை, அதுதான் ஓய்வு!

அன்றாட வேலைகளிலிருந்து சிறு பொழுது ஓய்வை உடலும் உள்ளமும் நாடுவது இயல்பு. அலுவலகத்தில் அல்லது தொழிலகத்தில் பல ஆண்டுகள் வேலை செய்த பின், சட்டப்படியே விடைகொடுத்து அனுப்பப்படுகிற பணி ஓய்வு வேறு வகை. சொந்தத் தொழில் மேற்கொள்வோரும் கூட, நெடுங்கால ஈடுபாட்டைத் தொடர்ந்து வயது முதிர்ந்த காலத்தில், பொறுப்புகளை வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வாய் இருக்கத் திட்டமிடுகிறார்கள். பணி ஓய்வுக்காலத்திற்கென்றே காப்பீட்டு நிறுவனங்கள் தனித் திட்டங்கள் வைத்துள்ளன.

இந்த ஏற்பாடுகள் இருந்தும் பலர் ஓய்வுக்காலத்தில் ஒரு மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள். தன்னைத் தானே சார்ந்திருக்கக்கூடிய வகையில் ஒரு வருவாய் வழி இருப்பவர்கள் மட்டுமல்லா மல், போதிய பொருளாதாரப் பின்புலம் உள்ளவர்களும் கூட அந்தச் சோர்வைச் சந்திக்கிறார்கள்.

‘வியட்னாம் வீடு’ என்றொரு சினிமா 1970ல், சிவாஜி கணேசன், பத்மினி உள்ளிட்டோர் நடிப்பில், பி. மாதவன் இயக்கத்தில் வந்தது. அதற்கு முன் அதே தலைப்பில் நாடகமாக எழுதி, ‘வியட்னாம் வீடு சுந்தரம்’ என்றே அடையாளப் பெயர் பெற்ற சுந்தரம், எப்போதும் சண்டை நடந்துகொண்டிருக்கிற வீடு என்ற பொருளில் அந்தப் பெயரைச் சூட்டினாராம். வியட்நாமை ஒடுக்க அப்போது அமெரிக்க அரசு ராணுவ  அத்துமீறல் உள்பட என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தது, அதை எதிர்த்து வியட்நாம் மக்கள் எப்படி வீரத்துடன் போராடிக்கொண்டிருந்தார்கள் என்ற அரசியல் புரிதல் இல்லாமல் அப்படியொரு பெயர் வைத்ததற்காகக் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார் சுந்தரம். கதை என்னவென்றால், அலுவலகத்திலும் வீட்டிலும் கம்பீரமாக வலம் வருகிற பத்மநாபன், பணி ஓய்வுக்குப் பிறகு பிள்ளைகளால் மதிக்கப்படாதவராகத் தனிமைப்பட்டுப்போன உணர்வுக்கு உள்ளாகிறார். பிள்ளைகள் அவருடைய அருமையை உணர்ந்து திருந்துகிறபோது அவர் கதை முடிந்துவிடுகிறது.

பணி ஓய்வு பெற்றவர்கள் பலரும் பத்மநாபனோடு தங்களைப் பொருத்திக் பார்த்துக்கொள்கிற அளவுக்கு உயிரோட்டமாக அமைந்த படம் அது. ஆனால், சிக்கல் என்னவோ பத்மநாபனிடமி ருந்துதான் தொடங்குகிறது என்பதைப் படம் சொல்லத் தவறுகிறது. என்ன சிக்கல்?

தனது குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக மட்டும் உழைத்தவர் பத்மநாபன். குடும்பப் பொறுப்பின்றிச் சுற்றுகிறவர்களை விடவும் குடும்பத்திற்காக உழைப்பது நல்லதுதான். ஆனால் குடும்பத்திற்காக மட்டும் உழைப்பதென்பது சுயநலத்தின் நீட்சிதான். ஆகவேதான் ஒருவரது பணி ஓய்வுக்காலத்தில், அவரிடமிருந்து வந்துகொண்டிருந்த பணம், அதிகாரத் தொடர்பின் வாய்ப்புகள் ஆகியவை நின்றுபோகிறபோது, அவருக்குக் குடும்பத்தில் இனி மதிப்பில்லை என்ற நிலைமை ஏற்படுகிறது. இதிலே ஒரு உளவியல் சிக்கலும் உண்டு. அது வரையில் தானாகவே விரும்பிப் பால் வாங்கச் செல்வது போன்றவற்றைச் செய்துவந்தவர், பணி ஓய்வுக்குப் பிறகு, இயல்பாக மனைவியோ மகளோ மருமகளோ பால் வாங்கிவரச் சொன்னால், தான் சும்மா இருப்பதால்தான் இந்த வேலையைக் கொடுக்கிறார்கள் என்று நினைத்து மனதுக்குள் பொருமுவார்கள்.

இது “வயதாகிவிட்டது” என்ற எண்ணத்தோடும் தொடர்புடையதாகிறது. மற்றவர்களும் அப்படி நினைத்து, “அதுதான் வயசாயிடுச்சுல்ல, சாமியைக் கும்பிட்டுக்கிட்டு ஓரமா கிடக்க வேண்டியதுதானே,” என்று அலட்சியப்படுத்துவதுண்டு. அவரே கூட தன்னை முதுமை தீண்டிவிட்டது என்று கருதி, ஒரு இயலாமை உணர்வை வளர்த்துக்கொள்வதும் உண்டு.

வயதாதல் என்பதன் பொருள் என்ன? கைகளும் கால்களும் முன்போலச் செயல்பட மாட்டா, மூளையும் சுறுசுறுப்பாக இராது என்பதே வயதாவதன் பொருள் என்று நினைத்துக்கொள்கிறோம். “வயசாயிடுச்சு, அதுக்கேத்தபடி நடந்துக்கிட மாட்டீங்களா” என்ற இடித்துரைகள் எனக்கே அன்போடு வருவதுண்டு. வயதாகிவிட்டதே, முன்போலச் செயல்பட முடியாதே, முன்போல மற்றவர்களைக் கவர முடியாதே என்றெல்லாம் கவலைப்படுகிறவர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

ஆனால், வயதாவது என்பதன் பொருள் வாழ்க்கையின் முடிவு நெருங்குவதல்ல, மாறாக வாழ்ந்துகொண்டிருப்பதே! ஆம், கதை முடிந்துபோனவர்களுக்குத்தான் மாறாத ஒரே வயது. “நாற்பது வயசில் போயிட்டாரு,” “ஐம்பது வயசுல மண்டையைப் போட்டுருச்சு,” என்று செத்துப்போன வயதையே சொல்லிக்கொண்டிருப்போம். “என்றும் பதினாறு” என்றிருக்க மார்க்கண்டேயன் கேட்ட வரத்தை சிவபெருமான் உடனடியாக மகிழ்ச்சியாக அருளினார் என்றால் என்ன பொருள்? அந்தப் பதினாறு வயதுடன் அவனுடைய கதை முடிந்துவிட்டது!

வயதாகிவிட்டதை வாழ்க்கையின் அடுத்த நிலையாகக் கருதி வரவேற்றால் எந்த வயதிலும் மன நிறைவோடு வாழலாம். ஒரு முதுபெரும் பெரிசு இன்னொரு முதுபெரும் பெரிசிடம், “எண்பது வயசாயிடுச்சு… உடம்பெல்லாம் வலி, எப்பப் பார்த்தாலும் சோர்வா இருக்கு. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்கப்போறோமோன்னு ஃபீல் பண்றேன். உனக்கும் என் வயசுதானே, நீ எப்படி ஃபீல் பண்ற,” கேட்டாராம். அந்த இரண்டாவது பெரிசு, “நானா… ஒரு குழந்தையாட்டம் ஃபீல் பண்றேன்,” என்று உற்சாகமாகச் சொன்னாராம். “ஆ… அதெப்படி,” கேட்டாராம் முதலாமவர். “எனக்குத் தலையிலே இப்ப முடியே இல்லை. வாயிலே பல்லே இல்லை. நான் பேசுறது மழலை மாதிரி இருக்குங்கிறாங்க. இப்பெல்லாம் படுக்கையிலேயே உச்சா வேற போயிடுறேன்… அதான்,” என்றாராம் இரண்டாமவர்.

இப்படி ரசனையோடு எடுத்துக்கொண்டால் வயது ஒரு மிரட்டலே அல்ல. இந்த மாற்றங்கள் பொதுவாக எல்லோருக்கும் நிகழ்வதுதான். இந்த வயதில் ஒருவருக்கு உடல் தெம்போடு இருக்கும், ஆனால் நினைவாற்றல் குறைந்திருக்கும். இன்னொருவருக்குக் கூர்மையான நினைவாற்றல் இருக்கும், உடல் தளர்ந்துபோயிருக்கும்.

பலர் நன்றாக உறங்குவதே ஓய்வு என்று கருதுகிறார்கள். “நூறாண்டு காலம் வாழ்க” என்று வாழ்த்துகிறோம். ஒருவர் அப்படி உண்மையாகவே நூறு ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொள்வோம். அதில் 50 ஆண்டுகள் இரவிலும் பகலிலும் உறங்குவதிலேயே கழிகிறது. அந்த நூறு ஆண்டு என்பது, பேரண்டத்தின் வயதோடு ஒப்பிட்டால் கொசுவின் மீசை நுனி அளவே. அதைப்போய்த் தூங்கிக் கழிப்பதாவது? உடலுக்கும் சிந்தனைக்கும் புத்துணர்ச்சியூட்டத் தேவைப்படும் அளவுக்கு – மொபைல் போன் பேட்டரி ரீசார்ஜ் செய்வது போல – உறங்கினாலே போதுமானது.

“மனிதர்கள் வயதாகிவிடுவதால் விளையாடுவதை நிறுத்திக்கொள்வதில்லை. அவர்கள் விளையாடுவதை நிறுத்திக்கொள்வதால்தான் வயதாகிறது,” என்றார் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞர் ஒலிவர் வெண்டல் ஹோம்ஸ். விளையாட்டு என்று அவர் சொன்னது விளையாட்டு மட்டுமாகாது, படைப்பு, வாசிப்பு, உழைப்பு என்று பன்முக ஈடுபாடாக விரிவுபடுத்திப் புரிந்துகொள்ளலாம்.

எதை வேண்டுமானாலும் மீட்டு விடலாம். இழந்த பணத்தை, இழந்த நட்பை, இழந்த காதலை என மீட்க முடியாதது என எதுவும் இல்லை. மீட்கவே முடியாததாக இழப்பது காலத்தைத்தான். ஒவ்வொரு நொடியிலும் தானாகப் போய்க்கொண்டிருப்பது பொழுது. அதைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவது போல, சும்மா இருப்பது, வெறும் பொழுதுபோக்குகளில் மட்டும் காலத்தைக் கடத்துவது, உறங்கியே கடத்துவது மூன்றுமே தற்கொலைக்கு ஒப்பான செயல்கள்தான். அணுக்கள் சும்மா இருந்திருந்தால் இந்தப் பேரண்டம் உருவாகியிருக்குமா, பூமி உதயமாகியிருக்குமா, உயிர்கள் தோன்றியிருக்குமா? ஆகவே, பணி ஓய்வுக் காலத்தில் சும்மா இருப்பது இயற்கைக்கே மாறானது.

சொல்லப்போனால், மரணத்திற்குப் பிறகும் கூட உடல் சும்மா இருப்பதில்லை. புதைக்கப்பட்டால் அழுகி மண்ணோடு மக்குகிறது, எரிக்கப்பட்டால் சாம்பலாகிறது. அப்படியானால் ஓய்வின் பெயரால் சும்மா இருக்கலாமா?

அப்படியானால் ஓய்வு எனப்படுவது யாது? ஓய்வு என்பது பிறிதொரு வேலை!

அந்தப் பிறிதொரு வேலை வழக்கமான தடத்திலிருந்து மாறுபட்டதாக இருக்கலாம். அலுவலகப் பணியிலேயே மூழ்கியிருந்தவர்கள் பல்வேறு வகையான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். அது தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் என்ற எல்லைகளைத் தாண்டி, சமூகத்திற்காக உழைக்கத் தொடங்கினால், வியட்நாம் வீட்டு பத்மநாபனுக்கு ஏற்பட்ட நிலைமையோ மன உளைச்சலோ நமக்கு ஏற்படாது. தனிமை உணர்வுக்கே இடமில்லாமல் போய்விடும்.

சும்மா இருப்பதை விட, தெருவுக்காக, குடியிருப்புப் பகுதிக்காக உழைத்தல் சிறப்பு. தெருவோடு நிற்காமல் ஊருக்காக உழைத்தல் மேலும் சிறப்பு. ஊரோடு சுருங்கிவிடாமல் சமுதாயத்திற்காக உழைத்தல் பன்மடங்கு சிறப்பு. இன்று ஓய்வூதியர்கள் பலர் தங்களுக்கென சங்கம் அமைத்து, சக ஓய்வூதியர்களுக்காகப் போராடுவதோடு, பணியில் இருக்கிற ஊழியர்களின் கோரிக்கைகளுக்காகவும் தெருவுக்கு வருகிறார்கள். இது ஒரு முக்கியமான வளர்ச்சிப் போக்கு. ஓய்வுக் காலத்தை இப்படிப்பட்ட சங்கப்பணிகளில் செலவிடுவது கூட, ஒரு முக்கியமான சமுதாய வரவுதான்.

பணி ஓய்வு பெறுவதில் மகிழ்ச்சியடைவதற்கான மற்றொரு கோணமும் உண்டு. ஒருவர் பணி ஓய்வு பெறுகிறபோது காத்திருக்கும் ஒரு இளைஞருக்கான வாய்ப்புக் கதவைத் திறந்துவிடுகிறார். அந்த இளைஞரின் பணிக்கும் சமூகப் பங்களிப்புக்கும் வழியமைத்துத் தருகிறார். இந்தக் கண்ணோட்டத்துடனும்தான், ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்துகிற யோசனையை அரசு உலாவவிடுகிறபோதெல்லாம் தொழிற்சங்கங்கள் அதை எதிர்க்கின்றன.

பணி ஓய்வு பெற்ற பெற்ற தாயையோ தந்தையையோ மதிப்பதும் பாதுகாப்பதும் அவர்களது பிள்ளைகளின் பொறுப்பு மட்டுமல்ல. அது, இத்தனை காலம் அவர்களின் உழைப்பால் பயனடைந்த சமூகத்தின் பொறுப்புமாகும். சமூகத்தின் தலை அரசுதான் என்பதால், அரசின் கடமையாகும். ஆனால் நடப்பது என்ன?

“மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று அதை விட்டுவிடுவதில்லை,” என்றார் மாவோ. அதே போல், அரசின் நடவடிக்கைகள் சும்மா இருக்க விடுவதில்லை. ஆட்குறைப்பு, புதிய நியமனங்களுக்குத் தடை, பேச்சுவார்தைக்கு வராமல் இழுத்தடிப்பு என்றெல்லாம் பணியில் இருக்கிற ஊழியர்களை அலைக்கழித்து, சுமை ஏற்றுகிற அரசு ஓய்வு பெற்றவர்களை ஒரு பொருட்டாகக் கருதுகிறதா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. மூத்த குடிமக்கள் என்ற தகுதியைப் பெற்றுவிட்டவர்களுக்கு, அவர்களது பங்களிப்பையும் அனுபவ அறிவையும் மதித்து, எல்லா வகையான வசதிகளையும் வழங்குவதே பொறுப்பான அரசின் அடையாளம். ஆனால், ரயில் கட்டணச் சலுகையை மூத்த குடிமக்கள் தாங்களாக முன்வந்து விட்டுக்கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்! சமையல் எரிவாயு மானியத்தையும், அரிசி-கோதுமை மானியங்களையும் விட்டுக்கொடுக்கக் கேட்டுக்கொள்வது போல! மூத்தோர் மனதில் ஒரு சங்கட உணர்வை ஏற்படுத்தி, தங்களுக்கான உரிமையை விட்டுக்கொடுக்க வைப்பதை எண்ணி அரசும் ஆட்சியாளர்களும் வெட்கப்பட வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில், ஊழியர்களின் ஓய்வூதிய நிதியைப் பையப் பையப் பங்குச் சந்தை சூதாட்டப் பணமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் புகுத்தப்படுகின்றன. இதற்காக அரசும் ஆட்சியாளர்களும் தலைகுனிந்து நிற்க வேண்டும். பண மதிப்பு ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூத்தோர் மீதான தாக்குதல்களுமாகும்.

மரம் போல் இருந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக நாளும் நாட்டில் மதப் பகைமை தூண்டுதல், சாதி ஆணவக் கொடுமைகள், கருத்துரிமை ஒடுக்குமுறைகள் என்றெல்லாம் மோசமான காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. அதற்கெல்லாம் மாற்றாக, அனுபவ அறிவாயுதம் சுழற்றிக் களப்பணியாற்றுகிற அரசியல் கடமைக்கு முதுமையும் இல்லை, ஓய்வும் இல்லை.

ஓய்வுக் காலத்தில் ஒருவர் பாதுகாப்பான, நம்பிக்கை மிகுந்த வாழ்க்கையைத் தொடர, அவரது பணிக்கால ஊதியத்தில் 80 விழுக்காடு ஓய்வூதியமாகத் தரப்பட வேண்டும் என்று ஒரு அமெரிக்க ஆய்வறிக்iகை பரிந்துரைக்கிறது. அங்கேயும் அது இன்னமும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. பணிக்காலத்திலேயே பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் பணத்தை, அவர்கள் ஓய்வு பெறும்போது ரொக்கமாகவோ, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பயன்களாகவோ வழங்குகிற ஏற்பாடுதான் அங்கே பெருமளவுக்கு இருக்கிறது. நம் ஊரில்?

ஓய்வூதியம் கொடுப்பதே ஒரு கருணை சார்ந்த பெருந்தன்மையான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 1977ல் தாராளமயமாக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு தனது பல்வேறு துறைகளில் அறிமுகப்படுத்தியது. பின்னர் இது பாதுகாப்புத் துறையின் முப்படை வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், 1979 ஏப்ரல் 1க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்குத்தான் இது பொருந்தும் என்றும், மார்ச் 31 வரையில் ஓய்வு பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்றும் ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து டி.எஸ்.நகரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 1982ல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “ஓய்வூதியம் என்பது அரசால், அதன் கருணையால் அளிக்கப்படுகிற பிச்சையல்ல. மாறாக வியர்வை சிந்தி உழைத்த உழைப்பிற்குக் கொடுபடாமல் நிறுத்திவைக்கப்பட்ட ஊதியமேயாகும்,” என்று அறிவித்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அந்தத் தீர்ப்பு எழுதப்பட்ட டிசம்பர் 17ம் நாள் நாடு முழுவதும் மத்திய-மாநில ஓய்வூதியர் சங்க்ங்களால் ஓய்வூதியர் தினம்  என்றே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தின் “தலைவராக” அல்லாமல், குடும்பத்தினரின் தோழராகப் பழகி வந்தால், ஓய்வுக் காலம் புலம்பவிடாது. குடும்பத்துடனான தோழமையை வெளியேயும் விரிவுபடுத்திக்கொண்டால் சமூகம் கைகொடுக்கத் தயங்காது. ஓய்வு பெற்ற மூத்தோரை ஓய்ந்துபோனவர்களாக்கிவிடாத சமூகப் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாதுகாப்பேயாகும்.