கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன்

A tip of Ice berg என்று சொல்வார்கள்.. பேராசிரியை நிர்மலாதேவி போன்ற பெண்களும், மிகப்பெரிய சதைச் சந்தையின் எ டிப் ஆஃப் ஐஸ் பெர்க்தான்.

வெளியே தென்படும் அந்த மேல்நுனிக்கு கீழே கண்ணுக்கு தெரியாமல் மறைந்துகிடக்கும் பனிப்பாறையின் அத்தனை பக்கமும் பயங்கரமானவை.. ஆனால், நம்மைச்சுற்றி சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருப்பவை தான். இன்று நேற்றல்ல, காலம் காலமாகவே. நடப்பு நிர்மலா விஷயத்தை பார்த்துவிட்டு, அதனை பிறகு விரிவாக பார்ப்போம்.

மாணவிகள் கொஞ்சம் முக்கியஸ்தர்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டுபோனால் அவர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும் என்று சொல்கிறார். மாநில கவர்னர், பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் என அவரது உரையாடலில் வார்த்தைகள் அடிபடுகின்றன.

அதிகாரத்தை பயன்படுத்தி பெண் வர்க்கத்திடம் சில்மிஷங்கள் அரங்கேற்றப்படுவது ஒன்றும் புதிதல்ல.. அது ஒரு, நீண்ட கால கேவலம். வகுப்பில் கண்டிக்கிறேன் பேர்வழி என்று வயதுக்கு வந்த மாணவிகளை தொடக் கூடாத இடங்களில் கை வைத்து திருகுவது என பள்ளி ஆசிரியர்களில் உள்ள சில காம ஆடுகள் மேய்வதை பார்க்காமலா இருக்கிறோம்?

பேராசிரியை நிர்மலா, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல துடிக்கிறார் என்பதை ஆடியோ கோடிட்டு காட்டுகிறது. ஆனால் நிர்மலா விஷயத்தில் பல லாஜிக்குகள் இடிக்கின்றன.

ஆதாயத்திற்காக உடலை விற்க வா என்று கும்பலாக வைத்துக் கொண்டு பாடம் எடுப்பது முற்றிலும் விநோதமாக இருக்கிறது. அங்கே என்ன கட்டிட சித்தாள்  வேலைக்கா ஆள் எடுக்கிறார்கள், கும்பலை கூட்ட?

தரகு பெண்களின் வாய்த்திறன் மிகவும் அலாதியானது. பொது வாக, அவர்கள் இதுபோல கும்பலை சேர்த்துக்கொண்டெல்லாம் கற்றுச்சோற்றை விரிக்கமாட்டார்கள்.

பெரிய அளவில் ரகசிய வியாபாரத்தை நடத்துபவர்கள், அட்மிஷன் லெவலிலேயே ‘’நீயும் சோரம் போகப்போகி றாய், நானும் சோரம் போகப்போகிறேன்’’ என்று சக பெண்களே பரஸ்பரம் ஒருவரையொருவர் அவமானகரமாய் பார்த்துக்கொள்ளும்படி வைக்கமாட்டார்கள்.

மூளைச்சலவை என்பது தனித்தனியாகத்தான் நடக்கும். ஏனெனில் தன்னிடம் அதுவும் யாரும் இல்லாதபோது மட்டுமே பேசுகிறார் என்பதால் ரகசியம் காக்கப்படுவதாக அந்தப்பெண் நம்புவார்.. பாதுகாப்பையும் உணர்வார்.

தோழிகளாக இருக்கும் ஒரு குரூப்பை சேர்ந்த பெண்களை ஒரே நேரத்தில் தரகுப்பெண் அவர் வழியில் பயன் படுத்தினாலும், எந்த ஒரு பெண்ணும் மற்ற தோழிகளிடம் இதைப்பற்றி மூச்சே விடமாட்டார். தான் வழக்கம் போல தவறே செய்யாத பெண்போலவே காட்டிக்கொள்வார். அப்படி இருக்கும் நெட்வொர்க்.

‘இன்னாருடன் பொழுதை கழித்தால் இவ்வளவு கிடைக்கும்..உனக்கு சம்மதமா என்று நேரடியாக கேட்கவே மாட்டார்கள். பெண்ணின் நெருக்கடிக்கு ஏற்பத்தான், அது அலுவல் ரீதியான ஆதாயமா அல்லது பொருளாதார ஆதாயமா என  தரகுப் பெண்களின் வாய்வீச்சு பாயும்.

‘’அதை ஏன் கேக்கற?’’ என கேட்காமலேயே ஆரம்பித்துவிட்டு, ‘’இப்படித்தான் கடுமையான நெருக்கடியில் இருந்த என் பிரெண்ட் ஒருத்தி சாஸ்திர, சம்பிரதாயம், நடைமுறை ஒழுக்கம் என்றெல்லாம் போட்டு குழப்பிக் கொண்டிருக்காமல் புத்திசாலித்தனமாக திடீரென்று கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி கிடுகிடுவென மேலே போய்விட்டாள்.

வெரிவெரி இன்டலெக்சுவல் பெண்ணுங்களுக்குத்தான், கிடைத்த சான்சை பயன்படுத்தி பிழைக்கவும் தெரியும். அதே நேரத்துல சொசைட்டியில குடும்பத்தை கௌரவமாகவும் நல்ல வசதியாகவும் நடத்தத்தெரியும். வசதியும் செல்வாக்கும் வந்துட்டா எல்லாருமே ஆதாயத்துக்காக சலாம்போடுவாங்களே தவிர, தர்ம நியாயம் பேசிக்கிட்டிருக்கமாட்டாங்க’’

இப்படித்தான் தரகுப்பெண்களின் பேச்சு பெரும்பாலும் இருக்கும்.. வா என்று கூப்பிடமாட்டார்கள். ஆனால், யாருக்கும் தெரியாமல் வந்த வாய்ப்பை பயன்படுத்தினால்தான் என்னவென்று எதிரில் இருக்கும் பெண்ணே யோசிக்கிற அளவுக்கு பலன்களை தட்டில் வைத்து கண்காட்சி வித்தை நடத்துவார்கள்..பெண்ணிடம் கொஞ்சம் தயக்கம் தென்பட்டாலே போதும், மனதுக்குள் சக்சஸ் என்று தரகு பார்ட்டிகள் கூத்தாடும்..

இங்கே, பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் யாரோ ஒரு மேலி டம் ஒரு செட் பெண்களை அனுப்பிவைக்கும்படி கேட்டிருக்க லாம். அப்படி அனுப்பி வைக்கும்போதே விஷயத்தை முன்கூட் டியே சொல்லிவிடுவது நல்லது என்று அவர் கோடிட்டு பேசியிருக்கலாம்.

ஒருவேளை இதற்கு முன் பல விஷயங்களை சாமர்த்தியமாக பேசி முடித்து அனுப்பியவர் இம்முறை சொதப்பிவிட்டாரா, அல்லது மேலிடத்தை சிக்கவைக்க வேறு யாராவது எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து உதவினாரா என்பதெல்லாம் போலீசாரின் விசாரணையில் போகப்போக தெரியவரலாம்.

கல்வித்துறை மட்டுமல்ல பல்வேறு துறைகளிலும், தவறான வழிக்கு ஆட்களை இழுப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

வெளிப்படையாக சொன்னால், எங்கெங்கு காணிணும் பெண்களுக்கு வலைவிரிக்கும் நீக்கமற நிர்மலாக்கள் நிறைந்ததுதான் இந்த உலகம்.

நம்முடைய தெருக்கள், பேருந்து நிறுத்துமிடங்கள், ரயில்கள், பேருந்துகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் என பல இடங்களில் இத்தகைய முகமுடி பெண்களை அக்காக்கள் அல்லது மேடம்கள் வடிவில் மற்ற பெண்கள் காணலாம்.

ஷாப்பிங் மால் போன்ற வணிகத்தலங்களில் பணிப்பெண்ணாய் ஊடுறுவியிருக்கும் ஒரு அக்காவுக்கு பசை கொண்ட ஆண் நட்புகள் இருக்கலாம்.. பணத்தை வாரியிறைத்தால் ஓடிவரும் தொழில்முறை பெண்களைவிட குடும்ப பெண்கள்மேல் அவர்களுக்கு ஈர்ப்பு அதிகம் இருக்கும். பெண் வாடிக்கையாளர்களில் யாரை யார் அதிகம் ஜொள்ளுகிறார்கள் என்பதை இந்த அக்காக்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுவார்கள்.

பொருளாதார கஷ்டம் அல்லது ஆடம்பரத்திற்கு ஏங்கும் மனது என இரண்டில் ஒன்றில், ஒரு பெண் எங்கு சிக்குண்டு கிடக்கிறாள் என்று கண்டுபிடித்துவிட்டால் அவர்கள் மளமளவென நெருங்கிப்பழக ஆரம்பித்துவிடு வார்கள். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் ஜொள்ளர் பாத்திரம் அங்கே பெர்பெக்ட்டாக, ஆனால் எதேச்சையாக வந்ததுபோல் ஆஜராகிவிடும்.

ஏதோ ஒரு வகையில் ஆண் பெண் இடையே நட்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு அக்காள் கண்டும் காணாதது மாதிரி போய்விடுவார்… ‘’சாரி மேடம் அவர் கார்டில் உங்கள் பில்லை போட்டு விட்டேன்.. மேடம் உங்க போன் பண்ணிக்கலாமா என்று கேட்டு வாங்கி ஜொள்ளருக்கு மிஸ்டு கால் குடுத்து நம்பரை பதிய வைக்கலாம்.. சார் எக்ஸ்கியூஸ் மீ, இவுங்க திங்சை டெலிவரி பாய் தப்பாக உங்க காரில் வைத்துவிட்டான்.. நீங்க போற பக்கம் தான், இவுங்க வீடும்.. அப்படியே இவுங்களை கொஞ்சம் வீட்டுக்கு முன் தெருவில் ( வெளி ஆண்களுக்கு வீட்டை யெல்லாம் காட்டக்கூடாது என்று பெண்ணுக்கு அக்காள்கள் உஷார்தனத்தையும் போதிப்பார்கள்) டிராப் செய்தா கூட போதும்.. என்றெல்லாம் அக்காக்களும் மேடம்களும் திரைக்கதை அமைப்பார்கள்..

இங்கு சொல்ல மறந்த முக்கியமான விஷயம், ஆண் வாடிக்கையாளரை பற்றியும் அவரின் தயாள குணத்தை யும் அவ்வப்போது பேச்சுவாக்கில் பெண்ணில் காதில் போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆயிரம் வசதி வாய்ப்பு இருந்தும் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் அவர் தவிப்பதாக, பரிதாபத்தை பக்காவாய் பதார்த்தம் போல் யதார்த்த மாக பதியவைப்பார்கள். அப்புறமென்ன, அலைபாயும் மனதாக பெண் இருந்தால் ஆணின் கவலையை கேட்கிறேன் பேர்வழி என்று கொஞ்சம் கொஞ்சமாக டிராக் சேஞ்ச்தான்..

குடும்ப பெண்கள்  வசமாக சிக்குவார்களா என பேருந்து நிறுத்துமிடங்களிலும் ரயில்களிலும் காத்திருக்கும் அக்காக்கள், மேடம்கள் இன்னும் வித்தியாசமானவர்கள். சீட் கிடைக்காமல் நின்றபடி தள்ளாடும் ஒரு பெண், ஹேன்ட்பேக்கை கொடுத்தாலே போதும், படிக்கிற பெண்ணா, வேலைக்கு போகிற பெண்ணா, குடும்ப பெண்ணா என ஸ்கேனிங் செய்துகொள்வார்கள்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் எப்படியாவது சீட் பிடித்து பக்கத்தில் உட்காரவைத்து பேசிக்கொண்டே மார்கெட்டிங் வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். கொஞ்சம் நாள் கழித்தால்,

ஒன்று அக்காளின் சோகக்கதைகளை கேட்டு, பெண் ஆறுதலை சொல்லிக்கொண்டிருப்பாள். அல்லது, தன் சோகக்கதைகளை சொல்லி அக்காளிடம் பெண் ஆறுதலை பெற்றுக்கொண்டிருப்பார்.. திடீரென ஒரு நெருக்கடி கட்டம் ஏற்பட்டு, ஒரு ஆண் கேரக்டர் உதவி செய்ய ஒடிவரும்.. அது அக்காளுக்கா பெண்ணுக்கா என்பது திரைக்கதையை பொறுத்தது.. ஆனால் ஆண் கேரக்டர், அக்காளின் திரைமறைவு வழிகாட்டுதலின்பேரில் பெண்ணை அதன் வழிக்கு கொண்டுபோய் விடும்.

இத்தகைய நிர்மலாக்கள், பெண்களை ஏமாற்றி பாலியல் விடுதிகளில் கொண்டுபோய் தள்ளும் ரகம் அல்ல.. கடன் பிரச்சினையை தீர்க்க, பதவி உயர்வு பெற, முக்கிய ஆவணங்கள் கையெழுத்தாக, வேலை வாய்ப்புகள் பெற்றுத்தர, பெரிய மனிதர்களின் செல்வாக்கை பெற என பெண்களை அடமானம் வைக்க வேறு தளத்தில் இயங்குபவர்கள்.

பலாத்காரத்திற்கு அப்பாற்பட்டு, விருப்பப்படுகிறவரை காத்திருத்து பலன்களை காட்டி வேட்டையாடும் சதை உலகத்தின் வரலாறு முற்றிலும் வினோதமானவை.. ஆண்களுக்காகவே எல்லாம் நடந்தாலும் இங்கு பெண்களுக்கு பெண்கள்தான், சிக்கவைக்கும் மிகப்பெரிய மாயவலை.

காட்டிக்கொடுக்காமல் பிளாக் மெயில் செய்து கொழுத்த லாபமும் பார்ப்பார்கள். காட்டிக்கொடுப்பார் என எதிரிகளுக்கு தெரிந்து விட்டால் உயிரையும் இழப்பார்கள்….

இந்த விநோதமான உலகில், ஒருவரின் துணி அவிழ்க்கப்பட்டு மானம் போனால் மற்றவர்களின் துணியும் தானாக அவிழ்ந்து மானம் போகும் வகையிலேயே சேர்த்து சேர்த்து கட்டப்பட்டிருக்கும்..ஓடவும் ஒளியவும் முடியாது.

ஒருவரையொருவர் ஏமாற்றி தீரா பகை ஏற்பட்டு, தனது மானம் போனாலும் பரவாயில்லை என மற்றவர்களை காட்டிக்கொடுக்காதவரை தூண்டிலும் சிக்காது, மீன்களும் சிக்காது..

இவர்களைப்பற்றியெல்லாம், அந்த நேரத்திற்கு மற்றவர்கள் பரபரப்பாக  பேசிக்கொண்டிருக்கலாம், அவ்வளவே.