ஒரே தேசம்.. ஒரே தேர்தல்.. ஒரே சர்வாதிகாரி, ஒரே மோடி!

சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ல்லா நாட்டிற்கும் இரண்டு முக்கியமான கட்டங்கள் இருக்கும்.. ஒன்று, ஏதோ ஒரு தலைவனால் அந்த நாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்பெறும்.. இல்லை, அடியோடு நாசமாகி போகும். உச்சகட்டமாக சிதறுண்டேகூட போகும்.

யூனியன் ஆப் இந்தியா என்று அரசியல் சாசன சட்டத்தில் சொல்லப்படுகிற இந்தியாவிற்கும் இப்படியொரு இக்கட்டான நிலைதான் இப்போது பிரதமர் நரேந்திரமோடியால் ஏற்பட்டிருக்கிறதோ என்றே நினைக்கத்தோன்றுகிறது.

மசாலா சினிமாவில் ஹீரோ ஒரே நாளில் அல்லது ஒரே முடிவில் நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கிற மாதிரியே மோடிக்கும் அடிக்கடி மனதில் வித்தியாசமான வித்தியாசமான யோசனைகள் உதிர்க்கின்றன.

சென்ற ஆட்சியில், ஒரே நாளில் பணமதிப்பிழப்பு என்று கறுப்பு பணத்தை ஒழிக்கப்போகிறேன் என்றார். கடைசியில் 200க்கும் மேற்பட்டோரை சாகடித்ததும், லட்சக்கணக்கான சிறு குறு தொழில்களையும் வியாபாரங்களையும் ஒழித்து கட்டியதுதான் மிச்சம்.

வளர்ச்சி, மலர்ச்சி என போனால் கடைசியில் தளர்ச்சியாகிவிடுகிறதே என்ற நினைப்போ தெரியவில்லை, இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவை எல்லா வகையிலும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவது என்ற கனவில் இறங்கியிருக்கார் மோடி

இந்து மதம், பசு, பாகிஸ்தான் எதிர்ப்பு என இந்த விஷயமும் மக்களின் உணர்வுகளை தேசபக்தி யாக்கி தனக்கு அருமையாக விருந்துபோடும் என்று நினைக்கிறார் போல..

அதற்காக நரேந்திர மோடி சொல்லும் ஒரே விஷயம், ஒரே நேரத்தில் மக்களவைக்கும் எல்லா மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தினால் பெரும் செலவு குறையும் என்பது.

‘’ 2019 மக்களவை தேர்தலை நடத்தி முடிக்க 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது இத்தோடு எல்லா மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தினால் இன்னொரு 60 ஆயிரம் கோடி மிச்சம். இதை தேசத்தின் வளர்ச்சி பயன்படுத்திக்கொள்ளலாமே?’’ இதுதான் பக்கா கமர்சியல் சீன்.. அதுவும் விசிலடிச்சான் ரசிக குஞ்சுகள் தியேட்டரை அதிரவைக்கிற தெறி மாஸ் சீன்…

மோடியின் ஆதரவாளர்களும் வழக்கம்போல், ஒரே தேசம் ஒரே தேர்தல், நாட்டுக்கு செலவு மிச்சம்.. நடிகை தொடையில் மச்சம் என புளங்காகித மனநிலையில் மிதக்கிறார்கள்.

மோடிக்கும் சரி, அவரை கொண்டாடுகிறவர்களுக்கும் சரி, இந்தியா என்பது உண்மையிலேயே என்ன என்பது அவர்களின் மூளைக்குள் ஏறவே மறுக்கிறது. ராமருக்கு கோவில் கட்டி பசுவை ஓடவிட்டு பாரத் மாதாகி ஜே என்று சொன்னால்போதும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை அப்படியே எல்லோருக்கும் தேச பக்தியில் நடு மண்டையில் ரோமம் நட்டுக்கிட்டு நிற்கும் என்று நினைக்கிறார்கள்.

இந்தியா என்பது உலகில் பெரும்பாலான நாடுகள் இருப்பதுபோல் ஒரே இனம் ஒரே மொழியில் கொண்ட தேசம் அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அதிசயத்தை காட்டும் உலகின் முதன்மையான மிகப்பெரிய ஜனநாயக நாடு.

பிரிட்டிஷ்காரர்கள் சுதந்திரம் கொடுத்து விட்டு சென்ற பின்னரும், பல்வேறு சமஸ்தானங்களாய் சிதறிக்கிடந்தவற்றையெல்லாம் ஒன்றுபடுத்தியவர் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல்.

அப்படி ஒன்றிணைந்த இந்தியா உருவாகும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள இன அடையாளம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை அழிக்க மாட்டோம் என்று உறுதிமொழி தந்தவர், சர்தார் படேலுக்கும்மேலே பிரதமராய் இருந்த ஜவஹர்லால் நேரு.

நிறைய சமரசங்களுக்கு பிறகும் உறுதிமொழிகளுக்குப்பிறகும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப் படையில் மாநிலங்கள் ஒன்று சேர்ந்த நாடுதான் இந்தியா. இன்றைக்கு சீரான எல்லைக்குள் இந்தியா இருந்தாலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மண் சார்ந்த விஷயங்களும் வெவ்வேறு ஆதாரப்புள்ளிகளில் சுழன்றுகொண்டிருப்பவை..

ஏற்கனவே இந்தி திணிப்பு என்பது, மத்தியில் ஆட்சிக்கு வருபவர்களால் காலம் காலமாய் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு, (ஒன்றுபட்ட)ஆந்திரா, கேரளா, கர்நாடகம் அடங்கிய தென்னிந்தியாவும் அதனையொட்டியுள்ள மராட்டியை தாய்மொழியாக கொண்ட மகராஷ்ட்ராவும் என ஐந்து மாநிலங்கள் சேர்ந்துதான் நாட்டிற்கு வரி வருவாயை மத்திய அரசாங்கத்திற்கு பெரிய அளவில் அள்ளிக்கொடுக்கின்றன.

ஆனால் வெட்கமே இல்லாத மத்திய அரசு, ஒவ்வொரு திட்டத்திற்கும் இந்தியில் பெயரை சூட்டுகின்றன. வானிலை விவகாரத்தில்கூட உலக அளவில் புதிதாக உருவாகும் புயல்களுக்கு சுழற்சி முறையில் பெயர் வைத்துக்கொள்ள பல நாடுகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். ஆனால் அதுபோன்ற பெருந்தன்மை புத்திகூட மத்திய அரசிற்கு கிடையாது. அப்படி இருந்திருந்தால் இந்நேரம் மத்திய அரசின் திட்டங்களுக்கு சுழற்சி அடிப்படையில் பல்வேறு மாநில மொழிகளில் பெயர் சூட்டப்பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட யோக்கியமான அரசுதான் இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என கொடூரமான புத்தியை காட்ட ஆரம்பித்துள்ளது.

மக்களவை தேர்தலையே பல்வேறு கட்டங்களாக இரண்டு மாதங்களுக்கு நடத்துகிறார்கள். இந்த லட்சணத்ததில் மக்களவைக்கு தேர்தல் நடக்கும்போதே அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தலை நடத்தப்போகிறார்களாம்?

மக்களவை தேர்தலையும் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களின் தேர்தல்களையும் ஒன்றாக சேர்த்துப்பார்க்கும் உலகமகா அறிவு இருக்கிறது அடேங்கப்பா என்றுதான் அதனை வர்ணிக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் வித்தியாசமான தனித்தனியான அரசியல் களம் உண்டு. அரசியல் தட்பவெப்பத்திற்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களில் அரசின் ஆயுட்காலம் அமையும்..

உதாரணத்திற்கு நமது நமது தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியை முதன் முறையாக 1976-ல் மத்திய அரசு கலைத்தது. 1971-ல் திமுக வெற்றிபெற்ற முதலமைச்சராய் கலைஞர் இருந்து அரசு அது.

1977-ல் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். 1982 வரை அவர் ஆட்சி இருந்திருக்கவேண்டும் ஆனால் 1980-லேயே கலைத்தார்கள். 1984 தேர்தலில் வென்ற அதிமுக 1989 டிசம்பர்வரை ஆட்சியில் இருந்திருக்கவேண்டும். ஆனால் 1987-ல் முதலமைச்சர் எம்ஜிஆர் காலமானதால் தள்ளாட்டம் கண்டு 1988ல் அதிமுக ஆட்சியே காணமாலே போனது.

1989- ல் கலைஞர் தலைமையில் வென்ற திமுக 1994 வரை ஆண்டிருக்கவேண்டும். ஆனால் இரண்டே ஆண்டில் அவர் ஆட்சியை கலைத்தார்கள்.

2006 தேர்தலில் திமுக 96 இடங்களில வென்று மைனாரிட்டி ஆட்சி நடத்தியது. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் தராத ஆத்திரத்தில் ஆதரவு தெரிவிக்காமல் கைவிரித்த நிலையில் பாமக நிபந்தனையின்றி முட்டுக்கொடுத்தால் அந்த திமுக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நகர்ந்தன.

2016 தேர்தலில் வென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, சில மாதங்களிலேயே காலமாகிவிட்டார். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராகி அதற்குபின் எடப்பாடி பழனிச்சாமி வந்து ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்பே தேர்தலை சந்திக்கும் நிலை இருந்தது. ஆனால் அது தவிர்க்கப்பட்டு எத்தனையோ தடைகள் வந்தும் இன்றுவரை ஆட்சி நகர்ந்கொண்டிருக்கிறது.. யார் தயவில்? உலகத்திற்கே தெரிந்த ஒப்பன் சீக்ரெட் அது..

யோசித்து பாருங்கள்.. ஒரு மாநிலத்தில் ஒரு 20 ஆண்டுகளுக்குள்ளேயே எத்தனை ஆட்சிகள் ஆயுள் குறைவோடு முடிந்திருக்கின்றன. அப்படியானால் மற்ற மாநிலங்களின் அரசியல் வரலாற்றை புரட்டிப்பாருங்கள். அதிர்ந்துபோவீர்கள்.

மாநில அரசுகளின் ஆயுட்காலம்தான் இப்படியென்றால் மத்திய அரசின் ஆயுள் என்ன, அசைக்கவே முடியாத அளவுக்கு நிலையாக இருக்கும் லட்சணம் பொருந்தியதா?

1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். 1982 வரைக்கும் அவரால் ஆட்சி செய்யமுடியவில்லை. 1980-லேயே கவிழ்ந்தார். 1989-ல் விபி சிங் பிரதமர் ஆனார், 1994வரை ஆட்சி போயிருக்கவேண்டும். ஒன்றரை ஆண்டில் அவர் கவிழ்த்து சந்திரசேகர் பிரதமராகி அவரும் ஆறு மாதத்தில் விழுந்து, இரண்டே ஆண்டுகளில் ஆட்சியின் ஆயுள் காலம் முடிந்தது.

1996-ல் மக்களவை தேர்தல் நடந்தது. 2001வரை ஆட்சி இருந்திருக்கவேண்டும். ஆனால் அதற்குள் 1998, 1999 என இருமுறை மக்களவைக்கு பொதுத்தேர்தல் என்ற அக்கப்போர் நடந்தது. வாஜ்பாய், தேவகவுடா ஐ.கே.குஜ்ரால் மீண்டும் வாஜ்பாய் என மூன்றாண்டுகளில் நான்கு பிரதமர்களை நாடு பார்த்தது.

ஐந்து ஆண்டு ஆயுட்காலத்தை 2014-லிருந்து மூன்று முறை அரசுகள் தொல்லையின்றி கழித்திருக் கின்றன. இருந்தாலும் பழைய வரலாறுகள் எப்போதுமே முக்கியமானவை. நிலையும் நிலை யாமையும் சரிபாதி கலந்ததுதான் ஆட்சிகளின் மொத்தமான வரலாறு

பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். மக்களவையோடு சேர்ந்து சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்கிறது. ஒரு மாநிலம் மூன்றாண்டில் கவிழ்ந்துவிடுகிறது. இன்னொன்று நாலாண்டில் கவிழ்ந்துவிடுகிறது. அப்போது அந்த மாநிலங்களுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்துவார்களா அல்லது கவர்னர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு மக்களவை தேர்தல் வரும்வரை காக்கச் செய்வார்களா?

அப்படி காக்கச்செய்தால், அந்த மாநிலத்தில் கவர்னர் மூலம் மத்திய அரசு பினாமி அரசாங்கம் நடத்தாமல் வெறுமனே வேடிக்கையா பார்க்கும்? அவ்வளவு யோக்கியமானதா நமது மத்திய அரசு?

சரி, மாநில அரசுகள் ஐந்து ஆண்டுகள் சரியாக ஆளுகின்றன. இடையில் மத்திய அரசு கவிழ்ந்து விட்டால், எல்லா மாநிலங்களிலும் ஆட்சியை கலைத்துவிட்டு மக்களவையோடு சேர்ந்து நடத்துவார்களா இல்லை. மாநிலங்களின் ஆயுட்காலம் முடிகிறவரை காத்திருப்போம் என ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கட்டும் என்று புதிய சட்டம் இயன்றுவர்களா?,

வெளிப்படையாக சொன்னால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முன்வைப்பு மாநிலங்களின் உரிமைகளையும் மாநில கட்சிகளையும் ஒழிக்க மோடி அரசு முயற்சிக்கிறது என்பதுதான்.
இன்றைக்கு செலவு மிச்சம் என்று ஒரே தேசம் ஒரே தேர்தல் என்று நெஞ்சை நக்குகிறவர்கள், நாளைக்கு நிறைய வேட்பாளர்கள் நிற்பதால் தேர்தலில் பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும் அதனை தவிர்ப்பதற்காக தேர்தல் சீர்திருந்தம் என்றும் ஆரம்பிப்பார்கள்.

இன்னும் பச்சையாக சொன்னால் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனி மனிதர்களுக்கு மட்டுமின்றி சிறிய கட்சிகளுக்கும் கடுமையான நிபந்தனைகளை விதித்து கடைசியில் ஓழித்தே கட்டிவிடுவார்கள்.

ஒரு மாநிலத்தை ஆளுகின்றன அரசு கவிழ்ந்து அங்கே மறுபடியும் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லாத பட்சத்தில், ஆறு மாதங்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த வாய்ப்பைத்தான் முதலில் பிடுங்க மத்திய அரசு குறிவைத்துள்ளது.

இதனை காலி செய்துவிட்டால், சம்மந்தப்பட்ட மாநிலத்தில் மக்களாட்சி மீண்டும் எப்போது என்பதை மத்திய அரசும் அதன் அடிமை என வர்ணிக்கப்படும் தேர்தல் ஆணையமும்தான் தீர்மானிக்கும். அதாவது மோடியின் இலக்கு, ஜனநாயகம் என்ற பெயரில் மாநிலங்களை ஒழிக்கும் பரிசுத்தமான, கலப்படமில்லாத சர்வாதிகாரம்.

பிரதமர் மோடிக்கும் அவர் சகா உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் ஒரு விஷயம் தெரியாத போலிருக்கிறது/ விரல்கள் சேர்ந்து விரிக்கப்பட்ட கைமீது மணல் குவித்தால் அப்படியே நிற்கும். அதே மணலை இறுக்கிப்பிடிக்க கையை குவித்தால் மணல் நிற்கவே நிற்காது..விரல்கள் இடுக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டே இருக்கும்..

இருவருக்கும்தான் இந்தி நன்றாக தெரியுமே.. 1962ல் வெளியான தேவ் ஆனந்தின் அஸ்லி நக்லி படத்தின் புகழ் பெற்ற வசனம் இது..

மோடியின் கையும் யூனியன் ஆப் இந்தியா என்ற மணலை இறுக்க ஆரம்பித்தால்…?