கட்டுரையாளர்: துரை நாகராஜன்

நிறத்தையும் சுவையையும் அதிகப்படுத்த தர்பூசணிக்கு ஊசிபோடுகிறார்கள். ஊசியின் மூலம் விளைவிக்கப்படும் தர்பூசணி 60 நாட்களிலேயே விற்பனைக்கு வந்துவிடுகின்றன என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க உதவும் தோழனாக இருந்த தர்பூசணியை மக்கள் விரோதியைப்போல் முறைக்க ஆரம்பித்திருக்கிறாகள். 40 நாட்களில் விற்பனைக்கு வரும் பிராய்லர் கோழியை ஒதுக்கிவைத்தவர்கள், தர்பூசணியையும் ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர்.

எல்லா விவசாயிகளும்  இப்படி ஊசிபோட்டு விளையவைக்கும் வியாபாரிகளாகி விடவில்லை.. ஆனால் அச்சம் காரணமாக, எல்லா தர்பூசணியையும் ஒரே கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறோம்.  இதனால் நேர்மையாக விவசாயம் செய்து இந்தக் கோடையில் தர்பூசணி விற்று பட்ட கடனை அடைத்துவிடலாம் என்று நம்பியிருந்த விவசாயிகளின் நம்பிக்கையிலும் மண் விழுந்திருக்கிறது.

தர்பூசணி மட்டுமல்ல. சுரைக்காய், வெள்ளரிக்காய் உட்பட பல காய்கறிகளுக்கு ஊசிபோடப்படு கிறது என்கிற உண்மையை எத்தனை பேர் அறிவீர்கள்.  நாம் உடல்நலக் கேட்டால் போட்டுக்கொள்ளும் ஊசிக்கும், காய்கறிகளுக்கு போடப்படும் ஊசிக்கும் வித்தியாசம் உண்டு. ஒன்று பிழைக்கவைக்க. இன்னொன்று நம்மை சாகடிக்க.

இயற்கையில் விளைந்தவற்றையும், பழுக்கவைக்க செயற்கை முறை கையாளப்படுகிறது.  தடைசெய்யப்பட்ட கால்சியம் கார்பைடு பயன்படுத்தி பழுக்கவைக்கப்படும்போது, அதிலுள்ள ஆர்சனிக், பாஸ்பரஸ் போன்ற விஷத்தன்மை சிறுநீரகம் மற்றும் கல்லீரலை நேரடியாக பாதிக்கிறது

நமக்கு இப்போது எந்தப் பழத்தைப் பார்த்தாலும் இது அதுவா இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கேட்டால்,  வியாபாரிகள் இது இயற்கையில் பழுக்க வைக்கப்பட்டது என்று வாய்மொழிச் சான்றிதழ வழங்குகின்றனர்.

உண்மையில் எப்படி பழுக்க வைக்கப்பட்டது என்பதை கண்டறியும் கருவி எல்லோர் கையிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.   பழங்கள் எப்படி பழுக்க வைக்கப் படுகின்றன என்பதை மட்டுமல,  காய்கறிகளில் இரசாயன நச்சுக்கள் கலந்திருக்கிறதா? எந்த அளவு கலந்திருக்கிறது என்பதையும் கண்டறியமுடியும். ஊசிபோட்டு விளையவைக்கும் கொலைபாதகச் செயல் முடிவுக்கு வரும். அதுமட்டுமல்ல, இயற்கை அங்காடி என்ற பெயரில் இரசாயன பொருட்களை விற்பனையும் சில மோசடிக்காரர்களும்  காட்டப்பட்டு விடுவார்கள்.

தொழுவுரம், தழையுரம் போட்டு விவசாயம் செய்தநாம் 1965களுக்குப்பிறகு பசுமைப் புரட்சி என்ற பெயரால் படிப்படியாக இரசாயன உரத்தை பயன்படுத்த ஆரம்பித்தோம். விளைச்சல் மூன்று மடங்கு, நான்குமடங்கு பெருகியது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இரசாயன உரங்களை வாங்கிக் கொட்டினார்கள். இப்போது எந்த உரம் போட்டாலும் விளைச்சல் இல்லை என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

விளையாட்டு வீரர்கள் திறனை அதிகரிக்க ஊக்கமருந்து ஊசி போட்டுக்கொள்வார்கள். முதலில் உடலுக்கு திறனைக் கொடுக்கும் ஊசிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் உடலை சிதைத்து உருக்குலைக்கும். அதுபோல இரசாயன முதலில் அமோக மகசூலைத் தந்து இப்போது மண்ணை மலடாக்கிவிட்டது. இரசாயன உரங்கள் பயன் தரவில்லை என்றதும் ஊசியை நம்ப ஆரம்பித்துவிட்டோம்  சர்க்கரை நோயாளிகளைப்போல.

சர்க்கரை நோயாளிகள் முதலில் பாதி மாத்திரையில் ஆரம்பித்து, இன்சுலின் ஊசிக்கும் மாறி அதுவும் பயன் தராத நிலையில் கிட்னியை மாற்றவேண்டும். அல்லது டயாலிஸ் பண்ணவேண்டும் என்று மருத்துவர் சொல்லும்போது என்ன செய்வதென்று தெரியாமல் மலங்க மலங்க விழிப்பார்களே… அப்படித்தான் விளைநிலைத்தை கெடுத்துவிட்டு இப்போது  செய்வதறியாது நிற்கிறோம்.

விளைநிலங்கள் மட்டும் மலடாகவில்லை. அந்த உணவுகளைத் தின்று நாமும் மலடாகி விட்டோம்.

ஏற்கனவே உலகம் சுமார் 60 சதவீதம் விந்தணு குறைவை சந்தித்திருக்கிறது. அதுவும் கடந்த ஐம்பது ஆண்டுகளில். 1940களில் இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கினார்கள். 1970ம் ஆண்டுகளில் இருந்து விந்தணுக்களின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாகவும், ஆசியா, ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு குறைவாகவும் இருக்கிறது. 80களில் குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்கள் ஆக்ரமித்திருந்த தமிழகத்தை இன்று செயற்கை கருத்தரிப்பு மைய விளம்பரங்கள் ஆக்ரமித்திருப்பதே நாம் விந்தணுக் குறைவால் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதற்கு சாட்சி.

ஒரு பழம் பழுத்தால் இரண்டுநாட்கள் அல்லது மூன்று நாட்கள் தாங்கும். எத்தனை நாள் ஆனாலும் அழுகாத தக்காளிதான் இப்போது நமக்குக் கிடைக்கிறது. தோல் கூட  அதிக தடிமனாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்குள்ளே தக்காளியில் இப்படிப் பட்ட மிகப்பெரிய மாற்றத்தை காணமுடிகிறது.

எல்லா காய்களிலுமே வாடும்தன்மை குறைந்திருக்கிறது. எப்போதும் பளிச்சென்று தெரிகிறது. இதற்கு காய்கறிகள் மீது அடிக்கப்படும் மருந்துகள் மட்டும் காரணம் அல்ல. மரபணு மாற்றங்களும்தான். 72 காய்கறிகளுக்கு மத்திய அரசு மரபணு மாற்ற அனுமதி அளித்திருக்கிறது. இதனால் எதை நம்பிச் சாப்பிடுவது என்கிற அச்சம் எல்லோர் மனதிலும் இருக்கிறது.

காய்கறி உணவு உடலுக்கு ஆரோக்கியம். அதிகமாக பச்சைக்காய்கறிகள் உண்டால் இதயநோய், பக்கவாதம்  முதலான பல நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையை மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளும், இரசாயன உரங்களும், ஊசிகளும் தகர்ந்துவிட்டன.

விளைநிலங்கள் கொலைநிலங்களாகி வருகின்றன. சோறுபோட்டு வாழவைத்த விவசாயிகள், தவறான விவசாயக் கொள்கைகளால் உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவுகளை உற்பத்தில் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

ஐயோ இனி உணவுக்கு என்ன செய்யப்போகிறோம் என யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.  ஒரு காலத்தில் காய்சல் தலைவலி வந்தால் மூலிகைகளை பயன்படுத்தி கஷாயம் வைத்து குடித்த நாம் இன்று  இரசாயன மாத்திரை போட்டுக் கொள்ளவில்லையா?  அதுபோல உணவுக்கும் மாற்றாக மாத்திரைகள் வந்துவிடும்.

என்ன குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மையை மட்டும் இழந்துவிடுவோம்.  ஆனால், ஆணின் விந்தணும், பெண்ணின் கருமுட்டையும் இல்லாமல் குழந்தையை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விடுவோம்.

நமக்கு எப்படிப் பட்ட குழந்தை வேண்டுமோ அதை கடையில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். நாமே வளர்க்கலாம். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம். கடையில் வாங்கும் குழந்தைகளிடமும் இனப்பெருக்க சக்தியோ, அன்பு, பாசம் முதலான உணர்ச்சிகளோ இருக்கப்போவதில்லை. எல்லாமே எந்திரமயமாக இருக்கும்.

அதை மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். இப்போது மக்கா சோளத்தின் மரபணுவையும், பாம்பின் மரபணுவையும் கோதுமையில் செலுத்தி உருவாக்கப்பட்ட, கோதுமையின் வடிவத்தை ஒத்திருக்கும்  அதிக மகசூல் தரும்புதிய உயிரை கோதுமை என்று சொல்லவில்லையா, அதிக பால்சுரக்க பன்றியின் மரபணு செலுத்தி உருவாக்கப்பட்ட புதிய உயிரினத்தை பசுக்கள் என்று சொல்வதில்லையா…  அப்படி அந்த புதிய உயிரினத்தையும் மனிதன் என்று சொல்லலிக் கொள்ளலாம்.