சிறப்புக்கட்டுரை: வில்லிசை நாயகி பூங்கனி

கட்டுரையாளர்: துரைநாகராஜன்

பூங்கனி. எழுபதுகளில் தமிழக மக்களின் மனங்களை வில்லிசையால் ஆட்சிசெய்தவர். இவர் வில்லில் அமர்ந்து பாட ஆரம்பித்தால் இனிப்பைத் தேடிவரும் எறும்புபோல அத்தனைக் கூட்டமும் இவர் முன்னால் குவியும்.

ஆயிரம்பேர் கூட்டத்தையும் அசையாமல் கட்டிப்போடும் ஆற்றல் அவர் பாட்டுக்கு இருந்தது. வீச்சுகோலை கையில் பிடித்து வில்லில் அடித்து, அதை தலைக்கு மேலாக சுழற்றி எடுக்கும்போது கண்கள் மேலும் கீழுமாக சுற்றிச் சுழன்றுவரும். அந்தப் பார்வை நம்மீது ஒருமுறை பட்டுவிடாதா என்று இளைஞர் கூட்டம் தவம் கிடக்கும்.  ஆண், பெண், பெரியவர், சிறியவர், அத்தனைபேரையும் கட்டிப் போடும் வசீகரம் பூங்கனி குரலுக்கு இருந்தது. அவருடைய காந்தக் குரலும், அவர் வெளிப்படுத்தும் கம்பீர உடல்மொழியும் இவர் வில்லுக்கென்றே பிறந்தவர் என்கிற  எண்ணத்தை பார்ப்பவர் மனங்களில் விதைக்கும்.

பொறுமைக்கு தருமன், கொடைக்கு கர்ணன், சொல்லுக்கு அரிச்சந்திரன் வில்லுக்கு விஜயன், வில்லிசைக்கு பூங்கனி. இவர் வில்லுப்பாட்டு இனிக்கும் தேன்கனி.

தென் மாவட்டங்களில் இவர் பாடாத கோயில்களும் இல்லை. இவர் பாடலைக் கேட்காத செவிகளும் இருந்ததில்லை என்னும் அளவுக்கு எழுபதுகளில் புகழோடு வாழ்ந்தவர்.

அப்போதெல்லாம் ஜவுளி விற்பவர்கள் துணிகளை தலையில் சுமந்துகொண்டு வருவார்கள். அவர்களிடம், ‘பூங்கனி கட்டியிருந்தாங்களே அந்தமாதிரி சேலையிருந்தா கொண்டுவாங்க’ என்று பெண்கள் சொல்லி அனுப்புவார்களாம். எண்பதுகளில் நதியா கம்மல் பிரபலமாக இருந்துபோல் எழுபதுகளில் தென்மாவட்டங்களில் பூங்கனித்தோடு பிரபலம்.

எந்த கதையானாலும், நினைவிலிருந்து பாடும் ஆற்றல் கொண்டவர். பூங்கனி பாட்டு என்றால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமல்ல, சாமிகளும் கூடுதல் சந்தோஷத்தில் குதித்து ஆடும். ஒரு கோயிலில் பூங்கனி பாட்டு என்றால் சுற்றுவட்டாரம் முழுவதும் தீப்பிடித்த மாதிரி செய்தி பரவும். கோயிலுக்கு வழக்கமாக வரும் கூட்டத்தைவிட நாலுமடங்கு கூட்டம் அதிகமாய் வரும்.

தென் மாவட்டங்களில் வில்லுப்பாட்டு இல்லாமல் அம்மன்கொடை இல்லை. பொதுவாக அம்மனுக்கு கொடை கொடுக்கும் தேதியை குறித்துவிட்டு யார் வில்லுப்பாட்டு, யார் மேளம் என்பதை முடிவு செய்வதுதான் வழக்கம். பூங்கனியிடம் தேதிவாங்கிவிட்டு கொடையை முடிவு செய்ததும், இப்போது பாடியதற்கான தொகையை கொடுக்கும்போது அடுத்த ஆண்டு பாடுவதற்கான முன்பணத்தை சேர்த்துக் கொடுப்பதும் பூங்கனி பாட்டுக்கு கிடைத்த மரியாதை.

தங்கத் தட்டில் சாப்பிட்ட தியாகராஜ பாகவதர் கடைசியில் சாப்பாடுக்கே சிரமப்பட்டார் என்று படித்திருக்கிறோம். அப்படித்தான் பூங்கனியின் வாழ்க்கையும். மற்ற வில்லிசைக் கலைஞர்கள் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும்போது இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியவர். அவருடைய இறுதிநாட்கள் அரசாங்கம் கொடுக்கும் இலவச அரிசியை நம்பிக் காலம்தள்ளும் அளவுக்கு மாறிப்போனது. வில்லிசை மூலம் புகழையும், பொருளையும் அதிகமாக சம்பாதிக்கத் தெரிந்த அளவுக்கு, அதை சேமிக்கத் தெரியவில்லை. அனைத்து விஷயங்களையும் கலை மனதுடன் அணுகியவர். இந்த உலகம் கற்பித்து வைக்கும் ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்பட்டது அல்ல அவருடைய வாழ்க்கை.

பூங்கனி பிறந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, சரவணந்தேரி. வாழ்க்கைப்பட்டது எங்கள் ஊரான தென் தாமரைகுளத்தில். முதல் கணவர் பெயர் செல்லநாடார். அவரும் பெரிய வில்லிசைக் கலைஞர். வில்லில் அமர்ந்து அரிச்சந்திரன் கதை பாடினால், நாடகம் பார்த்து போல இருக்குமாம். தன் முகபாவனையால் பாடும் கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டு நிறுத்தும் ஆற்றல் பெற்றவர். வடிவழகன். நெற்றியிலே சிவப்பாக பொட்டுவைத்திருப்பார்.  எனவே பொட்டு போட்டார் என்றே மக்களால் அறியப்பட்டார்.

பாட்டழகன் பொட்டுபோட்டாரும், பாட்டழகி பூங்கனியும், காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தனித்தனி குழுவாக இயங்கிவந்த இரண்டு வில்லிசைக் குழுக்களும் திருமணத்துக்குப் பிறகு ஒரு குழுவாகிவிட்டது. இருவருமே வலத்த (முதன்மைப் பாடகர்) பாடுகிறவர்கள், என்றாலும் பூங்கனி செட் என்றே அறியப்பட்டது. குடம் கணபதி. உடுக்கை சீனியப்பா. நடுவில் பாடுபவர் பூங்கனியின் சகோதரர். பொட்டுபோட்டார் வலத்தபாடும்போது பூங்கனி கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வார். பூங்கனி வலத்த பாடும்போது பொட்டுபோட்டார் நல்ல சாராயம் எங்கே கிடைக்கும் என்று தேடிச் சென்றுவிடுவார்.

குமரிமாவட்டத்தில் நன்னாரி சர்பத் மிகப் பிரபலம். பூங்கனி பாடிக் கொண்டிருக்கும்போது அவர் குடிப்பதற்கு நன்னாரி வரும். அதிலே சாராயம் கலந்து இருக்கும். அந்த சர்பத் உள்ளே போனபிறகு, பூங்கனியின் பாட்டு இன்னும் களைகட்டும் என்கிற கதைகளும் உலவும்.

மகத்தான கலைஞர்கள் பலரை கொன்றழித்த மது பொட்டுபோட்டாரையும் குடித்துவிட்டது. சிறுவயதிலேயே பூங்கனி விதவையானார். கணவர் மறைவுக்குப் பிறகு பூங்கனி தென் தாமரைகுளத்தில் வசிக்க விரும்பவில்லை. அதன்பிறகு எங்கள் ஊரில் ஒவ்வொரு அம்மன்கொடைக்கும் வில்லுப்பாட்டு இருக்கும். புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர்கள் வந்து பாடுவார்கள். அவர் பூங்கனியாக மட்டும் இருக்கமாட்டார். அந்தக் காலத்தில், பூங்கனி பாட்டு இல்லாத கோயில்களில், எவ்வளவு பெரிய வில்லிசைக் கலைஞரைக் கொண்டு பாடவைத்தாலும் ‘என்னதான் சொல்லுங்க. பூங்கனி பாட்டுக்கு வராது…’ என்கிற குரல் கேட்காமல் இருக்காது.

பூங்கனி பாட்டுக்கேட்டதில்லை. ஆனால் ஒவ்வொரு கொடையிலும், கொடை முடிந்த  சிலநாட்கள் வரையிலும் பூங்கனி கதை உலாவரும். அந்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்ததால்,  சிறுவயதில் இருந்தே பூங்கனி வில்லுப்பாட்டு கேட்கவேண்டும் என்பதும் என்னுடைய விருப்பங்களில் ஒன்றாக இருந்தது. எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் அவர் புகழின் உச்சத்தில் இருந்து இறங்கியிருந்தார். சரஸ்வதி, சுயம்பு, சகாதேவன் என புதிய வில்லிசைக் கலைஞர்கள் உருவாகியிருந்தார்கள்.

எனவே பூங்கனி வில்லுப்பாட்டு கேட்கவேண்டும் என்கிற என்னுடைய ஆசை நிறைவேறாமலே இருந்தது. ஆசை நிறைவேறியபோது பூங்கனி அறுபது வயதைக் கடந்திருந்தார். இதுவரை கதைகதையாய் கேட்டு கற்பனை செய்து வைத்திருந்த அவருடைய வில்லிசையை கேட்கப்போகிறோம் என்கிற நினைப்பே பரவசப்படுத்தியது.

எப்போதுமே ஊரில் கோயில்கொடைக்கு வில்லுபூட்டிய பிறகே கோயிலுக்குச் செல்லும் வழக்கமுடையநான்  இன்று வில்லிசைக் குழுவினர் வருவதற்கு முன்பே கோயிலுக்கு சென்றுவிட்டேன்.

பூங்கனி பாடுவதற்காக குழுவினரோடு வருகிறார். பெரியவர் ஒருவரைப் பார்த்து சின்னதாய் சிரிக்கிறார். அவர் ‘பூங்கனி’ என்கிறார். ‘சித்தப்பா, நல்லா இருக்கியளா’ என்கிறார். இவரா பூங்கனி, இவர் பாட்டுக்கா தென் தமிழ்நாடே கட்டுண்டு கிடந்தது?  கேள்விகளோடு நான் இருக்கிறேன். வில் பூட்டுகிறார்கள். அமர்ந்து வலது கையால்  வில்லை பிடிக்கிறார். அதுவரை இல்லாத ஒரு கம்பீரம் அவரிடம் வந்து ஒட்டிக்கொள்கிறது. உடல் சிலிர்த்து நிமிர்கிறார். ஒற்றைப் பார்வையால் குடத்தில் இருப்பவரை ஏறிட்டுப் பார்க்கிறார். அவர் நக்கீரன் கோபால் மீசை வைத்திருக்கிறார்.

பூங்கனி இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவரும் வில்லுப் பாட்டுக்காரர்தான். குடம் அடிக்கிறவர் என எப்போதோ கேட்ட தகவல் நினைவுக்கு வருகிறது. அவரை மறுபடியும் பார்த்துக் கொள்கிறேன். இன்னும் கூட்டம் முழுமையாக வந்திருக்கவில்லை.  இரண்டாவது கணவர் பெயர் தங்கபாண்டியன்.

‘தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட… ஆமா… வில்லினில் பாட… வந்தருள்வாய் சரஸ்வதியே…’ எனப் பாடத்தொடங்குகிறார். குரல் உடைந்துபோய் இருக்கிறது. அந்தக் கரகரப்பையும் தாண்டி அதன் உள்ளே இரும்பை இழுக்கும் காந்தத்தின் சக்தியைப்போல் ஒரு வசீகரம் இருப்பதை காணமுடிந்தது.

முதுமை தன்னுடைய வலிமையான கரங்களால் அவர் முகங்களில் போட்டுவைத்திருக்கும் கோலங்களைத்தாண்டி ஒரு குமிழ் புன்னகையோடு அவர் பாடலைத் தொடங்கும் அழகும், கண்களை வெட்டித்திருப்பும் லாவகமும்… பூங்கனி பாட்டுக்கு மக்கள் கட்டுண்டு கிடந்த ரகசியத்தை பிடிபட வைத்தது.

இன்னும் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருப்பது, தன்னுடைய 84 வயதில் எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் மரணித்த பூங்கனியைப்போன்ற  மாபெரும் கலைஞர்களின் கடைசிகாலம் எதற்கு வறுமையிலும், துயரத்திலும் கழிகிறது என்பது மட்டும்தான்.