ஆன்மீகத் தற்கொலைகள்: எங்கோ எப்போதோ நடப்பதுதான் என்றாலும்

சிறப்புக்கட்டுரை: அ. குமரேசன்

மிதமிஞ்சிய கடவுள் நம்பிக்கையின் பெயரால் அல்லது வெறியாய் மாறிய மதப் பற்றின் பெயரால் வன்முறைகள் நடப்பதும் அது கொலை செய்வது வரையில் முற்றுவதும் திரும்பத் திரும்ப நிகழ்ந்துகொண்டிருப்பவைதான். இந்த நம்பிக்கையும், பற்றும் தற்கொலைக்கும் இட்டுச் செல்லும் என்பதை நினைவூட்டுவதாக தலைநகர் தில்லியின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் தற்கொலைச் செய்தி வந்திருக்கிறது, கண்களையும் வாயையும் கட்டிக்கொண்டு தூக்கில் தொங்கினால்தான் இவ்வுலகக் காட்சி பற்றிய கடைசி நேரக் கதறல் இல்லாமல் மரணத்தைத் தழுவ முடியும், நேரடியாக மோட்சத்தை அடைய முடியும் என்று நம்பியிருக்கிறார்கள். அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்பேடுகளில் இத்தகைய நம்பிக்கைகள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன.

இறந்துபோனவர்களில் ஒருவரான குடும்பத் தலைமையாக மதிக்கப்பட்ட முதிய பெண் நாராயண் தேவியின் மகன் 2008ல் காலமானார். அவருடைய மகன் அப்போதிருந்தே வீட்டில் பூசைகள் யாகங்கள் என்று செய்து வந்திருக்கிறார். அந்தப் பூசைகளின்போது தனது தந்தை அங்கே வந்து உடனிருந்து கவனிப்பதாகச் சொல்லிவந்திருக்கிறார். குடும்பத்தில் எல்லோரையும் அழைத்துக்கொண்டு தன்னிடம் வந்துவிடுமாறு தந்தை சொல்வதாகவும் மகன் கூறிவந்திருக்கிறார்.

பிணக்கூராய்வு அறிக்கையில், அவர்களில் யாரும் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் உடல்களில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆக, தாங்களாக ஏற்றுக்கொண்ட முடிவின்படியே தூக்கில் தொங்கினார்கள் எனத் தெரிகிறது. குடும்பத்தினர் எல்லோருமாய் இருக்கிற படங்களை, குறிப்பாகப் பெண்கள் குழுவாக அமர்ந்திருக்கிற படங்களைப் பார்க்கிறபோது இவ்வளவு அழகாகவும் படித்த தெளிவோடும் காணப்படுகிற இவர்களா இந்த முடிவை எடுத்தார்கள் என்ற பரிவிரக்கம் ஏற்படுகிறது.

குடும்பமாகத் தற்கொலை செய்துகொண்டது பற்றிய செய்திகள் அடிக்கடி வந்து நம்மைத் தாக்கவே செய்கின்றன. பெரும்பாலும் அவை அந்தக் குடும்பங்களில் ஏற்பட்ட ஆழமான கடன் நெருக்கடி, ஏதோவொரு மானக்கேடான பாதிப்பு போன்ற காரணங்களால் நிகழ்கின்றன. நம்பிக்கை சார்ந்த தற்கொலைகள் பற்றிய செய்திகள் அடிக்கடி வராவிட்டாலும் அவ்வப்போது வருகின்றன. போர், எதிரிப் படைகள் சுற்றிவளைப்பு போன்ற நிலைமைகள் ஏற்பட்டபோது குடும்பம் குடும்பமாக மொத்தக் குடிமக்களும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் பல்வேறு நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகியுள்ளன. ஆதாரம் இல்லாத அளவும் இல்லாத நம்பிக்கைகள் காரணமாசகக் கூட்டமாகத் தற்கொலை, குடும்பமே தற்கொலை என்ற துயரங்கள் எப்போதேனும் நிகழ்கின்றன.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் சூரியக் கோவில் ஒன்று உள்ளது. அதனைத் தங்களது வழிபாட்டுத் தலைமையகமாகக் கொண்ட ஒரு பிரிவினர் கனடா உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளனர். மறுபடியும் ஏசு பிறக்கப் போகிறார் என்று நம்பிய அவர்கள், கிறிஸ்துவமும் இஸ்லாமும் ஒரே மதமாக இணைய வேண்டும் என்று விரும்பினார்கள், அதற்காகப் போரிடத் தயாராக இருந்தார்கள். அந்த நோக்கத்திற்காகக் கொலை செய்வது புனிதப் போரின் ஒரு பகுதி என்று குருமார்களால் நம்பவைக்கப்பட்ட அவர்களிடையே தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன. 1994ல் கனடாவில் 3 வயதுச் சிறுவன் ஒருவன், அவன் கிறிஸ்துவின் எதிரி என்று தெரியவந்ததாக அறிவிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டபோது இந்தப் பிரிவினர் பற்றிய தகவல்கள் வெளியே தெரியத் தொடங்கின. அதே ஆண்டு பிற்பகுதியில், அந்தப் பிரிவைச் சேர்ந்த பெரியவர்களும் குழந்தைகளுமாய் 48 பேர், அவர்களுடைய ஒப்புதலுடன், தலைமைக் குருவால் தலையில் சுடப்பட்டுத் தற்கொலை செய்துகொண்டார்கள். காவல்துறையினர் வந்து சேர்ந்தபோது அந்தக் குருவும் தன்னைத்தானே தலையில் சுட்டு இறந்துகிடந்தார்.

அமெரிக்காவில் 1970களில் ஹெவன்’ஸ் கேட் (சொர்க்க வாசல்) என்பதில் நம்பிக்கை வைத்த ஒரு பிரிவினர் இயங்கிவந்தார்கள். ஒரு பழமையான கிறிஸ்துவ நம்பிக்கையும் நவீன அறிவியல் தகவல்களுமாய் தலையில் புகுத்தப்பட்டவர்கள் அவர்கள். பூமி ஒரு நாள் அழியப்போகிறது, அதற்கு முன் அடுத்த கட்டத்தை அடைந்துவிட வேண்டும், அதற்கு வழி இவ்வுலகின் மண், பொருள்கள், உற்றார் மீதான பற்றைத் துறப்பதுதான், இறுதியாகச் சொந்த உடலையும் விட்டுவிட்டுப் புறப்படத்   தயாராக இருங்கள் என்று அவர்களுக்குப் போதித்து வந்தார் மார்ஷல் ஆப்பிள்ஒயிட் என்ற குரு. 1997ல் ஹாலி பாப் என்ற வால்நட்சத்திரம் வந்தபோது, அதன் பின்னால்  விண்வெளி வாகனம் ஒன்று போகிறது என்றும், அதில் பயணித்தால் சொர்க்க வாசலை அடையலாம் என்றும், ஆனால் இந்தப் பூதவுடலோடு அந்த வாகனத்தில் ஏறமுடியாது என்றும் சொல்லிவந்தார். ஒரு நாள் அந்த வால் நட்சத்திரம் பிரகாசமாகத் தெரிந்தது. அப்போது அவரும் 38 விசுவாசிகளும் கூண்டோடு தற்கொலை செய்துகொண்டார்கள். அப்படியொரு வாகனத்தில் 39 பேரின் ஆன்மவுடல்கள் பயணம் செய்தனவா என நாஸா ஆராய்ச்சி எதிலாவது தெரியந்ததா என்பது தெரியவில்லை.

தென்னமெரிக்காவில் கயானா நாட்டில் 1950களில் பீப்பிள்ஸ் டெம்பிள் (மக்கள் ஆலயம்) என்ற வழிபாட்டு மையம் கட்டப்பட்டிருந்தது. அதன் தலைமை குரு ஜிம் ஜோன்ஸ் அந்த நாட்டில் நிலவிய இனப் பாகுபாட்டையும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் எதிர்த்துப் பரப்புரை செய்தார். அதேவேளையில் தனது சொந்த வழிமுறையில் சமத்துவத்துக்கான பாதை என்பதாக ஒன்றை அறிவித்து, விசுவாச மக்களை உண்மையான சமத்துவ இயக்கங்களோடு இணையவிடாமல் தடுத்தார். பாவங்களுக்குத் தண்டனை என்ற பெயரில் குழந்தைகளின் உடலில் கூட கூரிய ஆயுதத்தால் துளையிட்டுப் பாவ மன்னிப்பு வழங்கினார். பெண்களைப் பாலியல் அடிப்படையிலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 1978ல் இந்தச் சமூகம் பற்றி விசாரிப்பதற்காக வந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லியோ ரையான் என்பவரும், முகாமிலிருந்து தப்பித்துப் போக முயன்ற சிலரும் கொலை செய்யப்பட்டார்கள். அமெரிக்க அரசு தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்த்த அவர், கூட்டத்தில் எஞ்சியிருந்த 912 பேரையும் அழைத்து, “ஆலயத்தைக் காப்பாற்ற தியாகம் செய்வோம்” என்று அறிவித்தார். அவரோடு சேர்ந்து அத்தனை பேரும் நஞ்சு கலந்த புனித நீர் பருகி உயிர் நீத்தார்கள்.

ஆன்மீகத் தற்கொலையின் இந்தியப் பதிப்பு

இத்தகைய பெரிய, சிறிய ஆன்மீகத் தற்கொலைகள் பல நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவும் இதைக் கண்டிருக்கிறது. சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்ட கரப்பா என்ற ஊரில் ஒரே குடும்பத்தில் மூன்று பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். அந்தத் தாய் தனது மகனின் பிறந்தநாளையொட்டி மகள்களோடு கோவிலுக்குச் சென்றார். வீட்டுக்குத் திரும்பியவர்கள், தங்களை பகவான் அழைப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த அவர்கள் நள்ளிரவுக்குப் பின் தூக்கில் தொங்கிவிட்டார்கள். பகவான் அவர்களைச் சேர்த்துக்கொண்டாரா என்பது, இயற்கையான மரணமடைந்து பகவானைச் சேர்கிறவர்களுக்குத்தான் வெளிச்சம்.

கடவுள் சார்ந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு இணைந்து இப்படிப்பட்ட தற்கொலைகள் நடந்திருந்தாலும் மதங்கள் தற்கொலையைத் தூண்டுவதாகக் கூற முடியாது. சமண மதத்தில், ஒருவருக்கு முதுமை எய்திய நிலையில் சாவு நிச்சயம் என்று தெரிகிறபோது, அது வரையில் பட்டினி கிடந்து தாகம் கூடத் தணிக்காமல் மரணத்தைத் தழுவுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதைத் தற்கொலை என்று வகைப்படுத்த முடியுமா என்ற விவாதம் தொடர்கிறது. இருந்தாலும், ஆயுளின் கடைசி நொடி வரையில் வாழ்வை அனுபவித்திருக்கவே மனிதர்களின் பொதுவான, இயல்பான, நியாயமான விருப்பம் என்பதால் என்னதான் முதுமைக்கட்டம் என்றாலும் இதில் தற்கொலையின் ஒரு கூறு இருப்பதை மறுப்பதற்கில்லை.

புத்த மதக் கோட்பாட்டின்படி, உயிரை அழிப்பது பாவச் செயல் – அது தனது உயிராகவே இருந்தாலும் கூட. அப்படித் தனது உயிரைத் தானாகவே மாய்த்துக்கொள்கிறவர் எதிர்மறையான சிந்தனைகள் காரணமாக அடுத்த பிறவியில் இப்பிறவியின் அதே துன்பங்களோடுதான் வாழ வேண்டியிருக்கும் என்றும் புத்தம் எச்சரிக்கிறது.

ஆன்மா உன்னுடையதில்லை, ஆகவே அதைக் கொல்வதற்கான அதிகாரம் உனக்கு இல்லை என்கிறது இந்து மதம். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகே மனிதப் பிறவி வாய்க்கிறது, அதை முறையாக நிறைவு செய்வதன் மூலமாகவும் புண்ணியச் செயல்கள் வழியாகவும்தான் பிறவா வரத்தைப் பெற முடியும் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன. இந்துப் புராணங்களின்படி, தெய்வங்களே கூட மனிதப் பிறவியெடுத்து மண்ணுக்கு வந்துதான் நிலையான உச்சநிலையை அடைய முடியும். அப்படிப்பட்ட பிறவியை – அது பிறருடையதாக இருந்தாலும் தன்னுடையதாக இருந்தாலும் அழிப்பது பாவச் செயல்.

மரணத்திற்கு முன்பே கல்லறை

அதே சமயத்தில், மகாசமாதி அடையவிருந்த சுவாமி ராகவேந்திரர், தவநிலையில் அமர்ந்துகொண்டு தனக்கான கல்லறையை தன்னைச் சுற்றிக் கட்டுமாறு பக்தர்களைக் கேட்டுக்கொண்ட கதையும் இருக்கிறது. கணவன் இறந்துவிட்டால் மனைவியை உடன்கட்டை ஏறச்செய்வது ஒரு புனிதச் சடங்காகவே அல்லவா இருந்துவந்தது. சட்டப்படி அது தடுக்கப்பட்டுவிட்டாலும், ராஜஸ்தானில் அவ்வாறு பூசைகளுடனும் மந்திர உச்சரிப்புகளோடும் 18 வயது ரூப் கன்வார், தனது கணவனுடன் மறுவுலகில் வாழலாம் என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டு சிதையிடப்பட்டது நடந்து 31 ஆண்டுகள்தான் ஓடியிருக்கின்றன. அந்த ஊரில் அவருக்குக் கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு ஆண்டுதோறும் மக்கள் கூட்டம் வருகிறதே!

தற்கொலை அல்லாவால் தடுக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்லாம் சமயம் கூறுகிறது. “உன்னை நீயே கொன்றுகொல்லாதே. இறைவன் உன்னிடம் மிகுந்த கருணையோடு இருக்கிறார்,” என்று குரான் அறிவுறுத்துகிறது என்று இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

பாவத்தின் சம்பளம் மரணம் எனக்கூறும் கிறிஸ்துவம் தற்கொலை கர்த்தரை அவமதிக்கிற செயல் என்று சொல்கிறது. தற்கொலைக்குப் பாவமன்னிப்பு கிடையாது என்றும் கூறுகிறது. உனது உயிர் ஆண்டவரின் உடைமை, பூமிக்கு ஆண்டவரால் வழங்கப்பட்ட கொடை, அதை நீ அழிப்பதென்பது ஆண்டவரின் அதிகாரத்தில் ஒரு அத்துமீறல்தான் என்றும் பைபிள் அறிவுரைகளில் கூறப்பட்டுள்ளது.

தற்கொலையை தடுக்கும் மதங்கள்

மதங்கள் தற்கொலையை ஆதரிக்கவில்லை என்பதோடு, தற்கொலை மனப்பான்மைக்கு மாறான நம்பிக்கையையும் ஊட்டுகின்றன என்று சமூகவியலாளர்கள் வாதிடுகிறார்கள். எவ்வளவு துயரம் நேர்ந்தாலும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை ஒருவரை விபரீத முடிவுகள் எடுப்பதிலிருந்து தடுக்கிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வாழ்க்கை பற்றிய அறிவியல் கண்ணோட்டங்களும் பகுத்தறிவுச் சிந்தனைகளும் முழு ஆளுமைக்கு வராத சமுதாயக் கட்டமைப்பில் மதங்களுக்கு இப்படிப்பட்ட பங்களிப்பு இருப்பது புரிந்துகொள்ளத்தக்கதுதான்.

மதம் ஒரு அபின் என்று கார்ல் மார்க்ஸ் சொன்னதோடு இதைப் பொருத்திப் பார்க்கலாம். “மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் ஆறுதல். இதயமற்ற உலகின் இதயம். ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மா,” என்றெல்லாம் சொல்லிவிட்டுதான் அவர் மதத்தை அபினோடு ஒப்பிட்டார். மதம் ஒரு போதைப் பொருள் என்ற பொருளில் அவர் சொல்லவில்லை, மருத்துவத்தில் வலியை மறக்கச் செய்வதற்கான ஒரு மருந்தாக அபின் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் அது ஒரு வலி மறப்பு மருந்துதானேயன்றி, நோயை முற்றிலுமாகத் தீர்க்கும் மருந்து அல்ல என்ற பொருளிலும் மார்க்ஸ் இவ்வாறு கூறினார்.

இவ்வாறாக மதங்கள் தற்கொலைக்கும் கொலைக்கும் எதிரான கருத்துகளைத்தான் கூறுகின்றன. ஆனால், கடவுளையே காப்பாற்றப் புறப்படுகிறவர்கள் மற்ற மனிதர்களின் உயிரை அழிக்கக் கூச்சப்படுவதில்லை. மத அடையாளமும் மத ஆதிக்க வெறியும் மதவாத அரசியல் அதிகார போதையும் கூடிய தீவிரவாதக் கும்பல்களின் தற்கொலைப் படைகளில் தங்களை ஒப்படைத்துக்கொண்டு, எளிய மக்களைக் கொன்று குவிக்க வெடிகுண்டுகளையும் அரிவாள்களையும் தீப்பந்தங்களையும் தூக்கிச் செல்கிறவர்களின் மூளைகளிலிருந்து மனித நேயம் துடைத்தழிக்கப்பட்டுவிடுகிறதே.

பக்திக்குள் பகுத்தறிவு

உலகில் பெரும்பான்மையினர் கடவுள் நம்பிக்கையும் சமயப் பற்றும் உள்ளவர்கள்தான். அவர்கள் எல்லோரும் சொர்க்கத்தை அடையத் தற்கொலையே வழி என்றா நினைக்கிறார்கள்? அல்லது தங்களது நம்பிக்கைக்காக பிற நம்பிக்கையாளர்களைக் கொல்ல நினைக்கிறார்களா? உன் கடவுளை நீ கும்பிட்டுக்கொள், என் கடவுளை நான் கும்பிட்டுக்கொள்கிறேன் என்றுதான் மிகப் பெரும்பாலான மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். விதிவிலக்காக, குறுகியதொரு சதவீதத்தினர் மட்டுமே தற்கொலை வழிபாடுகளிலும் கொலைக் கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மைதான்.

கடவுள் நம்பிக்கை உள்ள அநாத்திகர்களில் ஆகப் பெரும்பாலோர் அப்படியே நம்பிக்கையில் ஊறிப்போய்விடவில்லை. கடவுளால் எல்லாம் சரியாக நடந்துவிடும் என்று அவர்கள் சும்மா இருந்துவிடுவதில்லை. தேர்வு எழுதச் செல்கிறவர் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பதோடு நிற்பதில்லை, பாடங்களைப் போராடிப் படித்து மனதில் பதித்துக்கொண்டுதான் போகிறார். நோய்வாய்ப்படுகிறவர் தொழுகையில் வேண்டுகோள் விடுத்ததோடு நின்றுவிடுவதில்லை, சரியான மருத்துவமனையில் சேர்ந்து, தனது சேமிப்புத் தொகையை மருத்துவக் கட்டணமாகச் செலுத்துகிறார். தொழிலில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறத் திட்டமிடுகிறவர் தனது ஜெபம் போதுமென்று நின்றுவிடுவதில்லை, யார் யாரைப் பிடிக்க வேண்டுமோ அவர்களைப் பிடிக்கிறார், என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறார். பக்திக்குள்ளேயே இருக்கிற இந்தப் பகுத்தறிவுதான் கொலையிலிருந்தும் தற்கொலையிலிருந்தும் தடுத்து வாழ்க்கையை வாழச் செய்கிறது.

இந்தப் பாதுகாப்பு வளையங்களையெல்லாம் தாண்டிச் சிலரைக் கவ்விக்கொள்கிற மிகை நம்பிக்கைகள்தான் அவர்களைக் தற்கொலைகாரர்களாக மாற்றுகின்றன. இந்த உலகம் பற்றிய உண்மைகள் அவர்களைச் சென்றடையாததே இதற்கு முதற்காரணம். ஏதோவொரு வகையில் சிறுவயதிலிருந்து ஊட்டப்பட்ட கடவுள் நம்பிக்கை, வாழ்க்கை பற்றிய புரிதல்களுக்கு வந்தடையாத நிலையில், தங்களது துன்பங்களிலிருந்தும் இவ்வுலக மாயைகளிலிருந்தும் விடுதலை செய்ய யாராவது கிடைக்க மாட்டார்களா என்று தேடவைக்கிறது. அப்படியொருவர் கிடைத்துவிட்டதாக நினைக்கிறபோது அவர் காட்டுகிற எந்த வழியில் வேண்டுமானாலும் கண்ணை மூடிக்கொண்டு நடப்பதற்குத் தயாராகிறார்கள். அந்த ஒருவர் சமூகத்தில் ஒரு குருவாக இருக்கலாம், குடும்பத்தில் அதிகாரமுள்ளவராக இருக்கலாம்.

நாட்டில் அல்லது உலகத்தில் எங்கோ எப்போதோ நடக்கிற அரிதான நிகழ்வுதானே என்று அரசுகளும் பொதுமக்களும் சும்மா இருந்துவிடக்கூடாது. ஏதோவொரு மூலையில் யாரோவொருவரது மூளையில் இந்த மோட்சத் தற்கொலை எண்ணம் முளைவிட்டிருந்தாலும், அதில் நமக்கும் பங்கிருக்கிறது என்ற உறுத்தல் ஏற்பட வேண்டும். உலகமும் வாழ்வும் மாயை அல்ல என்ற ஞானத்தை வலுவாக ஏற்படுத்தத் தவறியிருக்கிறோம். இதை விட்டால் இன்னொரு வாழ்க்கை இல்லை என்ற தெளிவை ஏற்படுத்தத் தவறியிருக்கிறோம். தற்கொலை அளவுக்குப் போகாவிட்டாலும், சூரிய கிரகணத்தின்போது சாப்பிடாமல் இருப்பது, நோண்பின் பெயரால் பட்டினி கிடப்பது, கன்னத்தில் அலகு குத்திக்கொள்வது, முதுகில் வேல் குத்திக்கொள்வது, சாட்டையாலோ கத்தியாலோ அடித்துக்கொண்டே ஊர்வலம் போவது என ஏதோவொரு சதவீதத்திற்கு இயற்கைக்கு மாறாக உடலை வருத்திக்கொள்வது இருக்கத்தானே செய்கிறது? அது அணை போடப்படாமல் கரை மீறுகிறபோதுதான் யாரோ சிலர் வெள்ளத்தில் மூழ்கிப்போகிறார்கள்.

சமூகப் பொறுப்பு

சிலர் சித்தரிப்பது போல இது வெறும் உளவியல் பிரச்சனை அல்ல. அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கத் தவறிய அரசு, சமயம், சமூகம் என கூட்டுப்பொறுப்பு இருக்கிறது. அதை முதலில் உணர்வோம். நமது குடும்பத்தில், நமது உறவுகளுக்குள், நமது நட்பு வட்டாரத்தில், நமது தெருவில், நமது அண்டை வீட்டில் இப்படியான அசாதாரண நம்பிக்கை மனநிலையோடு யாரேனும் இருந்தால், நடப்பு உலகத்தில் அவர்களை வாழவைக்கிற பொறுப்பை ஏற்போம்.

மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தாராம். இவ்வளவு சொத்துகள் இருந்தாலும் எதையும் எடுத்துக்கொண்டு போக முடியாதே என்ற எண்ணம் அவரைத் தினமும் வாட்டியதால் தூக்கமின்றித் தவித்தாராம். அவர் நிம்மதியாக இறப்பது முக்கியம் என்று கூறிய மருத்துவர், அவருக்கு நம்பிக்கைக் கதைகளைச் சொல்லுங்கள் என்று குடும்பத்தாரிடம் சொன்னாராம். உறவினர்கள் கூடிப் பேசி, சில சமயப் பெரியவர்களை அழைத்து அவருடன் உரையாடச் செய்வது என்று திட்டமிட்டார்களாம். அதன்படி தினமொரு சமயப் பெரியவர் அவரது அறைக்கு வந்து, கட்டிலருகில் அமர்ந்து இறையருள் பற்றியும், மரணத்துக்குப் பிந்தைய மறுவாழ்வு குறித்தும் புராணக் கதைகளைச் சொல்லி நம்பிக்கை ஏற்படுத்தினார்களாம். சற்றுத் தெளிவடைந்த செல்வந்தர் வழக்குரைஞரை அழைத்துவரச் சொன்னாராம். அவரிடம் தனது உயிலை எழுதக் கேட்டுக்கொண்டாராம். கதைகள் சொல்வது தொடர்ந்தது. கவலையெல்லாம் மறைந்து மனநிறைவோடு காணப்பட்ட பெரியவர் ஒருநாள் நிம்மதியாகக் கண்மூடினாராம். இறுதி நிகழ்ச்சிகள் தடபுடலாக முடிந்தபிறகு, உறவினர் கூட்டம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வழக்குரைஞரை வரவழைத்துப் பெரியவரின் உயிலைத் திறந்து படிக்கக் கூறினார்களாம். பெரியவர் இப்படி எழுதியிருந்தார்: “மறுவாழ்வில் நம்பிக்கை ஏற்படக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது அசையும் அசையா சொத்துகள் அனைத்தையும் அடுத்த பிறவியில் எனக்கே எழுதி வைக்கிறேன்.”

இந்தக் கதையைப் படித்துச் சிரிப்பதோடு, இந்த உலகமும் இந்த வாழ்க்கையும்தான் உண்மை என்ற கதையின் செய்தியை உள்வாங்கிக்கொள்வோம், ஊருக்கும் சொல்வோம்.