நீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டம்: எடப்பாடி பழனிசாமி உறுதி!

சென்னை:

நீட் விலக்கு விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

சட்டமன்றத்தில் நேற்று நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது,

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இரு மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஆனால் அவை நிராகரிக்கப்பட்டு விட்டது. இது நடந்து 21 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளது.

இந்த விஷயத்தை தெளிவுபடுத்தாமல், தமிழக அரசு மறைத்து விட்டது. எனவே சற்றும் தாமதிக்காமல் புதிய மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சிவி சண்முகம் நீட் மசோதா விவகாரத்தில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. எங்களுக்கு நிராகரிப்பு என தகவல் ஏதும் வரவில்லை என்று கூறினார்.

பின்னர் பேசிய ஸ்டாலின், இரண்டு ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்ததாக கூறினீர்கள் என்று வினவினார்.

இதையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மாணவர்கள் நலனிற்காக பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். தற்போதும் கடிதம் எழுதி உள்ளோம். அதே நிலை தான் தற்போதும் நீடிக்கிறது. இந்த விவகாரத்தில்  தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடத்தி, நீட் விலக்கு பெற நடவடுக்கை எடுப்போம் என்று கூறினார்.