6வது மாநிலம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

டெல்லி:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுவை சட்டப்பேரவையில் இன்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக மத்தியஅரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய 6வது மாநிலமாக புதுச்சேரி மாநிலம் திகழ்கிறது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட 5 மாநில சட்டமன்றங்களில், சிஏஏ சட்டத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், புதுச்சேரியிலும், சிஏஏ சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், அதற்காக சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என்றும்  மாநில முதல்வர் வி.நாராயணசாமி ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆனால், மாநில ஆளுநர்  கிரண்பேடியோ, புதுச்சேரி அரசு  தீர்மானம் நிறைவேற்றமுடியாது என கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

ஆனால், அவரது  எதிர்ப்பையும் மீறி இன்று கூட்டப்பட்ட புதுச்சேரி சிறப்புக்கூட்டத்தில், முதல்வர் நாராயணசாமி  குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது, கிரண்பேடி கவர்னராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர் என்று கூறியவர், இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளார். புதுச்சேரியிலும் ஒன்றரை லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டத்தை ஏற்க மாட்டோம். அரசை நீக்க வேண்டும் என்று நினைத்தால் அதை செய்து கொள்ளட்டும் என்பதை பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்றார்.

இதனையடுத்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான அரசின் தீர்மானத்தை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து வாசித்தார். அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது. சட்டத்தை செயல்படுத்தினால் வரலாற்றுப் பிழை ஏற்படும் எனக் கூறினார்.

பின்னர் திமுக ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாகக் கூறி நிறைவேற்றினார்.

இதை பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,  சட்டமன்றத்தின் அதிகாரம் என்ன என்பது துணைநிலை ஆளுநருக்கு தெரியவில்லை என்று கூறியவர், இதற்காக ஆட்சியை கலைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, CAA சட்டத்தை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்தார்.