குடும்ப அட்டைகளில் திருத்தம்: சென்னையில் உள்ள 17 மண்டங்களில் நாளை சிறப்பு முகாம்

சென்னை:

குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், மாற்றம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் வட்டம் வாரியாக  மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் 17 மண்டங்களுக்கான குறைதீர்ப்பு முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில்  நாளை (13ந்தேதி) நடைபெறும்  என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள 17 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளைக்கேட்டு தீர்வு காணும் பொருட்டு  மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே 13.10.2018 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும், நுகர்வோருக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் உள்ள 17 மண்டல பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.