அபுதாபி, துபாய், யுஏஇ நாடுகளில் இருந்து இந்தியர்கள் வெளியேற சிறப்பு முகாம்: இந்திய தூதரகம் ஏற்பாடு

புதாபி, துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் சட்டவிரோதமாக தங்கி வேலைசெய்து வரும் இந்தியர்கள் வெளியேறும் வகையில் இந்திய தூதரகம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படு வதாக இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு)  முதல் அக்டோபர் மாதம் வரை சுமார்  90 நாட்களுக்குள் சட்டவிரோத மாக தங்கியிருக்கும் இந்தியர்கள்,  எந்த வித தடையும், தண்டனையும் இல்லாமல் வெளியேற இந்திய தூதரகம் உதவி செய்யும் வகையில் முகாம்கள் அமைக்கப்படும் என்று  இந்திய தூதரகம்  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகளில் நாடுகளில் வேலைக்கு சென்ற இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல லட்சம் பேர், சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

இந்த நாடுகளில், இந்தியாவை சேர்ந்த பொறியாளர்கள், செவிலியர்கள், கட்டுமான தொழிலாளர் கள், வாகன ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள், வீட்டுப் பணியாளர்கள் என, பெரும்பாலான பணிகளில் இந்திய நாட்டவரே ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 70 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருவதாகவும், இவர்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.  வளைகுடா நாடுகளின் எண்ணெய் நிறுவன கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு , கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால், பல எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு சென்றுள்ளன.

அதன் காரணமாக அங்கு பணி செய்து வந்த தொழிலாளர்களுக்கான , ஊதிய உயர்வு நிறுத்தம்; பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதி போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இதனால், குடும்பத்துடன் வசித்து வந்த, இந்திய தொழிலாளர்கள், குடும்பங்களை, இந்தியாவுக்கு திரும்ப அனுப்புகின்றனர். தனியாக வசித்து வந்த பல தொழிலாளர்கள், மாத வருமானம் போதாத நிலையில், நாடு திரும்புகின்றனர்.

இதற்கிடையில் வேலைக்காகவோ மற்றும் படிப்புக்காகவோ ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்பவர்கள் இனிமேல் நன்னடத்தை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் இந்த புதிய விதியும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில்,  ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் (UAE) சட்ட விரேதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் (விசா காலம் முடிந்த பிறகு/ முறைகேடாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள்) பொது மன்னிப்பு பெறுவதற்கு உதவி செய்ய அபுதாபியிலும், துபாயிலும் அடுத்த வாரத்திலிருந்து உதவி முகாம்கள் அமைக்கப்படும் என்று அபுதாபியிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.