ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: இந்திராணியின் அப்ரூவர் விண்ணப்பத்தை பரிசீலிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி

டில்லி:

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில், அப்ருவராக மாறுவதாக தெரிவித்த இந்திரானி முகர்ஜியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்திராணி முகர்ஜி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய நிதி அமைச்சராக ப.சி. இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த நிறுவனம், இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி தம்பதியால் நடத்தப்பட்ட ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அதில், சர்ச்சைக்குரிய பணம், மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரத்திற்கு  சொந்தமான நிறுவனத்திற்கு தரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அப்போது ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது அதை பயன்படுத்தி வெளிநாட்டு மூலதன மேம்பாட்டு வாரியம் கார்த்தி சிதம்பரத்தின் இந்த பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளித்தாகவும் சிபிஐ தனது குற்றச்சாட்டில் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம், அவரது நிறுவனமான செஸ் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ், ஐஎன்எஸ் மீடியா நிறுவனம், அதன் உரிமையாளர்களான இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி, அட்வாண்டேஜ் ஸ்டிராடஜிக் கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனம், அதன் இயக்குநர் பத்மா விஸ்வநாதன், ஆகியோர் மீது சிபிஐ  வாக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு சம்பந்தமாக பல்வேறு கட்ட விசாரணைகள், ரெய்டுகள் நடைபெற்று முடிந்த நிலையில் விசாரணை தொடர்ந்து வருகிறது.  இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, ஐஎன்எக்ஸ் மீடியா  நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்திராணி முகர்ஜி, இந்த வழக்கில் அப்ரூவராக மாறுவதாக சிபிஐயிடம் கூறியிருந்தார்.

தற்போது தனது  மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், டில்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ஐஎன்எக்ஸ் வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவர்  அப்ருவராக மாறுவதாக தெரிவித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.  வரும் 11ந்தேதிக்கு வழக்கு விசாரணையின் போது, இந்திராணி முகர்ஜி ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

அப்போதுதான், அவர் அப்ரூவராக மாறுவதற்கு ஒப்புக்கொண்டது ஏன்? அச்சுறுத்தலுக்கு பயந்து ஒப்புக்கொண்டாரா? அல்லது தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும் என்று வழக்கறிஞர் கூறியதால் ஒப்புக்கொண்டாரா? என்பது குறித்து நீதிமன்றம் அவரிடம் விசாரிக்கும் என தெரிகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: become an approver, Indrani Mukerje, INX MEDIA CASE, Karthi Chidambaram, P. Chidambaram, Special CBI Court
-=-