இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர்  முஷரப்பை கைது செய்ய பாகிஸ்தான் சிறப்பு நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தானில் 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை  சுமார் 9 ஆண்டுகாலம் அதிபராக பதவி வகித்தவர் முன்னாள் ராணுவ தளபதி முஷாரப்.

இவர் தனது பதவிக்காலத்தில் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி  பல நீதிபதிகளை கைது செய்தும், நீக்கியும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

அவரது பதவி காலத்தை தொடர்ந்து ஆட்சி மாறியதை தொடர்ந்து, முஷரப் மீது தேச துரோக வழக்கு மற்றும் பெனசிர் பூட்டோ கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் பாய்ந்தன.

இந்தநிலையில், முஷரப் மீதான தேசத்துரோக வழக்கு பெஷாவர் கோர்ட்டில்  தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிடி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் நேற்றைய விசாரணையை தொடர்ந்து, நீதிமன்றம், முஷரப்பை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முஷரப் கடந்த 2 ஆண்டுகளாக, சிகிச்சை பெற்று வருவதாக கூறி துபாயில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.