Random image

எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்: முதல்வழக்காக ஸ்டாலின் வழக்கு விசாரணை

சென்னை:

ரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள  சிறப்பு நீதி மன்றத்தில், முதல் வழக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள  எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த 17ந்தேதி  தமிழக அரசு  அரசாணை பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து சென்னையில் இன்று திறக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு முதல் வழக்காக விசாரிக்கப்பட்டது.

குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.வின் அஸ்வினி உபாத்யாயா என்ற மூத்த வழக்கறிஞர் கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில்மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுமீதான விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம், நாடு முழுவதும் எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கு 12 சிறப்பு நீதி மன்றங் களை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு வந்தது. அந்த நீதி மன்றம் இன்று முதல் தனது பணியை தொடங்கி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.  சுமார் 97 லட்சம் ரூபாய் செலவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் முதல்மாடியில் அமைக்கப்பட்டுள்ள   சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி. ரமேஷ் இன்று தொடங்கி வைத்தார். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக மாவட்ட நீதிபதி ஜெ. சாந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், ஊடகங்கள் மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை பெரிது படுத்திக் காட்டுவதாக தெரிவித்தார். மேலும், நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் முன்னரே ஊடகங்களே சிலரைக் குற்றவாளிகள் எனத் தீர்மானித்து விடுவதாகவும் அவர் விமர்சித்தார். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், விரைந்து தீர்ப்பளிக்க இந்த சிறப்பு நீதிமன்றங்கள் உதவும் எனவும் நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் தெரிவித்தார்.

சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி

தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக 260 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவை அனைத்தும் இந்த சென்னையில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதைத்தொடர்ந்து  சிறப்பு  நீதிமன்றத்தில் முதல் வழக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 2011-ல் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று முதல் வழக்காக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர் அந்த வழக்கின் விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது