தமிழக எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: அரசாணை வெளியீடு
டில்லி,
அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கு 12 சிறப்பு நீதி மன்றங் களை அமைக்கும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய நிலையில் டில்லியில் கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசும் அரசாணை வெளியிட்டு உள்ளது.
குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.வின் அஸ்வினி உபாத்யாயா என்ற மூத்த வழக்கறிஞர் கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின் படி குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட அரசியல் வாதிகளின் சிறைத் தண்டனை முடிந்த பிறகு, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்து, குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ் நாள் தடை விதிக்கலாம் என்றும், அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தால் மட்டும் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்று கூறியது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில், எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்க, 7.8 கோடி ரூபாய் செலவில், 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் மார்ச் 1ம் தேதிக்குள் செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் காலக்கெடுவும் விதித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.