எம்பி., எம்எல்ஏ.க்களின் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்…மத்திய அரசு

டில்லி:

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘‘தண்டனை பெற்ற எம்.பி., எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட வேண்டும்’’ என உச்சநீதிமன்றத்தில் வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல மனுவகை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு அபிடவிட்டை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ‘‘நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அரசியல்வாதிகளுக்கு எதிரான 1,581 கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்க 12 சிறப்பு நீதிமன்றங்களை முடிக்க திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 8 மாநில சட்டசபைத் தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்ட வழக்குகள்தான் இவை. சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் திட்டம் தொடர்பாக இரு பக்கங்கள் அடங்கிய அபிடவிட்டை மத்திய சட்ட அமைச்சக கூடுதல் செயலாளர் ரீட்டா வசிஷ்தா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ரூ. 7.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைபட்டால் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.