காதல் திருமணம் முழுச் சுதந்திரத்தோடுதான் நடக்கிறதா?

காதல் திருமணம் முழுச் சுதந்திரத்தோடுதான் நடக்கிறதா?

சிறப்புக் கட்டுரை

அ. குமரேசன்

கிளிஜோசியக்காரர்களின் கூண்டுகளில் மட்டுமல்ல, வீடுகளில் செல்லமாக வளர்க்கிறவர்களின் கூண்டுகளில் இருக்கிற கிளிகளும், கதவு திறக்கப்படுகிறபோது பறந்துபோய்விடுவதில்லை. குஞ்சுப் பருவத்திலிருந்தே கூண்டுச் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிடுவதால் வெளியேறுகிற உணர்வு ஏற்படுவதில்லை போலும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான், இறக்கையில் விசிறி போல விரியத் தொடங்குகிற இடத்தில் மையமாக ‘ப’ வடிவில் வெட்டிவிடுவார்கள், வெளியேயிருந்து பார்க்கிறபோது அது கண்ணுக்குத் தெரியாது என்று கேள்விப்பட்டேன். வெட்டிவிடப்பட்ட இடைவெளியில் காற்று ஊடுருவும் என்பதால், காற்றை அழுத்தித் தள்ளிக்கொண்டு கிளியால் முன்னேறிப் பறக்க முடியாது.

மனிதர்களுக்கு உணவு, தண்ணீர், செல்லம் எல்லாம் கொடுத்துப் பறக்க முடியாதபடிக்கு இறக்கைகளை வெட்டி வைக்கிற ஏற்பாடுகள் என்னென்னவோ இருக்கின்றன. மனிதர்களை மந்தைகளாகப் பிரித்துப் பட்டிகளில் அடைத்துவைக்கும் மதம், சாதி, இனம், பூமியின் மேனியில் இரத்தக்கீறல்களான எல்லைக்கோடுகள் – இவற்றை அத்தகைய ஏற்பாடுகளாகத்தான் பார்க்கிறேன். பிறக்கிற வரையில் எதுவாகவும் இல்லாமல், இறந்த பின்னரும் எதுவாகவும் இல்லாமல் போகப்போகிற குறுகிய ஆயுள் காலம் இப்படி எங்கும் பறக்க முடியாமல் போவது மனிதர்களின் மிகப்பெரும் சோகம். அந்தச் சோகத்தைத் துடைத்தெறியும் ஆற்றலும், இறக்கைகளின் துளைகளை அடைத்துப் பறக்கவைக்கிற வல்லமைதயும் கொண்டது காதல்.

இயல்பாகவே காதல் ஒரு சுதந்திரம்தான். ஆயுள் முழுக்க இணைந்து வாழப்போகிறவர்களின் சொந்த விருப்பத்தைப் பற்றிக் கவலைப்படாத, “இவனைத்தான் உனக்கு நிச்சயித்திருக்கிறோம்,” என்றோ, ”இவளைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறோம்” என்றோ காட்டிவிட்டுக் கல்யாண மேடையில் ஏற்றப்படுகிற ஏற்பாட்டுத் திருமணத்தில், காதல் மணத்தின் சுதந்திரம் கிடையாது. எத்தனை லட்சம் செலவிட்டாலும், எவ்வளவு பகட்டான மண்டபத்தில் நடத்தினாலும் எப்பேற்பட்ட விருந்து வழங்கினாலும் அந்தச் சுதந்திரம் இல்லை. சொல்லப்போனால் முதலில் குறிப்பிட்ட சாதி, மதம் போன்ற, மானுடச் சுதந்திரத்தை ஒடுக்கிடும் பட்டிகளை மேலும் வலுவாகக் கட்டுகிற வேலையைத்தான் “பெரியோர் நிச்சயித்த வண்ணம்” நடத்தப்படும் ஏற்பாட்டுத் திருமணங்கள் செய்கின்றன. மிஞ்சி மிஞ்சிப் போனால், பெரியவர்கள் பார்த்துவைத்திருக்கிற இரண்டு பெண்களில் ஒருத்தியைத் தேர்ந்தெடுக்கிற சுதந்திரம் பையனுக்கு வழங்கப்படும். பெண்ணுக்கு அதுவும் இருக்காது.

“எதிலே சுதந்திரம்? காதல் திருமணத்திலா, பெரியோர் நிச்சயித்த திருமணத்திலா,” என்ற பட்டிமன்றத்தில் ஏற்பாட்டுத் திருமணத்தில் ஏன் சுதந்திரமில்லை என்பதற்கான வாதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வாதங்களை அடுக்குகிற வேளையிலேயே, காதல் திருமணங்கள் எல்லாமே முழுச் சுதந்திரத்தோடுதான் அமைகின்றனவா என்ற கேள்வி புறப்படுகிறது.

காதலில் மையமாக, ஒருவர் தனது வாழ்க்கை இணையைத் தானே தேர்வு செய்ய முடியும், அதை மற்றவரிடம் முன்மொழிய முடியும், தன்னிடம் முன்மொழியப்பட்டதை ஏற்க முடியும் அல்லது மறுக்க முடியும் என்ற அடிப்படையான சுதந்திரம் இருப்பது உண்மை. அதிலேயும் கூட, “நீ மறுத்தால் அமிலம் வீசுவேன்” என்ற கொலைகார மிரட்டலோ, “என்னோடு வரவில்லையானால் தூக்கில் தொங்குவேன்” என்ற தற்கொலைகார அச்சுறுத்தலோ வருகிறது! பெண்ணோ, ஆணோ தனது சொந்த விருப்பமும் சேராமல் இப்படிப்பட்ட கொலை/தற்கொலை அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து காதல் முன்மொழிவை ஏற்றுக்கொண்டுவிடுவார்களா? அப்படி ஏற்கிறவர்கள் இருப்பார்களானால் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்று ஊகிக்கலாம். அப்படியான கட்டாயத்துக்கு உட்பட்டு ஏற்பது காதலாகுமா என்று கட்டாயப்படுத்தியவர், கட்டாயப்படுத்தப்பட்டவர் இருவரையுமே கேட்கலாம்.

நான் தலையிட வேண்டிவந்த காதல் பிரச்சனைகளில் பெரும்பாலானவை பெற்றோர்கள் இந்தச் சுதந்திரத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்ற புகார்கள்தான். அவர்களது தடையாணைக்குக் காரணமாக இருப்பது பெரும்பாலும் சாதி, மதம், பணம் ஆகியவைதான். “நம் சாதி/மதத்துக்குள்ளேயே யாரையாவது லவ் பண்ண வேண்டியதுதானே என்று பிள்ளைகளைக் கேட்கிற பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன்!

காதலை அங்கீகரிக்கிற பெற்றோர்கள் விதிக்கிற நிபந்தனைகள் இன்னும் மோசம். தங்கள் மகளின் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டிய முற்போக்கான பெற்றோர், காதலர்கள் இருவரையும் வரவழைத்துப் பேசினார்கள். எப்போது, எங்கே திருமண நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்று ஆலோசித்தார்கள். பையனின் பெற்றோரையும் வீட்டுக்கு வர அழைப்பு விடுத்து, விருந்தளித்து மகிழ்ந்தார்கள். இறுதியில், “சாதி, வேலை எல்லாத்திலேயும் விட்டுக்கொடுத்து இறங்கிவந்துட்டோம்… ஒரே ஒரு விசயத்திலே மட்டும் எங்க விருப்பத்திற்கு நீங்க இறங்கி வாங்க,” என்றார்கள். என்னவென்று விசாரித்தால், தங்களுடைய குடும்ப வழமைப்படியான திருமணச் சடங்குகளைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள்.

பையனின் பெற்றோர், “எங்க சொந்தத்திலேயே வசதியான இடங்கள்ல பொண்ணுக இருக்காங்க. நகை நட்டும் நெறையா செய்வாங்க. அதையெல்லாம் விட்டுட்டு, பையன் ஆசைப்பட்டதாலே இதுக்கு சம்மதிக்கிறோம். அதனால சடங்கு விசயத்திலேயாவது எங்க முறைப்படி நடக்கட்டும்,” என்று பிடிவாதமாக நின்றார்கள். பெண்ணின் பெற்றோர் விருப்பப்படி திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

சடங்கு மறுப்புத் திருமணமாகவும் நடத்திக்கொள்ள விரும்பிய இளம் இணையர் இருவரும் மிகுந்த ஏமாற்றமடைந்தார்கள். குறிப்பாக தாலி கட்டிக்கொள்ளத்தான் வேண்டுமா என்று பெண் கேட்டாள். “நம்புகிறவர்களுக்குத்தானம்மா சடங்குகளும் சடங்குகளின் அர்த்தங்களும் ஆழமானவை. நம்பாதவர்களுக்கு அவையெல்லாம் ஒன்றுமில்லை. தாலி அவர்களுக்குப் புனிதமானது மட்டுமல்ல, அது ஒரு முக்கியமான சமூக அடையாளம். தங்களுடைய சாதி வட்டத்திற்கு வெளியே பெண்ணோ பையனோ போய்விடாமல் கட்டி வைத்திருக்கிறோம் என்று காட்டுகிற அடையாளம். நமக்கோ அது வெறும் கயிறு. அந்தக் கயிறு கழுத்தில் தொங்கினாலும் தொங்காவிட்டாலும் அது எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. திருமண நிகழ்வை எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு முற்போக்காக நடத்த முயற்சி செய்ய வேண்டும். அதே வேளையில், அதைப் போலவே இதுவும் சடங்காகிவிடக்கூடாது. எல்லாவற்றையும் விட, திருமண நிகழ்வு என்ற காட்சியை முற்போக்காக அமைப்பது முக்கியமா, திருமணத்திற்குப் பின் உங்கள் வாழ்க்கையை முற்போக்காக நடத்துவது முக்கியமா?…,” என்று கேட்டேன்.

மற்றவற்றில் எல்லாம் விட்டுக்கொடுத்த பெற்றோர்களுக்காக இதிலே விட்டுக்கொடுப்பது என்று முடிவாயிற்று. குடும்பத்தில் எந்தப் பிரச்சனை வந்தாலும் இருவருமாக உட்கார்ந்து பேசி தீர்வு காண்பது, ஒருவர் கருத்தை மற்றவர் மதிப்பது, வழிபாடுகளோ வேறு சடங்குகளோ இல்லாமல் அழகான, அமைதியான இல்லறத்தைக் கொண்டுசெல்வது என்று ஒரு முன்னுதாரணமாகக் காட்டத்தக்க இணையராக அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். “மேரேஜ் நடந்த அன்னிக்கு அந்தச் சடங்குகள் எல்லாம் நெர்வஸா இருந்துச்சு. இப்ப நினைச்சுப் பார்த்தால் வேடிக்கையா இருக்கு,” என்று, வீட்டுக்கு வருவோரிடம் ஆல்பத்தைக் காட்டியபடி சொல்கிறாள் பெண்.

பையனின் காதலை ஏற்ற பெற்றோர் வேறு விதமான நிபந்தனை விதித்த சிக்கல் ஒன்றிலும் தலையிடும் சூழல் ஏற்பட்டது. பெண்ணின் சாதி, தந்தையின் தொழில், உடன் பிறந்தார் என்ன செய்கிறார்கள் என்பதையெல்லாம் பெரிதுபடுத்தாத பெற்றோர், “ஆனால் பெண்ணுக்கு அவர்கள் என்ன நகை நட்டு செய்து போடுவார்கள்? குறைந்தது இத்தனை பவுனில் செயின், மோதிரம், மூக்குத்தி, தோடு எல்லாம் போட்டு அனுப்பணும். ரொக்கமெல்லாம் தர வேண்டாம், ஆனால் கல்யாணச் செலவை அவங்கதான் ஏத்துக்கிடணும். நம்ம செலவுல ரிசப்ஷன் வைச்சுக்கலாம்,” என்றொரு “பெருந்தன்மையான” நிபந்தனை விதித்தார்கள். எப்படியாவது திருமணம் நடந்துவிட வேண்டும் என்று எண்ணினார்கள் காதலர்கள். இதற்கு முன் குறிப்பிட்ட இணையர் சந்திக்க நேர்ந்த திருமணச் சடங்கு நிபந்தனை விவகாரத்தை நான் எப்படிக் கையாண்டேன் என்பது தெரிந்தவர்களான இருவரும் என்னிடம் வந்தார்கள். “சடங்கு ஒன்றுமில்லாத கற்பனை. ஒரு சமரசத்திற்காக அதைச் செய்வதால், கற்பனைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால், நகையும் பணமும் கற்பனையில்லை. உண்மையாக இருக்கும் பொருள்கள். உண்மைப் பொருள்கள் என்பதால் பாதிப்புகளும் உண்மையானவை. எந்தக் காரணத்திற்காகவும் நகையையும் பணச்செலவையும் கட்டாயப்படுத்துவது வரதட்சனை கேட்பது போலத்தான்,” என்று இருவரிடமும் சொன்னேன். “இதை எதிர்த்து உன் பெற்றோரிடம் நீ கடைசிவரையில் உறுதியாக வாதாட வேண்டும், இந்த மாதிரியான வரதட்சனையை ஏற்றால் உன் மீதான மரியாதையே போய்விடும் என்று எடுத்துச்சொல்ல வேண்டும்,” என்று காதலனிடம் சொன்னேன்.

மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்ட பிறகு, முற்போக்குச் சிந்தனையாளர்கள் முன்னிலையில் இருவரது பெற்றோர்களும் உற்றார்களும் பங்கேற்க திருமண நிகழ்வு நடந்தேறியது. இன்று பேத்தியை யார் கொஞ்சுவது என்பதில்தான் இருவரது பெற்றோர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடக்கிறது. யாரும் தலையிடத் தேவையின்றியே அது செட்டில் ஆகிறது!

பொதுவாகவே இதுபோன்ற காதல் உறவுகளில் பெற்றோர் ஒப்புதலைப் பெறுவதாகட்டும், பெற்றோர் விதிக்கும் நிபந்தனையைக் கையாளுவதாகட்டும், பெண்களை விட ஆண்கள்தான் உறுதியோடு செயல்படாதவர்களாக இருக்கிறார்கள். தற்போதைய சமூக ஏற்பாட்டில் பெண்தான் பெற்றோரைப் பிரிந்து புகுந்தவீடு செல்ல வேண்டியவளாக இருக்கிறாள் என்பதால், பெண்ணுக்குத் தன்னுடைய பெற்றோரிடம் வாதாடுகிற துணிவு எளிதாக வந்துவிடுகிறதோ?

சமூக மாற்றங்களுடன் சிறிதும் ஒத்திசைந்து வர முடியாதவர்களாகக் கெடுபிடிகளை விதிக்கிற பெற்றோர்களின் நிழல் தேவையில்லை என்று காதல் இணையர் இருவரும் முடிவு செய்கிறார்கள் என்றால், வாதாடல்களுக்கும் விட்டுக்கொடுத்தல்களுக்கும் தேவையில்லைதான். ஆனால் பெற்றோர், உடன் பிறந்தார், உற்றாரின் அரவணைப்போடு வாழ நினைக்கிறவர்களுக்கு இப்படிப்பட்ட அணுகுமுறைகள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன.

சாதி நிபந்தனை தொடர்பாக என்னிடம் வந்த இன்னொரு பிரச்சனை அரிதானது, சுவையானது. சிறு வயதிலிருந்தே என்னோடு பழகிவருபவளான தொலைபேசியில் அழைத்தாள். முற்போக்கான கொள்கைகள் உள்ள நண்பரின் மகளான அவளுடைய காதலுக்கு எந்தத் தடையும் இல்லை. திருமணப் பேச்சுவார்த்தை தொடங்கியிருந்தது. “அப்பா, நீங்க கொடுத்த தைரியத்திலேதானே நான் அவனை லவ் பண்ண ஆரம்பிச்சேன்?  உங்களோட அட்வைஸ் கேட்டுதானே அப்பாவும் எங்க லவ்வுக்கு சம்மதம் தெரிவிச்சார்? இப்ப திடீர்னு முடியாதுங்கிறாரு. உடனே வீட்டுக்கு வாங்க,” என்று ஆணையிட்டாள். போய் விசாரித்தபோது நண்பர் கூறிய பிரச்சனையைக் கேட்டு உறைந்து போனேன். அவருடைய துணைவியாரும் தலையில் அடித்துக்கொண்டார்.

“சாதி மறுப்புக் கல்யாணத்தைத்தான் நான் ஆதரிக்கிறேன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும்தானே? இப்ப விசாரிச்சா, இவளோட லவ்வர் எங்க கேஸ்ட்டுதானாம்! இப்படி ஒரே சாதியிலே மேரேஜ் பண்ணிக்கிடுறதுக்காகவா இவளோட லவ்வை ஆதரிச்சேன்?”

திகைப்பிலிருந்து விடுபட்டு, “வேறு சாதி என்பதால் பிள்ளைகளின் காதலை அங்கீகரிக்க மறுக்கிறதுல எந்த அளவுக்கு மனிதத்தன்மை இல்லையோ, அதே அளவுக்கு ஒரே சாதி என்பதால் காதலை அங்கீகரிக்க மறுக்கிறதுலேயும் மனிதத்தன்மை இல்லை,” என்று நீண்ட நேரம் எடுத்துச்சொல்லி, அவரை ஏற்கவைத்தது மறக்கமுடியாத அனுபவம். காதல் இணைகள் பழகத் தொடங்குகிறபோது அவரவர் சாதியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு காதலிப்பதில்லை. இயல்பாகவே வேறு வேறு சாதியினராக இருந்துவிட்டால் மகிழ்ச்சிக்குரியது. தற்செயலாய் ஒரே சாதியினர் என்றாலும் காதல் ஆதரவுக்குரியது. தன் சாதி என்பதாலேயே மறுப்பதென்பதும் சாதி பார்ப்பதாகிவிடும்!

திருமணத்திற்குப் பிறகு, பிள்ளைகளுக்குப் பெரும்பாலும் ஆணின் சாதியே அடையாளப்படுத்தப்படுகிறது. பெண்ணின் அடையாளம் இவ்விதமாகவும் மறைக்கப்படுவதாகிறது. அரிதாகப் பெண்ணின் சாதியை அடையாளப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படியொரு அடையாளப்படுத்தல் நடந்தபோது, “புள்ளைக்கு இட ஒதுக்கீடு சலுகையைப் பெறுவதற்காகப் பொண்டாட்டியோட சாதியைப் பதிவு செய்றாங்க” என்று பிரச்சனை கிளப்பினார் ஒருவர். சட்டத்திலேயே அந்தப் பாதுகாப்பு இருப்பதையும், இட ஒதுக்கீடு ஒரு சலுகை அல்ல, அது ஒரு உரிமை என்பதையும் அவருக்கு விளக்கினார்கள் தோழர்கள்.

காதல் மண இணையர்கள்தான் என்றாலும், பெரும்பாலானவர்களிடையே குடும்பத்திற்கான முடிவுகள் எடுப்பதில் ஆணாதிக்கப்போக்குதான் நிலவுகிறது. தன்னையும் கலந்தலோசித்தே முடிவெடுக்க வேண்டும் என்று காதல் மனைவி வலியுறுத்தத் தொடங்கிடும்போது கசப்புணர்வுகளும் முளைவிடுகின்றன. கூட்டுச் சிந்தனை சார்ந்த குடும்ப ஜனநாயகம் பற்றிய உணர்விருந்தால், அந்தக் கசப்புணர்வுகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும், காதல் உணர்வு கட்டில்லாமல்  தொடர்ந்திருக்கும்.

காதல் மணம் செய்துகொண்டவர்களை உறவினர்கள் தங்கள் வீட்டு விழாக்களுக்கு அழைப்பதில்லை – இவர்களைப் பார்த்து தங்கள் பிள்ளைகளும் “கெட்டுப்போய்விடுவார்கள்” என்ற ”பாதுகாப்பு உணர்வு” காரணமாக!

இத்தகைய பல்வேறு நிலைமைகளும் நிகழ்வுகளும்தான் காதல் திருமணம் முழுச் சுதந்திரத்தோடு நடைபெறுகிறதா என்று கேட்க வைக்கிறது. இக்கேள்வியின் நோக்கம், காதல் திருமணத்திற்கும் ஏற்பாட்டுத் திருமணத்திற்கும் வேறுபாடில்லை, ஆகவே பெரியோர் நிச்சயித்த மணவாழ்வே மேலானது என்று பழைய தடத்திற்கு மாற்றுவதல்ல. காதலின் சுதந்திரத்தை மணவாழ்விலும் நிலைபெறச் செய்வதற்காகவே. இறக்கை வெட்டப்படாமல் கிளி சுதந்திரமாகப் பறக்கும் வெளியைத் திறந்துவிடுவதற்காகவே.