டிகைக்குத்தான் மானம்.. ஆணுக்கெல்லாம் கிடையாது..

டந்த சனிக்கிழமை இரவு டெல்லியிலிருந்து மும்பை வந்து தரையிறங்குகிறது விஸ்தரா பயணிகள் விமானம்.. சிலமணி நேரம்கழித்து ஒரு நடிகை ஸாய்ரா வாஸீம் சமூக வலைத்தளத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை போடுகிறார்..

உலக அளவில் பேசப்பட்ட அமீர்கானின் டங்கல் பட நடிகை என்பதால் விவகாரம் அடுத்த விநாடியே சூடுபிடித்தது..

அதாவது விமானத்தில் பின் சீட்டு நடுத்தர வயது நபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது நடிகையின் புகார்..

மறுநாள் இரவு, புகாருக்கு உள்ளான 42 வயது விகாஸ் சச்தேவா என்பவர் அவர் வீட்டில்வைத்து கைதுசெய்யப்படுகிறார். நடிகைக்கு பதினேழுவயதுதான் என்பதால், சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாஸ்கோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவாகிறது.. பின்னர் திங்கட் கிழமை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விகாஸ் ஆஜர்படுத்தப்படுகிறார்.

14 நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்கிறது காவல்துறை. ஆனால் இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடி கிடைக்கிறது..

இரண்டு நாட்கள் விசாரிக்கபட்ட விகாஸ் நீதிமன்ற காவலில்,  சிறையில் அடைக்கப்படுகிறார்.

நடிகை விஷயம் என்றவுடன் மும்பை காவல் துறை காட்டிய வேகத்தையும் விதத்தையும் கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் ஆடிப்போயிருக்கிறது..

‘’இளம் நடிகை.. சிறுபான்மை இனத்தவர் ..அதுவும் காஷ்மீர் மாநிலத்தவர் வேறு.. இதெல்லாம் போதாதா.. அதுதான் மும்பை போலீசுக்கு வேகம் பிச்சிகிச்சு’’ என்று விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்..

விவகாரத்தை விமானத்திலிருந்தே பார்ப்போம்.. தரையிறங்கும்போது பணிப்பெண்கள் உள்பட அனைவரும் சீல்ட் பெல்ட் அணிவது கட்டாயம்…. அப்படித்தான் பணிப்பெண்கள் நடமாடாமல் பெல்ட் அணிந்து உட்கார்ந்துகொண்டுள்ளனர். அப்போது நடிகை ஸாய்ரா லேசா சத்தம் போடுவதை பார்க்கிறார்கள்.. விமானம் தரையிறங்கும் பயங்கர இரைச்சலில் நடிகையின் சத்தம் பெரிதாக கேட்கவில்லை..இருப்பினும் பணிப்பெண்கள், விமானம் நிலைக்கு வந்ததும் நடிகையிடம் ஏதேனும் பிரச்சினையா,,அப்படி இருந்தால் புகார் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்..ஆனால் நடிகை ஒன்றுமில்லை என்கிறார்..நடிகையின் தாயாரும் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்..

இதன் பிறகுதான் இன்ஸ்ட்ராகிராமில் நடிகை அழுகிறார்.. உடனே வழக்கம்போல அவருக்கு ஆதரவாக ‘நெஞ்சை நக்குகிற’ கும்பல்கள் ஆவேசத்துடனும் உருக்கத்துடனும், ‘’ கொடியவனை உடனே தூக்கிலிடவேண்டும், நாட்டுக்கே அவமானம், ஆணாக பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன் சகோதரி..’’ என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

அப்புறமென்ன, போலீசுக்கும் ஆவேசம் பீறிட்டு கிளம்ப, உடனே தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்து விகாசை கைது செய்தார்கள்..

ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக உள்ள அவரை, கையில் விலங்கிட்டு, முகமூடி மாட்டி மிகப்பெரிய தீவிரவாதி ரேஞ்சுக்கு இழுத்துச்சென்றார்கள்.

விகாசின் மனைவி என்ன சொல்கிறார்.., ‘’என் கணவர் அப்படி நடந்திருக்கவே மாட்டார். 9 வயது மகளுக்கு தந்தையான அவருக்கு இவ்வளவு கீழ்த்தரமான புத்தி வந்ததே கிடையாது.. மலிவான விளம்பரத்திற்காக என் கணவன் மீது அந்த நடிகை பழிபோடுகிறார்..

சம்பவத்தன்று டெல்லியில் நெருங்கிய உறவினர் இறந்துபோன துக்க நிகழ்ச்சியில் அலைந்து திரிந்ததில் களைப்பானவர், விமானத்தில் ஏறியவுடன் தூங்கிவிட்டார். உடன் வந்த சக பயணியும் இதையேத்தான் சொல்கிறார்.. ஆனால் எந்த பேச்சையும் போலீஸ்காரர்கள் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை..என் கணவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராக கடுமையாக போராடுவேன்’’ என்கிறார்.

மானபங்கம் என்று நடிகை எதைச்சொல்கிறார்..பின் சீட்டில் அமர்ந்திருந்தவரின் கால் தன் மீது பட்டதாகவும், பின் சீட்டிலிருந்தவர் முன் சீட்டின் மீது கைகளை குவித்து தலை வைத்துக்கொண்டு தன் தன் கழுத்தை தடவியதாகவும் குற்றம் சொல்கிறார்.

விகாஸ் அசதியில், அப்படி காலை நீட்டிக்கொண்டு, முன் சீட்டில் தலைவைத்துக்கொண்டு உறங்கினார் என்று வைத்துக்கொள்வோம்..அல்லது நடிகை சொன்னா மாதிரியே சில்மிஷத்தில் ஈடுபட்டார் என்றும் வைத்துக்கொள்வோம்.

ஒருத்தர் அத்துமீறுகிறார் என்றால் நடிகை அங்கேயே எதிர்த்திருக்கவேண்டும். சரி சின்னப்பெண்(!) பயத்தில் என்ன செய்வது என்பது புரியாமல்போனால் பக்கத்து சீட்டிலேயே இருக்கும் தன் தாயிடமாவது சொல்லியிருக்கவேண்டும். அவர் உடனே கத்தி கூச்சல் போட்டு பிரச்சினையை வெளிக்கொண்டு வந்திருப்பார்.. பொதுவாக பேருந்து, ரயில்கள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் சீண்டல்களுக்கு ஆளாகும் பெண்கள், அங்கேயே ஆண்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.. இதுதான் உண்மையான தியரி..

ஆனால் விமானத்தில் வாயே திறக்காமல் பொறுமையின் சிகரங்களாக நடிகையும் தாயாரும் இருந்தது ஏன்?

அடுத்து,நடிகையாவது போலீசில் புகார் கொடுத்தாரா? அதுவும் கிடையாது.. சரி போகட்டும்.. காவல்துறையாவது புகாரை கேட்டுப்பெற்றதா? அதுவும் இல்லை..

சரி, நீதிமன்றத்தில் விகாசை ஆஜர்படுத்தியபோது மாஜிஸ்ட்ரேட்டாவது இதையெல்லாம் கேட்டாரா? கேட்கவில்லை என்றே சொல்கின்றன செய்திகள்..

காவல்துறை வழக்கு பதிவுசெய்தால், நீதிமன்றம் ரிமாண்ட் செய்யும்..வேறு எதுவாக இருந்தாலும் பின்னாடிதான்.. இரு கைகளே இல்லாதவன் கட்டிப்பிடித்து கதறக்கதற பலாத்காரம் செய்தான் என்று கொண்டுபோனாலும், உடனே ரிமாண்ட்தான்.

உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களைவிட மிக முக்கியமான இடம் கீழமை நீதிமன்றங்கள்தான்.. அடிப்படை ஆதாரமே இல்லாதவையெல்லாம் வழக்காகி, கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்குவதற்கு காரணமே, இந்த எந்திரத்தனம்தான்.

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டாலும், ஒருத்தரை நீதிமன்ற காவலில் வைக்கும் அளவுக்கு கொஞ்சமாவது முகாந்திரம் இருக்கிறதா என்று சித்தாந்த ரீதியாக அல்ல, ஆவணங்கள் அடிப்படையில்கூட பரிசீலித்து பார்க்கிறார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது..

உலக அளவில் பொதுவாக, பாலியல் புகார் என்றால், முதலில் புகார் உண்மையா, இடம், காலம், சந்தர்ப்பம் இவையெல்லாம் பொருந்துகிறதா என ஆராய்வார்கள்.. பின்னரே எதிரியிடம் விசாரணை போகும்.. சந்தர்ப்ப சாட்சியங்களையும் விசாரிப்பார்கள்..

கடைசியில், வலுவாக ஆதாரங்கள்  சுட்டிக்காட்டும்போதுதான், கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்புவார்கள்..

ஆனால், இங்கே நடிகை அழுதவுடனேயே, ஒருத்தருக்கு உடனே சிறை..

இப்போது இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது தெரியுமா?  விமானத்தில் அப்படியெதுவும் நடந்து புகார் ஆனதாக விமான ஊழியர்கள் ரிப்போர்ட் செய்யவில்லை என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தேசிய பெண்கள் நல ஆணையத்திற்கும் விஸ்தரா விமான நிறுவனம் இருபக்க விளக்கக் கடிதம் அளித்துள்ளது..

நடிகைக்கு பதினேழு வயது ஆவதால், அவர் சிறுமி.. அதனால் எளிதில் ஜாமீனில் வெளியே வரமுடியாத பாஸ்கோ சட்டம் பாய்கிறது. ஆனால் இதுபோன்ற சிறுமிகள் சினிமாவில் எப்படி தோன்றுகிறார்கள் என்பதெல்லாம் ஆராய்வது இங்கே தேவையில்லாத வேலை.. இப்போது கூட சமூக வலைத்தளத்தில் ஓவென்று கதறிய நடிகை, விவகாரம் எந்த அளவுக்கு போயிருக்கிறது என்பதைக்கூட தெரிந்துகொள்ளாமல் ஷுட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார் என்பது சிறப்பான தகவல்

எதிர்காலத்தில் விகாஸ் என்ற தனியார் நிறுவன அதிகாரி மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் தண்டனைக்குரியவர்தான்..

ஆனால் நிராபராதி என்பது அம்பலமானால்.. அவர் இதுவரை பெற்ற வலிகளுக்கும் அவமானங்களுக்கும் நடிகை தரப்பிலிருந்து நஷ்ட ஈட்டை பெற்றுத்தந்தே தீரவேண்டும்.. சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீதும் நடவடிக்கை அவசியம் வேண்டும்,,

பொய்புகார் அளித்து ஒரு கண்ணியமிக்க குடும்பத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்கு நடிகையை சட்டப்படி தண்டித்தே ஆகவேண்டும்.. அப்போதுதான் பொய்புகாரில் சிக்கவைக்கத்துடிக்கும் பெண்களுக்கு அது ஒரு பாடமாக அமையும்.. மாறாக பெண்களின் பொய் புகார்களை தலைமேல் வைத்து கொண்டாடினால், பொது இடங்களில் அவர்களின் அருகே நடமாடக்கூட ஆண்கள் விரும்பமாட்டார்கள்.. ‘’இதுங்க கிட்ட நமக்கு ஏன் வீண் வம்பு?’’ என்ற மனோபாவமே மேலோங்கும்..

பொதுவாக விமான பயணம் மேற்கொள்ளும் உயர்தட்டு பணக்கார வர்க்கத்தை சேர்ந்த பெண்களில் பெரும்பாலானோர் மேக்கப் போட்ட நடிகைகளைவிட இயல்பிலேயே அழகாக இருப்பார்கள்.. ஆனால் அவர்களுக்கெல்லாம் நேராத, பாலியல் சீண்டல்கள், இந்த நடிகைகளுக்கு மட்டும் குறிப்பா எப்படி ‘ஏற்படுகிறது’ என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன்