லிவிங் டுகெதர்:

ஒரு தீர்ப்புத் துடுப்பின் சிந்தனை அலைகள்

 

சிறப்புக் கட்டுரை : அ. குமரேசன்

முற்போக்கானதொரு மாற்றம் பொதுச் சமூகத்தால் ஏற்கப்பட்டு நிலைபெற வேண்டுமானால் அது பற்றிய விவாதங்கள் பரவலாக நடைபெற வேண்டும். நமது நாட்டில் பல நல்ல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் நீதிமன்றங்களால் பல சிறப்பான தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன ஆனால் அவற்றின் மீதான பொது விவாதங்கள் பரவலாக நடத்தப்பட்டதில்லை என்பதாலேயே அவை சட்டப்புத்தகத்தில் மட்டுமே இடம்பெற்றவையாக, தீர்ப்பு பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளாகவே நீடிக்கின்றனவேயன்றி, அந்தச் சட்டங்களின்/தீர்ப்புகளின் நோக்கம் இன்னும் நிறைவேறாமலே இருக்கிறது. அக்கறையுள்ள சிலரால் மட்டுமே அந்தச் சட்டங்களும் தீர்ப்புகளும் கையாளப்படுகின்றன. பொது வெளிக்கு வராததாலேயே, அந்தச் சட்டங்களின் தேவைகள் பற்றியும் தீர்ப்புகளின் முக்கியத்துவம் பற்றியும் பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாமல் போய்விடுவதாலேயே, குறிப்பிட்ட சட்டங்கள் எந்தக் குற்றங்களைத் தடுக்கக் கொண்டுவரப்பட்டனவோ அந்தக் குற்றங்கள் தொடர்கின்றன. எந்த மாற்றங்கள் நிகழ்வதற்காகத் தீர்ப்புகள் வழங்கப்பட்டனவோ அந்த மாற்றங்கள் நிகழாமலே போய்விடுகின்றன. சில வேளைகளில் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்கிற வேலைகளும் நடக்கின்றன (எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்கிற வேலையை உச்சநீதிமன்றமே செய்யவில்லையா?).

அப்படிப் பொதுச் சமுதாய விவாதத்திற்கு வராமலே கடத்தப்பட்டிருப்பதுதான், குழந்தைப் பருவத்தைத் தாண்டிய இருவர் திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்வது (லிவிங் டுகெதர்) குற்றமல்ல என்று மே 6 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு. கேரளத்தைச் சேர்ந்த துஷாரா – நந்தகுமார் இணை இவ்வாறு இணைந்து வாழத் தொடங்கியவர்கள்தான். திருமணச் சட்டத்தின்படி பெண்ணின் திருமணத் தகுதி வயது 18. ஆணின் திருமணத் தகுதி வயது 21. நந்தகுமார் இந்த மே மாதம் 30 அன்றுதான் 21 வயதைத் தொடுகிறார். ஆகவே இவர்களது உறவு செல்லாது என்று அறிவித்து, மகளைத் தன்னோடு அனுப்ப வேண்டும் என்று துஷாராவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவர் விரும்பிய தீர்ப்பை அளித்தது உயர்நீதிமன்றம். தோல்வியெனச் சுருண்டுவிடாத நந்தகுமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணையில்தான் இந்தத் தீர்ப்பு.

வயது வந்த இணையர் திருமணச் சடங்கு செய்துகொள்ளாமல் இணைந்து வாழ உரிமை உண்டு என்றும், திருமண வயதை அடையாமலே கூட அவ்வாறு வாழலாம் என்று தெளிவுபடுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். சிக்ரி, அசோக் பூஷன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். இது செய்தியாக வந்ததற்கப்பால் ஏன் விவாதப் பொருளாகவில்லை? பத்திரிகைகளிலோ தொலைக்காட்சிகளிலோ ஏன் தீர்ப்பை ஆதரித்தும் எதிர்த்தும் விவாதிப்பதற்கு மனித உரிமைக் களத்தில் செயல்படுவோர், மத போதனைகளை வலியுறுத்துவோர், சட்ட வல்லுநர்கள், சமூக அக்கறையாளர்கள் அழைக்கப்படவில்லை? அரசியல், சமூகக் களங்களில் துணிவோடு இயங்குவோர், முற்போக்குக் கருத்துத் தளங்களில் உறுதியோடு பயணிப்போர் ஆகியோரும் கூட இதை ஆதரித்துப் பேசவில்லையே (அவர்கள் இதை வெளிப்படையாக எதிர்க்கவில்லை என்பது மட்டுமே ஆறுதல்).

இந்தத் தயக்கத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கக்கூடும். அவர்களுக்கே இத்தீர்ப்புடன் முழு உடன்பாடு இல்லாதிருக்கக்கூடும். ஆதரவாகப் பேசினால் தங்களைப் பற்றிய “தவறான” கருத்து ஏற்பட்டு விடலாம் என்று அஞ்சக்கூடும். மரபில் ஊறிப்போனவர்களின் கடும் விமர்சனங்களுக்கும் வசவுகளுக்கும் உள்ளாக நேரிடுமே என்று கவலைப்படக்கூடும். இதற்கு ஆதரவு பெருகுமானால் சமூக ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று கலங்கக்கூடும். மொத்த மக்கள்தொகையில் மிக மிகக் குறைவானவர்களே இந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் என்பதால், அவர்களுக்காகக் குரல் கொடுப்பது தேவையற்றது என்ற எண்ணமும் இருக்கக்கூடும்.

எதிர்வினைகள் பற்றிய அவர்களது அச்சத்தில் நியாயம் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மணமாகாமல் இணைந்து வாழ்தல் பற்றி ‘மக்கள் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு விவாதத்தில் நான் கூறிய கருத்துகளைத் தொகுத்து முகநூலில் பதிவு செய்திருந்தேன். அப்போதும் சரி, இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுப் பதிவு செய்தபோதும் சரி அதற்கு ஆதரவளித்தவர்கள் வெறும் ‘லைக்’ அடையாளத்தோடு நின்றுகொள்ள, எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் வரிந்துகட்டிக்கொண்டு வார்த்தைச் சண்டைக்கு வந்தார்கள். ஒருவர், “இனி இவருடைய வீட்டுப் பெண்களுக்கு ஜாலிதான்” என்று குறிப்பிட்டிருந்தார். கலப்புத் திருமணம் போன்றவற்றிற்கு ஆதரவு தெரிவித்துக் கருத்துத் தெரிவிக்கிற நேரங்களிலும் இப்படித்தான், “உன் மகள் வேறு சாதிக்காரனோடு ஓடிப்போக அனுமதிப்பாயா, நீ அப்பாவா, மாமாவா,” என்றெல்லாம் நாகரிகமாக வாதிப்பவர்கள் உண்டு.

இவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுப்பதற்காகவேனும் எங்களுக்குப் பெண்கள் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் வருகிறது. என் வீட்டுப் பெண்கள் இப்படியொரு வாழ்க்கையைத் தேர்வு செய்தால் அதை மனமுவந்து ஆதரிப்பேன் என்று சொல்லத்தான் முடிகிறது, நடைமுறைப்படுத்திக்காட்ட மகள்கள் இல்லையே! இப்படியான மனச்சொறி நோயாளிகளை விட்டுவிட்டு, உண்மையிலேயே அக்கறையோடும் உண்மையான கவலையோடும் மற்றவர்கள் எழுப்புகிற வினாக்களுக்கு விடையளிக்கலாம்.

வினாக்களும் விடைகளும்

எல்லோரும் இப்படி மணமுடிக்காமல் சேர்ந்து வாழ முடிவு செய்தால் சமூக ஒழுங்கு என்னவாகும் என்பது பொதுவாக வைக்கப்படும் கேள்வி. எல்லாச் சமுதாயங்களிலும் மிக வலிமையான பெரும்பான்மை நடைமுறையாக இருப்பது மணமுடித்து வாழ்கிற வாழ்க்கைதான். அவர்களோடு ஒப்பிட்டால் இவ்வாறு மணமுடிக்காமல் சேர்ந்து வாழ்கிறவர்கள் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமானது. இவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவருவது சிரமம்தான். ஏனெனில், தங்களுக்கு உரிய சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் பலர் அதை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் யாரும் தங்களுடைய முடிவுதான் சரியானது என்றோ, எல்லோருமே இப்படி மணமாகாமல் சேர்ந்து வாழ்கிற முறைக்கு மாற வேண்டும் என்றோ வலியுறுத்தவில்லை. “நாங்கள் தேர்வு செய்த முறையில் வாழ விடுங்கள், போதும்,” என்றுதான் கோருகிறார்கள். ஆனால், பெரும்பான்மையின் பெயரால், மணச்சடங்குக்குப் பிந்தைய வாழ்க்கையை மற்றவர்கள்தான் இவர்கள் மீது திணிக்கிறார்கள். அதை ஏற்காதவர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகச் சித்தரித்து, இவர்களுக்குரிய சமூக மதிப்புக் கிடைக்க விடாமல் தடுக்கிறார்கள். மற்றவர்களின் வாழ்க்கையில் குறுக்கிடாத இவர்களின் வாழ்க்கை எப்படி சமூகக் கேடாகும் என்று சிந்திப்பதற்கு யாரும் தயாராக இல்லை.

இப்படிச் சேர்ந்து வாழ்கிறவர்கள் பிரிய நேரிட்டால், இவர்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளின் கதி என்னவாகும் என்பது அடுத்த கேள்வி. நாள் நட்சத்திரம் பார்த்து, எல்லாச் சடங்குகளும் செய்து, உற்றார் உறவினர் முன்னிலையில், புரோகிதரோ, மௌல்வியோ, பாதிரியாரோ வேறு மதங்களின் குருமார்களோ நடத்தி வைக்கிற திருமணங்களால் ஏற்படும் உறவுகள் முறியுமானால், அந்தக் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு என்ன நிலைமை ஏற்படுமோ அதே நிலைமைதான் இந்தக் குழந்தைகளுக்கும். இத்தகைய குழந்தைகளுக்கான கவனிப்புப் பொறுப்பு பற்றிய சட்ட விதிகள் இருக்கின்றன. ஏதோவொரு சூழலில் இவ்வாறு தற்காலிகமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ முடிவு செய்கிறவர்கள், குழந்தை பெற்றுக்கொள்கிற அளவுக்குப் போவதில்லை என்பது ஒருபுறமிருக்க, குழந்தை பெற்றுக்கொண்ட பின்னரும் கூட, திருமணச் சடங்குக்குள் வராமல் கடைசிவரையில் இணைந்து வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பது மறுபுறமிருக்கிறது. குழந்தை பெற்றுக்கொண்டோ, அதைத் தவிர்த்தோ ஆயுளுக்கும் சேர்ந்திருக்கிற லிவிங் டுகெதர் இணைகளும் உண்டு.

பள்ளியில் சேர்ப்பது உள்பட குழந்தையின் பெயர் உட்படப் பதிவு செய்தாக வேண்டிய இடங்களில், பெற்றோர் இருவருமே தங்களது பெயர்களைக் கொடுக்கிறார்கள். இயல்பாகவே குழந்தைக்கு அம்மா, அப்பா இருவரது முதலெழுத்து அடையாளம் (இனிஷியல்) கிடைத்துவிடுகிறது. ஏற்பாட்டுத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளில் ஆகப்பெரும்பாலோனோருக்கு இன்னமும் தந்தையின் பெயர் முன்னெழுத்துதானே துருத்திக்கொண்டு நிற்கிறது! தாயின் அடையாளம் மறைக்கப்பட்டுவிடுகிறதே! பத்தாண்டுகளுக்கு முன், தாய், தந்தை இருவரது பெயர் முன்னெழுத்துகளும் குறிப்பிடப்பட வேண்டும் என்று மத்திய அரசிடமிருந்து ஒரு ஆணையே கூட வந்ததாக ஞாபகம். அது என்ன ஆயிற்று என்பது ஞாபகத்தில் இல்லை.

சட்டம் உண்டு, விதிகள் உண்டு

இவ்வாறு சேர்ந்து வாழ்கிறவர்களுக்கிடையே பிற்காலத்தில் சொத்து, உரிமை மீறல், கைவிடப்படுதல் போன்றவை தொடர்பான பிரச்சனைகள் வருமானால், அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான சட்ட விதிகளும்  ஏற்கெனவே இருக்கின்றன. மணச்சடங்கு இல்லாமலே ஒப்புதலின் பேரில் சேர்ந்து வாழ்வது திருமண வாழ்க்கையாகவே கருதப்படும் என்று இதற்கு முன்பே மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 2005ம் ஆண்டின் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், மணமாகா இணைந்த வாழ்க்கையை அங்கீகரிக்கிறது. அதில் பெண்களின் பாதுகாப்புக்கான விதிகள் இருக்கின்றன. எல்லாச் சட்டங்களையும் போலவே இந்தச் சட்டமும் மக்களுக்குத் தெரியாது, அவ்வளவுதான். ஆகவே இதைக் காரணம் காட்டி இவர்களின் உறவுக்குக் கத்தரி போடத் தேவையில்லை.

சேர்ந்து வாழ்வோரிடையே இயல்பாகவே ஒரு நட்புணர்வும் காதலும் செழித்திருக்கக் காணலாம். எதையும் கலந்து பேசி முடிவெடுக்கிற ஜனநாயகம் இருப்பதையும் காணலாம். யார் பெரிய ஆள், யார் சொல்வதை யார் கேட்க வேண்டும் என்ற ஆதிக்கத்திற்கோ, அதிகாரத்திற்கோ இடமில்லை. சொல்லப்போனால் பிரிவுக்கு இட்டுச் செல்லும் அளவுக்குப் பிணக்கு எப்போது ஏற்படும் என்றால், இருவரில் யாருக்காவது இந்த அதிகாரப் புத்தி தலைதூக்குகிறபோதுதான். பெரும்பாலும் அந்தப் புத்தி ஆணிடமிருந்தே புறப்படும் என்று ஊகிக்கலாம்.

ஒரு சினிமாக்கதை

இவர்களில் பலர், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அவ்வாறு முடிவெடுப்பதில், ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட பின்னணியும் இருக்கலாம், சமூகத்தின் வெறுப்புப் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியாத கெடுபிடியும் இருக்கலாம். தமிழில் ஒரு திரைப்படம் கூட வந்தது. மணிரத்தினம் இயக்கிய அந்தப் படத்தின் லிவிங் டுகெதர் இணையர் இறுதியில் திருமணம் செய்துகொள்வார்கள். சமூகத்தை இவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையைத்தான் அந்தப் படம் சொன்னதேயன்றி, சமூகம் இவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல முன்வரவில்லை. இறுதிவரையில் இணைந்து வாழ்வதைச் சொல்கிற திரைப்படம் ஏதாவது வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இருவரது பெற்றோர்களின் ஒப்புதலோடு, மண வாழ்க்கைக்கான ஒரு முன்னோட்டப் பயிற்சியாகச் சேர்ந்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். ஒருவரது நிறைகுறைகளை மற்றவர் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கிறது. அதிலே கசப்பு ஏற்பட்டால்? அதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், அப்படியான சூழல் ஏற்படுமானால், மணச் சடங்கைத் தவிர்க்கலாம், தவறில்லை. திருமணம் ஆனபிறகு இல்வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டு மண முறிவு பெறுவதில்லையா? அது போன்றதே இதுவும்.

மிகைக் கற்பனை வாதம்…

இன்னொரு வாதம், “சமூக அக்கறையோடு” முன்வைக்கப்படுகிறது. மரபை மீறி இந்த வாழ்க்கை முறையை அங்கீகரித்தால், எதிர்காலத்தில் இதுவே பொது மரபாகிவிடும், அப்போது தற்போதைய குடும்பக் கட்டமைப்புகள், பாதுகாப்புகள், கடமைப்பொறுப்புகள் எல்லாமே நொறுங்கிப்போகும், சமூகமே நிலைகுலைந்துபோகும் என்கிறார்கள். இது தேவையற்ற மிகைக் கற்பனை. இதுவரையில் இந்த வாழ்க்கையைத் தேர்வு செய்தவர்கள் மிக மிகக் குறைவானவர்கள்தான். இன்றளவும் இப்படி வாழ்கிறவர்கள் பற்றிக் கேள்விப்படுவது அரிதான, அப்படியா என்று வியக்கவைக்கிற தகவலாகவே இருக்கிறது. இங்கே மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் இதுவே நிலை. உலக அளவில் இவ்வாறு வாழ்கிறவர்கள் அதிகரிப்பது 70 சதவீதமாகியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. இயல்பானதாக ஏற்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் 900 சதவீதம் அதிகரித்திருக்கிறதாம். எண்ணிக்கையாகப் பார்த்தால் அங்கே கிட்டத்தட்ட 75 லட்சம் இணைகள் (தனி மனிதர்கள் என்ற கணக்கில் 150 லட்சம் பேர்) இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தவர்கள். அந்த நாட்டின் மக்கள்தொகையில் இது 4.2 சதவீதமே. அவர்களில் மிகப்பெரும்பாலோர் பின்னர் திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த லிவிங் டுகெதர் வாழ்க்கை திருமண உறவுக்கு எதிர்ப்புரை அல்ல, அதற்கான முன்னுரைதான் என்கிறார்கள். இந்தியாவில் இப்படிப்பட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறதா? அப்படியே நடத்தப்பட்டாலும் எத்தனை பேர் துணிவோடு அதை வெளிப்படுத்த முன்வருவார்கள்?

ஆயினும் பல்வேறு மட்டங்களில் இந்த வாழ்க்கை முறை இருக்கிறது. கிராமங்களில், எளிய பாட்டாளி மக்களிடையே இவ்வாறு வாழ்வோர் இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆகவே இவர்களின் எண்ணிக்கை பெருகிவிடும், இவர்கள் பெரும்பான்மையாகிவிடுவார்கள் என்ற “அச்சம்” தேவையில்லை. ஒரு வாதத்திற்காக இவர்கள் பெரும்பான்மையாகிவிடுவதாகவே வைத்துக்கொள்வோம், அப்போது என்ன செய்யலாம்? இப்போது முறைப்படி மணவாழ்க்கை வாழ்வோர் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களுடைய கட்டுப்பாடுகள் அந்தச் சிறுபான்மையினர் மீது விதிக்கப்படுவது போல, நாளை இவர்கள் பெரும்பான்மையாக இருப்பார்களானால் இவர்களுடைய கட்டுப்பாடுகளுக்கு சமூகம் தயாராக வேண்டியதுதான்!

கூடப்பிறக்காமலே அண்ணா, அக்கா?

குழந்தைகள் நலன், பெண்களின் பாதுகாப்பு என்றெல்லாம் எதிர்ப்புக்குக் காரணங்கள் கூறப்பட்டாலும், அடிப்படையான வெறுப்பு இந்த வாழ்க்கையை வெறும் கட்டிலறை உறவோடு மட்டுமே இணைத்துப் பார்ப்பதிலிருந்து வருவதுதான். ஆனால், பல்வேறு மனச்சுமைகள், குடும்பக் கட்டாயங்கள், சமூக அழுத்தங்களின் காரணமாக, மணவாழ்வைத் தொடர்கிற குடும்பங்கள் சிலவற்றில், அந்த வேலியைத் தாண்டிய உறவு ஏற்படுவது பற்றியும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் நிறையவே கேள்விப்படுகிறோம். ‘கள்ளக்காதல்’ என்று யோசனையே இல்லாமல் ஊடகங்கள் பெயர் சூட்டுகிற அந்த உறவுச் சிக்கல்களை விட, சேர்ந்து வாழும் இந்த உறவு நல்லதுதான்.

இதற்கு வன்மத்தோடு எதிர்ப்புத் தெரிவிக்கிறவர்கள், இன்றைய உலகமயப் பொருளாதார வேட்டைச் சூழலில், வேலை வாய்ப்புகளுக்காகப் பலரும் பல நாடுகளுக்கு, மற்ற மாநிலங்களுக்குத் தனி மனிதர்களாக விரட்டப்படுகிற முதலாளித்துவக் கெடுபிடிகள் பற்றிப் பேசுவதில்லை. கண்காணாத இடத்திற்குக் கடாசப்படுவதை ஏற்க மறுத்தால் வேலை நியமன ஒப்பந்தம் அப்போதே கிழித்தெறியப்பட்டுவிடும் என்ற நிலைமை பற்றிச் சிந்திப்பதும் இல்லை. இத்தகைய நெருக்கடிகளும் சேர்ந்துதான், குடும்பங்களைப் பிரிந்து எங்கோ வாழ்கிறவர்களை, நெருக்கமாகக் கவனித்துக்கொள்ள ஒரு மனித உறவு வேண்டியிருக்கிறது என்ற இயற்கைத் தேவையோடு சேர்ந்து, மணமுடிக்காமலே சேர்ந்து வாழும்படி ஒரே வீட்டிற்குள் குடியேற்றுகின்றன.

என்னுடைய கவலையெல்லாம் இப்படியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறவர்களின் மனங்களில் சாதி, மதம், இனம் என்ற பாகுபாடுகள் குடிபுகுந்து அவைகளும் லிவிங் டுகெதர் என்றாகிவிடக்கூடாதே என்பதுதான். ஒருவேளை இதெல்லாம் ஏற்கெனவே நுழைந்து இவர்களையும் ஆட்டுவித்துககொண்டுதான் இருக்கிறதா?

ஒரே பெற்றோருக்குப் பிறக்காமலே சகோதரர்களாக வாழ்வது ஏற்கப்படுகிறது. நண்பர்களின் குடும்பத்தாரை அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தங்கச்சி, அண்ணி என்று உரிமையோடு அழைக்க முடிகிறது. தந்தையின் நண்பரைப் பெரியப்பா அல்லது சித்தப்பா, அம்மாவின் தோழியைப் பெரியம்மா, சின்னம்மா என்று விளிக்க முடிகிறது. குடும்ப உறவல்லாத இவர்களோடு பல மடங்கு பாசத்துடன் பழகுவது ஏற்கப்படுகிறது, அதில் உள்ள ஒரு உயிர்ப்பான அழகு மதிக்கப்படுகிறது. மண உறவல்லாத சேர்ந்து வாழ்தலையும் ஏற்கிற சமூக மனநிலை உறுதிப்படுவதே இன்றைய நீதி.