சிறப்புக் கட்டுரை :  ஏழுமலை வெங்கடேசன்

ழகியவனாக இருந்தாலும் சரி, பழகாதவனாக இருந்தாலும் சரி.. ஒருத்தர் திடீரென ஆகாதவன் ஆகப்போய்விட்டால் அவனை எந்த அளவிற்கும் தரம் தாழ்த்திப் பேசி கேவலப்படுத்தி ஆனந்தப்படுவது மன விகாரங்களிலேயே டாப் ரகம்.

இத்தகையக டாப் ரக பேர்வழிகள்தான் அவரை, மலையாளி என்றார்கள், ஒல்லி பிச்சான் என்றார்கள்.. அட்டைக்கத்தி என்றார்கள் எல்லாவற்றிற்கும் மேலாக, கூச்சமே இல்லாமல் ஒன்பது என்றார்கள், அதுவும் புத்திர பாக்கியமே இல்லாத தலைவர்களின் தலைமைச்சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு..

வியப்பு என்னவென்றால் அவர் உயிரோடு இருந்தபோது மட்டுமல்ல, இறந்து முப்பதாண்டுகள் ஆன பிறகும் அவரை முன்னணி அரசியல் கட்சிகளின் மேடைகளில் எதிர் மறையாய் விமர்சிக்கக்கூட எவருக்கும் தைரியமில்லை.

தமிழக அரசியல் வரலாற்றில் அப்பேர்பட்ட மகத்தான சக்தியாய் மக்களின் மனதில் இன்றும் சாகாவரத்துடன் வாழ்கிறது எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம்..

சிறுவனாய் கஞ்சிக்கு வழியின்றி மூன்று நாள் பட்டினியுடன் உயிருக்கு போராடியதை மறக்கவே முடியாததால்தான், நாட்டையே ஆளும் நிலைக்கு வந்தபோது லட்சோப லட்சோப குழந்தைகள் பள்ளிகளில் பசியாற மதிய உணவு திட்டத்தை எம்ஜிஆரால் சீர்பட உருவாக்க முடிந்தது.. சத்துணவு தந்த சரித்திர நாயகன் என பார் முழுவம் புகழ் பரவியது.. கிராமப்புறங்களில் பள்ளிகளை எட்டிப்பார்க்கமுடியாத வறுமைசூழ் குடும்பத்து சிறுவர்-சிறுமியரெல்லாம் மதிய உணவுக்கு உத்தரவாதம் என்ற நிலை வந்தவுடன் கல்விக்கூடங்களை நோக்கி வர ஆரம்பித்தனர்.

ஒன்றாம் வகுப்பில் தேர்வான மாணவனுக்கும், தோல்வி என கீழே இறக்கிவிடப்பட்ட மாணவனுக்கும் இடையே அறிவில் அப்படியென்ன மலையளவு வித்தியாசம் கண்டீர்கள் என்று அவர் மனதில் உறுத்தியதன் விளைவுதான், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை அனைவரும் பாஸ் என்று அவரின் அரசு போட்ட ஆணை. ஃ

ஃபெயில் என்பது இல்லையென்று வந்தபிறகு, மக்குப்பிள்ளை மக்கு பிள்ளை என்று காரணம் காட்டி குழந்தைகளை பள்ளியைவிட்டு நிறுத்தும் படலம் விடைபெற்று ஓடிப்போனது. மக்குப்பிள்ளைகள், கால ஓட்டத்தில் கல்வியில் வேகம்பெற்று பட்டப்படிப்பை நோக்கி முன்னேற ஆரம்பித்தார்கள்.

பொறியியல் படிப்பு என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலகட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர். இன்றைக்கு தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் எஞ்சினியரிங் படிப்பு படிக்காத ஆளே இல்லை என்கிற அளவுக்கு அதிசயமான நிலைமை..

மலையாளி என்று திடீர் அரசியல் எதிரிகளால் விமர்ச்சிக்கப்பட்ட அவர்தான் மதுரையில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்.. தஞ்சையில் தமிழுக்கென்றே ஒரு பல்கலைக்கழகத்தையும் உருவாக்கினார்..ஏதோ அரசியல் ஆதாயங்களுக்காக இதை செய்தவர் அல்ல.

வயிற்றுப்பாட்டுக்காக எட்டுவயதில் நாடக மேடையேறி நடிக்க ஆரம்பித்த முதலே வசனத்தமிழை அழகழகாய் உச்சரிக்க பழகியவர் அவர். ஆசானும் நகைச்சுவை நடிகருமான காளி என்.ரத்தினத்திடம் சகல வித்தைகளும் கற்றுத் தேர்ந்த எம்.ஜி.ஆர், 1936-ல் சதிலீலாவதி படத்தில் அறிமுகமாகி பின்னாளில் ஏற்றம் பெற்றதெல்லலாம் அடுக்கடுக்காய் தமிழில் பேசிய வீர நடை வசனங்களால்தான்.

1950களில் இளங்கோவன், கருணாநிதி, கண்ணதாசன் போன்றோரின் வசனங்கள் எம்ஜிஆர் வாயிலிருந்து வெளிப்பட்டபோதெல்லாம் கிராமத்து டெண்ட் கொட்டகைகளிலும், நகரத்து திரையரங்குகளில் கைத்தட்டல்கள் அடங்க நெடுநேரம் பிடித்தது..

1952ல் திமுகவில் சேர்ந்தபிறகு, தமிழை நூல்களிலும் மேடைகளிலும் நாடகங்களிலும் கோலேச்ச செய்த சக அரசியல் தலைவர்கள் மத்தியில், திரையில் தமிழை மேம்படுத்தும் குறியீடுகளை தவறாமல் படத்துக்கு படம் இடம் பெறச்செய்தவர் எம்ஜிஆர்.

முதன்முதலில் தயாரித்து நடித்து இயக்கிய நாடோடி மன்னன் (1958) திரைப்படமே, ‘செந்தமிழே வணக்கம்’ என்று தொடங்கும் பாடலோடுத்தான் ஆரம்பிக்கும் அந்த அளவு தமிழை நேசித்தவர் எம்ஜிஆர்

உனக்கு எந்த நாடு என்று கேட்கப்படும் ஒரு கேள்விக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களின் சிறப்பம்சங்களையெல்லாம் விவரித்துவிட்டு, முத்தாய்ப்பாக தமிழ் மண்ணையும் கலை,இலக்கிய பண்பாட்டு பெருமைகளையும் ஒரே ஷாட்டில் தொடர்ந்து ஒன்றரை நிமிடம் பாய்ந்ததோடு அருவியாய் எம்ஜிஆர் பேசும் விதம்… விக்ரமாதித்தன் (1962) படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே அந்த திரையுலக பொக்கிஷம் பற்றி புரியவரும்…

எங்கள் தங்கம் படத்தில், எம்ஜிஆர் தங்கியிருக்கும் ஓட்டை ஒடிசல் பேருந்தை இது விறகு வண்டி என்று கிண்டலடிப்பார் ஜெயலலிதா. அதற்கு பதிலடி கொடுத்துபேசுவார் எம்ஜிஆர்..’’ ஆமாம் இது தமிழ் விரோத சக்திகளை எரிக்,க விறகை கொண்டாரும் வண்டி.. எனக்கு அப்படியொரு தமிழ் வெறி.. நான் சாகும்போதும் தமிழ் படித்து சாகவேண்டும்.. என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’’ என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வார். எம்ஜிஆர் படங்களில் தமிழ் வீச்சு என ஒரு புத்தகமே எழுதலாம்..

தமிழையும் இங்கிலீசையும் கலந்து வாழ்ந்த மேலைநாட்டு நாகரீக கோமான்கள் மத்தியில் அவர் தமிழனாகவே வாழ்ந்தவர். அவரின் ராமாவரம் தோட்டத்தில் வருடத்தில் அமர்க்களப்படும் ஒரு திருநாள் எதுவென்றால் அது பொங்கல் பண்டிகையாகத்தான் இருக்கும்.

வீட்டில் உலைவைத்துவிட்டு நம்பிக்கையோடு அரிசிக்காக எம்ஜிஅர் வீட்டுக்கு செல்லலாம் என மறைந்த நடிகர் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் உதிர்த்த வார்த்தைகள் எவ்வளவு சத்தியம் வாய்ந்தவை என்பது, வள்ளல் கையால் வாங்கி துயரை போக்கி கொண்டவர்களுக்கு மட்டுமே நூறு சதவீத மகிமை புரியும்..மற்றவர்களுக்கு அது ஒரு செய்தியாக மட்டுமே தெரியும்.

திரையில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்த அவர் அரசியலிலும் வாக்குகளை அள்ளும் அதிசயமாகமே மாறிப்போனார். ஜுலியஸ் சீசர் சொன்னானே, Veni, Vidi,Vici… அதாவது, வந்தேன்.. பார்த்தேன்.. வென்றேன்.. என்று..அதேபோல திரையுலகிலும், அரசியல் உலகிலும் எம்ஜிஆர் வந்தார், பார்த்தார், வென்றார்.

மிகப்பெரிய அவமானங்களை சந்தித்தபோதும் அவர் அசரவேயில்லை.. அல்லா மீது என்ற வசனத்தை பேசமறுத்து, அம்மா மீது ஆணை என்று அலிபாபாவும் நாற்பது திருடர்களும்(1956) படத்தில் பேசியதால் எம்ஜிஆர் இல்லாமலேயே, அவரிடம் சொல்லாமலேயே சில காட்சிகளை பிடித்து படத்தையே முடித்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் சுந்தரம்.

அதைவிடக்கொடுமை, எம்ஜிஆரின் முகத்தையும் பெயரையும் கூட போடாமல், பானுமதியை மட்டுமே முன்னிறுத்தி ரிலீஸ் விளம்பரத்தை கொடுத்தார்கள். ஒரு படத்தின் கதாநாயகனை அடையாளம் காட்டாமலேயே பட விளம்பரம் வந்து பெரிய அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டவர் எம்ஜிஆர்.

ஆனால் அலிபாபா வெள்ளிவிழா கொண்டாடிய அதே ஆண்டில் தாய்க்குப்பின் தாரம், மதுரை வீரன் என இரண்டு வெள்ளிவிழா படங்களை கொடுத்து அவமானத்தை துடைந்தெறிந்த துருவ நட்சத்திரமாய் ஜொலித்தவர் அவர்.

எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பேவா, குடியிருந்தகோவில், அடிமைப்பெண், ரிக்சாக்காரன், உரிமைக்குரல் என எவ்வளவு மெகா மெகா ஹிட் படங்கள்.. இன்றைக்கும் தொலைக்காட்சிகளுக்கு, நேயர்களை மறுபடியும் மறுபடியும் அனைத்து தலைமுறையினரையும் அள்ளிவரும் அட்சய பாத்திரங்கள்..

1972ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது மறுபடியும் திரை மொழியிலேயே எதிர்ப்பை காட்டியவர். இந்திய திரை வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக பட வெளியீட்டில் எவ்வளவு இடையூறு காண முடியுமோ அவ்வளவு இடையூறுகளை சந்தித்தது, அவரின் சொந்தப்படமான உலகம் சுற்றும் வாலிபன்..

ஆனால் அத்தனை தடைகளையும் தகர்ந்தெறிந்துவிட்டு, 1973 மே 11ந்தேதி தமிழக திரையரங்குகளில், நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று பாடலோடு தொடங்கிய உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ரசிகர்கள் ஆரவாரம், அசைக்கமுடியாத அரசியல் சக்தியாகவே உருவெடுத்துவிட்டது..

1987, டிசம்பர் 24ந்தேதி மறைகிற வரை வெற்றிச்சரித்திரத்தையும் வெற்றிப்படையையும் எம்ஜிஆர் வசமே இருக்கும்படியும் அது அச்சாரமிட்டுவிட்டுப்போனது.. மூன்று முறை முதலமைச்சர், பாரத ரத்னா, மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் என எத்தனையெத்தனையோ புகழ்மாலைகளை அவர் தோளில் சூடியது

அதனால்தான் இந்தியாவின் ஒரு மாநில முதலமைச்சர் மறைந்த செய்தி பல்வேறு வெளிநாட்டு பத்திரிகைகளில்கூட வெளியாகும் அளவுக்கு மக்கள்  செல்வாக்கு பெற்ற தலைவராக… கட்டுரையின் தலைப்பை மறுபடியும் படியுங்கள்..